தமிழக காங்கிரஸ் கட்சியில் எப்போதுமே அடிதடி சண்டை, கோஷ்டி பூசல் நடப்பது வழக்கம். ஆனால் சமீப காலமாக சத்தியமூர்த்தி பவன் அமைதியாக தான் இருந்தது. ஆனால், கடந்த 15-ம் தேதி முதல் மீண்டும் கலவர பூமியாக வெடித்திருக்கிறது. அன்றைய தினம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டனர். கே.எஸ்.அழகிரியை சூழ்ந்துகொண்ட போராட்டக்காரர்கள், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரையும், அவரால் நியமிக்கப்பட்ட 3 வட்டார தலைவர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
அப்போது தனது ஆதரவாளர்களின் உதவியுடன் அழகிரி ஆலோசனைக் கூட்டம் நடந்த 2-வது மாடிக்கு சென்றுவிட்டார். பிறகு அவர் கூட்டத்தை முடித்து விட்டு கிளம்பிய போது மீண்டும் களேபரம் ஏற்பட்டது. அப்போது அழகிரியின் ஆதரவாளரான ரஞ்சன் குமார் குழுவினருக்கும், ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் மூன்று பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து 16-ம் தேதி மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது மாவட்ட தலைவர்கள், ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தாங்கள் கையெழுதியிட்ட தீர்மானத்தை ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் வழங்கினர்.
இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, ரூபி மனோகரனுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 'வரும் 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் நேரில் ஆஜராகி 15-ம் தேதி நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருக்கிறது. இதேபோல் ரஞ்சன் குமாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
இருவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தாலும் ரூபி மனோகரனை கட்சியிலிருந்து ஓரம் கட்ட கே.எஸ்.அழகிரி தரப்பு தயாராகிவிட்டது என்கிறார்கள் கதர் கட்சிக்காரர்கள். இதையடுத்து ஒரு காலத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து, பின்னாளில் எதிரியாக மாறியது எப்படி என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த கேள்வியை நாம் அவர்களிடமே முன்வைத்தோம்.
இதுகுறித்த நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர், "கே.எஸ்.அழகிரியும் - ரூபி மனோகரனும் ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தனர். அந்த காலக்கட்டத்தில் தான் கன்னியாகுமரி தொகுதியில் எம்பி-யாக வசந்தகுமார் வெற்றிபெற்றபோது, தனது நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அப்போது சம்மந்தப்பட்ட தொகுதியில் போட்டியிட குமரி அனந்தன் உள்ளிட்ட பலரும் விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால் கே.எஸ்.அழகிரி தனது செல்வாக்கை பயன்படுத்தி ரூபி மனோகரனுக்கு சீட் வாங்கி கொடுத்தார்.
மேலும் இவர் கட்டுமானத் துறையில் ஆர்வமும், விமான நிலைய ஆணையத்தில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். தனது கட்டுமான நிறுவனத்தின் மூலம் ஏராளமான குடியிருப்புகளைக் கட்டியுள்ளார். இந்நிலையில் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் விரைவில் முடியவிருப்பதால், அதை பிடிக்க ரூபி மனோகரன் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது அழகிரி தரப்பு. மறுபுறம் தனது பதவியை விட்டுத்தர கே.எஸ்.அழகிரி தயாராக இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தான் இருவருக்கும் இடையில் இவ்வளவு பெரிய பிரச்னை ஏற்பட்டிருக்கிறது" என்றனர்.
இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து பேசிய ரூபி மனோகரன், ``நியாயமான கோரிக்கைகளை உரிமையை முறையிட வந்த தொண்டர்களையும், நிர்வாகிகளையும் குண்டர்களை வைத்து, உருட்டுக் கட்டைகளால் விரட்டித் தாக்கிக் காயப்படுத்திய கே.எஸ்.அழகிரி, அவரது ஆதரவாளர்களின் செயலை யாரும் நியாயப்படுத்திவிட முடியாது. கட்சியை வளர்க்க ரத்தம் சிந்திய தொண்டனை, கட்சித் தலைமையே உருட்டுக்கட்டையால் தாக்கி, ரத்தம் சிந்த வைத்ததை, மவுனத்தை விலக்கிக் கண்டிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
கே.எஸ் அழகிரி செயல்பாடுகளால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. நியாயத்தைக் கேட்டு முறையிட வந்த கட்சித் தொண்டர்களை கைநீட்டி அடிக்கும் இவரை, உண்மை காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் மன்னிக்க மாட்டார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் அவரை மன்னிக்காது. கே.எஸ்.அழகிரியின் பழிவாங்கும் போக்கை கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடமும், சோனியாகாந்தி, ராகுல்காந்தியிடமும் நிச்சயமாகத் தெரிவிப்பேன். தர்மமும், நியாயமும் ஒருநாள் வென்றே தீரும்” என்றிருக்கிறார்,
from Latest News

0 கருத்துகள்