Header Ads Widget

Doctor Vikatan: உடலின் கெட்ட கொழுப்பை அகற்ற என்ன செய்ய வேண்டும்?

Doctor Vikatan: உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்... எப்படிச் சாப்பிட வேண்டும்?

Naveen T, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்...

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

கெட்ட கொழுப்பைக் குறைக்க நினைப்பவர்கள் முதலில் உடல் எடையை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். வயிறு மட்டுமன்றி, உடலின் உள் உறுப்புகளைச் சுற்றியும் கொழுப்பு சேர்ந்திருக்கலாம். ஹெச்டிஎல் (High-Density Lipoprotein) என்பது நல்ல கொழுப்பு. எல்டிஎல் ( Low-Desity Lipoprotein ) என்பது கெட்ட கொழுப்பு. இந்தக் கெட்ட கொழுப்புதான் ரத்த நாளங்களில் படிந்து ஆபத்தாக மாறுகிறது. நல்ல கொழுப்பானது அதிகம் இருக்கும்போது அது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.

எனவே நல்ல கொழுப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும். வாக்கிங், ஏரோபிக்ஸ் பயிற்சிகள், உடலை வலிமையாக்கும் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். ரத்தப் பரிசோதனையில் ஹெச்டிஎல் அளவைப் பார்க்கும்போது அது குறைவாக இருப்பதைவைத்தே சம்பந்தப்பட்ட நபர் உடற்பயிற்சிகளே செய்யாதவர் என்று சொல்லிவிட முடியும்.

நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். பீட்டா குளுக்கன் என்பதும் கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும். இது ஓட்ஸ், பார்லி மற்றும் சோயாவில் அதிகமிருக்கும்.

பார்லி வேகவைத்த நீராகக் குடிக்கலாம். பார்லியை மாவாக அரைத்து அதை சப்பாத்தி மாவுடன் சேர்த்துச் செய்யலாம். அடுத்து ஓட்ஸ்... இதில் நிறைய வகைகள் கிடைக்கின்றன. அவற்றில் ஸ்டீல்கட் ஓட்ஸும், ரோல்டு ஓட்ஸும் மிகச் சிறந்தவை. கஞ்சியாக, உப்புமாவாக, இட்லி, தோசை மாவில் சேர்த்து எப்படி வேண்டுமானாலும் இதைச் சாப்பிடலாம்.

நார்ச்சத்து

ரெடிமேடு ஓட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சோயாவிலுள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜென் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளாது. வாரத்துக்கு 2-3 முறை சாப்பிடலாம். ஒரு கப் சப்பாத்தி மாவுடன் கால் கப் சோயா மாவும் சேர்த்துச் செய்து சாப்பிடலாம். சோயா புரதச்சத்து நிறைந்ததும்கூட.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள மீன், வால்நட்ஸ், சியா சீட்ஸ், ஆளிவிதை போன்றவையும் நல்ல கொழுப்பு அதிகரிக்க உதவும். இவற்றில் சீட்ஸ் வகைகளைப் பொடித்து சப்பாத்தி மாவுடன் சேர்த்துச் செய்தோ, சீட்ஸை முழுதாக ஸ்மூத்தி போன்றவற்றில் சேர்த்தோ எடுத்துக் கொள்ளலாம். மீன் சாப்பிட முடியாதவர்கள் காட்லிவர் ஆயில் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையோடு எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்