Header Ads Widget

``இந்தி ஒழிக என்று சொல்லமாட்டேன்; நான் சொல்ல விரும்புவது தமிழ் வாழ்க"- பிறந்தநாள் விழாவில் கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தன் 68-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அதனையொட்டி சென்னை மயிலாப்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றிய அவர், ``அரசியல் என்பது சிலருக்கு பிழைப்பு, சிலருக்கு வாழ்வதற்கான வழி, சிலருக்கு கெளரவம், சிலருக்கு தொழில். ஆனால் நமக்கு அரசியல் என்பது கடமை. பிக்பாஸின் மூலமாக நான் மக்களுடன் உரையாடுகிறேன்.

கமலஹாசன்

நான் செய்யும் நல்ல காரியங்களுக்கு என் புகைப்படங்களை போடுவதில்லை. நல்லவைக்கு அடையாளம் தேவையில்லை. எனக்கு புத்தரை பிடிக்கும். அவர் தேர்ந்தெடுத்த பாதை மிக கடினமானது. அவர் கடவுள் மறுப்பை விட மனித நேயத்தை தான் கடவுளாக கருதினார்.

ஆனால், இன்று நாம் அவரையே கடவுளாக கருதுகிறோம். காந்தி எதுவெல்லாம் நடக்க கூடாது என பயந்துக்கொண்டிருந்தாரோ அது எல்லாம் கடந்த 75 ஆண்டுகளாக அரங்கேற்றிக்கொண்டிருக்கிறோம். நான் நடித்த ஹேராமில் சித்தரிக்கப்பட்ட அனைத்தும் இன்று நடந்துக் கொண்டிருக்கிறது.

எனக்குப் பெரியார் பாதிப்பு உண்டு. ராமானுஜரின் பாதிப்பும் உண்டு. இரண்டு பேரின் வேலைகளும் ஒன்றாக இருப்பதாகத்தான் நான் உணர்கிறேன். அதோடு காந்தியாரின் பாதிப்பும் உண்டு. அவரும் அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறார்.

கமலஹாசன்

நான் கடவுளை நினைக்காத ஆள் என விமர்சிக்கிறார்கள். நான்தான் மனிதனை நினைத்துக் கொண்டிருக்கிறேனே... விரைவில் நான் உங்களுடன் உரையாடும் வகையில் பத்திரிகை தொடங்க இருக்கிறோம். அதை எல்லோருக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

ஏன் இப்பலாம் இந்தி படத்தில் நடிப்பதில்லை எனக் கேட்கிறார்கள். அப்படி இருக்கிற நான் இந்தி ஒழிக என்று சொல்லமாட்டேன். சிறு வயதில் சொல்லியிருக்கேன். அப்போது எனக்குத் தெரியாது. நான் சொல்ல விரும்புவது தமிழ் வாழ்க. நீடூழி வாழ்க. என்பதுதான்." எனப் பேசினார்



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்