Header Ads Widget

Doctor Vikatan: கர்ப்பிணிகள் ஹேர் டை உபயோகிக்கலாமா?

Doctor Vikatan: கர்ப்பமாக இருக்கும் போதும், தாய்ப்பால் ஊட்டும்போதும் ஹேர்டை உபயோகிக்கலாமா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி...

மருத்துவர் ஸ்ரீதேவி

கர்ப்ப காலத்தில் ஹேர் டை பயன்படுத்துவதால் பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்த தரவுகள் நம்மிடம் பெரிய அளவில் இல்லை. 'அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஆப்ஸ்டட்ரீஷியன்ஸ் அண்ட் கைனகாலஜிஸ்ட்ஸ்' என்ற அமைப்பு சொல்வதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கர்ப்ப காலத்தில் ஒருவர் உபயோகிக்கும் டை, பர்மனன்ட் வகை டை அல்லது செமி பர்மனன்ட் வகை என எதுவாக இருந்தாலும், அதில் சேர்க்கப்படுகிற கெமிக்கல்களின் அளவு குறைவுதான். ஒருவேளை அந்த ரசாயனங்கள் கர்ப்பிணியின் ரத்தத்தில் கலந்து, அதன் மூலம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்க வேண்டும் என்றால் அந்த ரசாயனங்களின் அளவு அதில் மிக அதிகமாக இருக்க வேண்டும். எனவே கர்ப்ப காலத்தில் ஹேர் டை உபயோகிப்பது பாதுகாப்பானதுதான்.

ஆனால், ஹேர் டை உபயோகிக்கும்போது உங்கள் மண்டைப்பகுதியில் புண்களோ, காயமோ இருந்து, அதன் மேல் டை படும்போது, அதன் வழியே கெமிக்கல்கள் ஊடுருவி, ரத்தத்தில் கலப்பது அதிகமாக இருக்கும். அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம்.

ஹேர் டை

டையில் உள்ள கெமிக்கல் எந்தளவுக்கு , நஞ்சுக்கொடி வழியே குழந்தையை அடைந்தால் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இன்னும் சரியாகத் தெரியாத விஷயமாகவே இருக்கிறது. பொதுவாக நாம் உபயோகிக்கும் ஹேர் டையில் உள்ள கெமிக்கல்கள், மண்டைப்பகுதி வழியே ரத்தத்தில் ஊடுருவி, கருவிலுள்ள குழந்தையை பாதிக்கும் அளவுக்கு இருப்பதில்லை.

ஆனாலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கர்ப்பிணிகள் பின்பற்றலாம். நீங்களாகவே உங்களுக்கு ஹேர் டை போட்டுக்கொள்ளப் போகிறீர்கள் என்றால் கைகளுக்கு கிளவுஸ் அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் சருமத்தில் டை படாமல் தவிர்க்க முடியும். நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ள அறைகளில் அமர்ந்தபடி ஹேர் டை பயன்படுத்துங்கள். அதிலிருந்து வெளியேறும் வாடையை நீங்கள் சுவாசிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.

ஹேர் டை பயன்படுத்தும்போது, மண்டைப்பகுதியில் படாமல் வெறும் முடிகளில் மட்டும் படும்படி கவனமாக உபயோகிப்பது பாதுகாப்பானது.

முடி

கர்ப்ப காலத்தில் அடிக்கடி ஹேர் டை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அதேபோல கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில்தான் கருவிலுள்ள குழந்தையின் உடல் உறுப்புகளின் பெரும்பாலான வளர்ச்சி இருக்கும் என்பதால் அந்த மூன்று மாதங்களில், ஹேர் டை பயன்பாட்டைத் தவிர்க்கலாம்.

ஹேர் டைக்கு மாற்றாக கெமிக்கல்கள் சேர்க்காத இயற்கையான ஹென்னா பயன்படுத்தலாம். மேற்குறிப்பிட்ட அத்தனை விஷயங்களும் கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல, தாய்ப்பால் ஊட்டும் காலத்துக்கும் பொருந்தும். நீங்கள் உபயோகிக்கும் டை பாக்கெட்டில் கர்ப்பிணிகள், தாய்ப்பால் ஊட்டுவோர் தவிர்க்க வேண்டும் என்ற மாதிரியான குறிப்புகள் உள்ளனவா என்றும் செக் செய்யுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்