இந்த ஆண்டு சமூக வலைதளங்களில் டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது எலான் மஸ்க்கின் ட்விட்டர் பதிவுகள். தன்னை எப்போதும் பேசுபொருளாக வைத்திருக்க வேண்டும் என்பதை ஒரு மார்க்கெட்டிங் யுத்தியாகவே வைத்திருந்தார். இந்த ஆண்டு எலான் மஸ்க் செய்த அழிச்சாட்டியங்கள் என்னென்ன என்பதைப் பற்றிய ஒரு குட்டி ரீவைண்ட் இது.
`ஒற்றைப்போருக்குத் தயாரா' ரஷ்ய அதிபர் புதினுக்கு சவால் விடுத்த எலான் மஸ்க்!
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-12/b3fae279-b02a-4557-aade-5fd4d3994cda/Untitled_design__45_.png)
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா இடையேயானப் போர் சத்தம் இன்னும் ஓயவில்லை. இரண்டு நாடுகளுக்கிடையான இந்த அதிகாரப் போரினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளையும், கல்வியையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் சமூகவலைதளம் முழுவதும் போரும் போர் தொடர்பான செய்திகளும்தான் உலகம் பேசும் செய்தியாக இருந்தது. அந்த நேரத்தில் எலான் மஸ்க், போரெல்லாம் வேண்டாம், அப்படி சண்டை போட்டாக வேன்டுமென்றால் வாருங்கள் நீங்களும் நானும் தனியாகச் சண்டை போட்டுப் பார்க்கலாம், 'ஒற்றைப் போருக்குத் தயாரா?' என்று ரஷ்ய அதிபர் புதினை சீண்டியிருந்தார்.
I hereby challenge
— Elon Musk (@elonmusk) March 14, 2022
Владимир Путин
to single combat
Stakes are Україна
உக்ரைனில் இணையவசதிகளில் கோளாறு ஏற்பட்டபோது தனது Space X நிறுவனத்தின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளையும் வழங்கி உதவினார். மேலும், உக்ரைனுக்கு ஆதரவாகப் பல பதிவுகளை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
ட்விட்டர் மூலம் அறிமுகமான நட்பு: இந்திய இளைஞரை நேரில் சந்தித்த எலான் மஸ்க்!
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-08/d1e5a7ac-e4a8-45b9-947e-addcd2319099/6305dda873e8f.jpeg)
மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பிரணய் பத்தோல். 2018-ம் ஆண்டு டெஸ்லாவின் ஆட்டோமேட்டிக் விண்ட்ஸ்க்ரீன் வைப்பரில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், "அடுத்து வரும் தயாரிப்புகளில் இந்தத் தவறு திருத்திக் கொள்ளப்படும்" என்று கூறியிருந்தார். இந்த ட்வீட் எலான் மஸ்க், பிரணய் பத்தோல் இருவரும் நட்பாகப் பழகுவதற்கு ஆரம்பமாக அமைந்தது. இதையடுத்து பிரணய் பத்தோல் டெஸ்லாவின் மென்பொருளில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது, ஸ்பேஸ் எக்ஸ் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டறிந்து கொள்வது என எலான் மஸ்க்கை அடிக்கடி ட்விட்டரில் தொடர்பு கொண்டு வந்த நிலையில், இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.
It was so great meeting you @elonmusk at the Gigafactory Texas. Never seen such a humble and down-to-earth person. You're an inspiration to the millions pic.twitter.com/TDthgWlOEV
— Pranay Pathole (@PPathole) August 22, 2022
இப்படி நீண்ட நாள்களாக எலான் மஸ்க்கிடம் ட்விட்டர் மூலம் மட்டுமே தொடர்பு கொண்டிருந்த பிரணய் பத்தோல் அண்மையில் தனது 'Business Analytics' தொடர்பான முதுகலை படிப்பிற்காக அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார். அப்போது எலான் மஸ்க்கை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக எலானுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரணய் பத்தோல், அதில், "டெக்சாஸில் உள்ள கிகாஃபேக்டரியில் உங்களைச் சந்தித்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி. தங்களைப் போன்ற யதார்த்தமான, எளிமையான மனிதரை நான் இதுவரை சந்தித்ததில்லை. நீங்கள் பல கோடி மக்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருக்கிறீர்கள்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.
உலகிலுள்ள பிசினஸ்மேன்களில் உச்சாணிக் கொம்பில் இருக்கும் எலானின் ட்விட்டர் கணக்கைப் பல லட்ச மக்கள் பின்தொடர்ந்தாலும் இந்தியாவைச் சேர்ந்த 23-வயது இளைஞரின் புத்திசாலித்தனமான இந்த அணுமுறை சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியிருந்தது.
மக்கள்தொகை குறைவதைத் தடுக்க உதவி செய்கிறேன்... 9 குழந்தைகளுக்குத் தந்தையான எலான்!
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-02/1f070d6e-9c05-4eb4-8585-7095b63b0f5c/1238367031_0.jpg)
51 வயதான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த செய்தி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் எலான் மஸ்க் மற்றும் சிலிஸ் ஆகிய இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளின் பெயர் வைப்பதற்காக ஆவணங்களைக் கொடுக்கும் போது இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அவருடைய முதல் மனைவியான கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன் மூலம் ஐந்து குழந்தைகள் மற்றும் கனடா பாடகி கிரிமிஸ் மூலம் இரண்டு குழந்தைகள் என ஏழு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது தனது நிறுவன ஊழியர் சிலிஸ் மூலம் பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகளையும் சேர்த்து மொத்தம் 9 குழந்தைகளுக்குத் தந்தையானார் எலான் மஸ்க். இதுதவிர எலான், தன் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களைப் பாலியல் தொந்தரவு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
Doing my best to help the underpopulation crisis.
— Elon Musk (@elonmusk) July 7, 2022
A collapsing birth rate is the biggest danger civilization faces by far.
இதையடுத்து நேர்காணல் ஒன்றில் பேசிய எலான் மஸ்க், "மக்கள்தொகை வளர்ச்சி குறைவாக இருக்கிறது, அதை அதிகப்படுத்த வேண்டும்" என்றார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்கள்தொகை குறைவதைத் தடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். பிறப்பு விகிதம் குறைந்து வருவது மனித நாகரிகத்திற்கு ஆபத்தானது" என்றும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நெட்டிசன்கள் எலான், 9 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளதைக் குறிப்பிட்டு ட்ரோல் செய்து வைரலாக்கியிருந்தனர். எலானின் இந்தப் பேச்சைப் பலர் கண்டித்தும் பதிவிட்டிருந்தனர்.
டெஸ்லா நிறுவனத்தில் இனப் பாகுபாடு; மெளனம் சாதித்த எலான் மஸ்க்!
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-11/ba446491-31fe-4d1f-a252-bbd9a63071fe/Musk_2.jpg)
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள ஃப்ரீமான்ட் (Fremont) நகரத்தில் இயங்கிவரும் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் தயாரிப்பு தொழிற்சாலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் இந்தப் பிரச்னை வெடித்திருந்தது. சுமார், 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவரும் இந்தத் தொழிற்சாலையில், ஆப்பிரிக்க அமெரிக்க இனத் தொழிலாளர்களிடம் நிறப் பாகுபாடு காட்டப்படுவதாகப் புகார் எழுந்தது. குறிப்பாக, தொழிற்சாலையில் பணியாற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கத் தொழிலாளர்கள் இன அவதூறுகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும், நிறத்தைக் குறிப்பிட்டு கேலி, கிண்டல் செய்யப்படுவதாகவும், இனவெறி நகைச்சுவைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்தவண்ணம் இருந்தன.
இந்த நிலையில், இனப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட, தொழிற்சாலையில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்க அமெரிக்க தொழிலாளர்கள், கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் நியாயமான வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதித்துறை (Department of Fair Employment and Housing - (DFEH)) என்ற சிவில் உரிமை அமைப்பிடம் புகாரும் அளித்திருந்தனர். இந்த விவகாரம் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்தார் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனமும் 'இது உண்மைக்கு புறம்பான, நியாயமற்ற வழக்கு' என விவகாரத்தை சைலண்டாக முடித்துவிட்டது.
இது போன்ற இனப்பாகுபாடு புகார்களில் டெஸ்லா நிறுவனம் சிக்குவது புதிதல்ல; இதுபோல் பல முறை நடந்திருக்கிறது. ஆனால் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனது இருப்பைக் காட்டிக் கொள்ள தேவையற்ற விஷயங்களில் குரல் கொடுக்கும் எலான், இந்த விவகாரத்தில் மெளனம் சாதித்திருந்தார்.
ட்விட்டருக்கு எலான் மஸ்க் கொடுத்த ஆஃபர்!
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை தன் வசம் வைத்திருந்த எலான் மஸ்க்கின் கவனம் இந்த ஆண்டு ட்விட்டர் பக்கம் திரும்பியது. ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகிதப் பங்குகளை தன் வசம் வைத்திருந்த எலான், ட்விட்டரை இலவச மார்க்கெட்டிங் செய்யும் ஒரு விளம்பரப் பலகையாக பயன்படுத்தி வந்தார். பின்னர், "ட்விட்டரின் அபார ஆற்றலை நான் திறக்கப்போகிறேன்" என்று கூறி, 43 பில்லியன் டாலருக்கு ட்விட்டரின் மொத்த பங்குகளையும் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். மேலும், "இதுதான் எனது கடைசி ஆஃபர். இந்த ஒப்பந்தத்திற்கு ட்விட்டர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், நான் ட்விட்டரின் பங்குதாரராக இருப்பதா, வேண்டாமா என்பது குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும்" என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-06/94cf61df-a817-4378-8e42-e14cec58480a/gettyimages_876768474.jpg)
ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த மதிப்பே கிட்டத்தட்ட 37 பில்லியன்தான். இந்த நிலையில் 6 பில்லியன் கூடுதலாகக் கொடுத்து 43 பில்லியனுக்கு அந்த நிறுவனத்தை வாங்குவதாக மஸ்க் கொடுத்தது நல்ல ஆஃபர். ட்விட்டர் இதை மறுக்குமானால் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கும் எலான் மஸ்க் தனது பங்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு விலக நேரிடும். அப்படி நடந்தால் ட்விட்டர் நிறுவனம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்றெல்லாம் அப்போது கூறப்பட்டது.
ட்விட்டரை வளைத்துப் போட்ட எலான்
எலான் மஸ்க் கேட்டபடி ட்விட்டரை விற்க முன்வந்தது அந்நிறுவனம். ஆனால், எலான் மஸ்க் அதை வாங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார். பின்னர் ட்விட்டர் நிறுவனம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம், அக்டோபர் 28-க்குள் ட்விட்டர் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்று கெடு விதித்தது. இது நடக்கவில்லை என்றால் எலான் மஸ்க் சட்டரீதியான வழக்கைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டது. இதையடுத்து ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தின் இறுதிப் பணிகளை முடித்து, இறுதியாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதை வாங்கினார் எலான். அதன்பின், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்திற்குள் கைக் கழுவும் சிங்க்குடன் நுழைந்து எலான் செய்த அழிச்சாட்டியங்களெல்லாம் எல்லோரும் அறிந்ததே. Let that sink in!
டொனால்டு ட்ரம்ப்பும் எலான் மஸ்க்கும்!
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-11/219e0360-4b1a-42bd-b643-98f3724a7c9d/elon_musk_twitter_donald_trump_poll_web_getty.jpeg)
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஜோ பைடனுக்கு எதிராகவும் மோதலை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் அவதூறாகக் கருத்துகள் பதிவிட்டு வந்ததாகக் கூறி ட்விட்டர் நிறுவனம் சுமார் ஒன்பது கோடிப் பேரால் பின்தொடரப்பட்டுவந்த ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது. இதைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் மற்றும் கூகுளின் யூடியூபிலிருந்தும் ட்ரம்ப்பின் கணக்குகள் முடக்கப்பட்டன. இதனால் கோபப்பட்ட ட்ரம்ப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்குப் போட்டியாக, புதிதாக 'TRUTH' என்னும் புதிய சமூகவலைதள செயலியை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதுமே, ட்ரம்ப் மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்தது. இதற்கு ஏற்றார்போல ட்ரம்ப், "ட்விட்டர் இப்போதுதான் ஒரு புத்திசாலியின் கைகளில் உள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இனிமேல் நம் தேசத்தை வெறுக்கும் இடதுசாரி மனநோயாளிகள் கையில் இருக்காது" என்று எலான் மஸ்க்கைப் புகழ்ந்து பேசியிருந்தார்.
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய பின் முடக்கப்பட்ட ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் அனுமதிக்கப்படுமா என்ற கேள்விகள் எழத்தொடங்கின. இதையடுத்து எலான் மஸ்க், 'அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பை மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கலாமா?' என்று ட்விட்டரில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியிருந்தார். 52 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ட்ரம்ப் மீண்டும் ட்விட்டருக்கு வரவேண்டும் என்று வாக்களித்திருந்தனர். ஆனால், ட்ரம்ப் ட்விட்டர் பக்கமே இனி வரமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
எலானின் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கை
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-10/26f7e4c1-f4b7-4493-aed5-4a6607315662/layoffs.webp)
எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றியக் கையோடு பராக் அகர்வால் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டர் நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறியுள்ள எலான், 75% ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. "சரியாக வேலை செய்யாமல் இருப்பவர்களைத் தொடர்ந்து அடையாளம் கண்டறிய வேண்டும். அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள நான்கு வாரங்கள் அவகாசம் தாருங்கள், இல்லையெனில் பணி நீக்கம் செய்யுங்கள்" என்று ட்வீட்டரின் உயர் மட்ட அதிகாரிகளுக்கு எலான் மஸ்க், இ-மெயில் அனுப்பியது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சில தொழில் நிபுணர்கள், எலான் மஸ்க்கின் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் ட்விட்டர் நிறுவனத்தை மேம்படுத்தும் சிறந்த யுக்தி என்றும் பலர் இது ட்விட்டர் நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டரின் ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து பல்வேறு காரணங்கள் கூறி அமேசான், மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை இந்த ஆண்டு பணிநீக்கம் செய்தது.
புதிய ப்ளூ டிக் விவகாரத்தால் கலவரமான ட்விட்டர்
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-05/69dca1e3-3310-42be-9b37-96df160d4670/627a1e6f51ceb.jpg)
பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த ப்ளூ டிக்கை, வெரிஃபடு செய்து யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி எலான், அதற்கு 8 அமெரிக்க டாலர்கள் மாதாந்திர கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்ற ட்விஸ்ட்டையும் வைத்தார். இதனால் கலவரமான ட்விட்டர், அதன் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் இழந்துவிடும் என்று பலர் எச்சரித்திருந்தனர். பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் "உங்கள் கருத்துக்கும், விமர்சனத்துக்கும் பாராட்டுகள். ஆனால் இப்போது நீங்கள் $8 அமெரிக்க டாலர் செலுத்திவிடுங்கள்" என்று நக்கலாகப் பதிலளித்திருந்தார் எலான்.
இதில் இன்னொரு சிக்கலாக, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் 'Parody' மற்றும் 'Fake' கணக்குகள் எல்லாம் ப்ளூ டிக் வாங்கிக்கொண்டு அந்நிறுவனத்தை விமர்சித்து ட்வீட்களைப் பதிவு செய்தனர். இதனால் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்துள்ளன. அதேபோல, பிரபலங்களின் பெயரில் உலாவும் போலிக்கணக்குகளும் இதில் அடக்கம்.
முன்னர் ப்ளூ டிக் என்பது 'இவரின் பெயர் இதுதான்', 'இவர் இங்கேதான் பணிபுரிகிறார்', 'இவர் இந்நிறுவனத்தை நடத்திவருகிறார்' என்பதையெல்லாம் கருத்தில்கொண்டு ஆராய்ந்தே வழங்கப்பட்டு வந்தது. இப்போது வெறும் பணம் செலுத்தினால் கிடைத்துவிடும் என்பதால் ட்விட்டரில் தன் இயற்பெயரைக்கூடப் போடாத பல கணக்குகள் ப்ளூ டிக்கைப் பெற்று வருகின்றன. இது மொத்தமாக ட்விட்டரையே கலவர பூமியாக மாற்றியிருந்தது.
இந்த விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு $8 அமெரிக்க டாலர் மாதாந்திர கட்டணமாகச் செலுத்தி ப்ளூ டிக்கைப் பெற்றுக் கொள்ளும் இந்தப் புதிய நடைமுறை தற்காலிகமாக நிறுத்தியும் வைக்கப்பட்டு மீண்டும் செயல்முறைக்கு வந்தது.
கோல்டு, கிரே, ப்ளு கலர்களில் வெரிஃபைட் டிக்; எலானின் மாஸ்டர் பிளான்!
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-12/5169833f-9238-4177-9ac0-73ec84954bad/Untitled_design__22_.png)
ப்ளூ டிக் கலவரத்தை அடுத்து `கோல்டு', `கிரே' கலர்களில் வெரிஃபை டிக்கை அறிமுகப்படுத்தியது ட்விட்டர். இதில் `கோல்டு டிக்' தனியார் நிறுவனங்களுக்கும், `கிரே டிக்' அரசின் அதிகாரபூர்வ கணக்குகளுக்கும், `ப்ளு டிக்' ட்விட்டர் பயனாளர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் என வகைப்படுத்தப்பட்டன.
மேலும், ட்விட்டர் பயனர்கள் தங்களின் போன் நம்பரைக் கொண்டு வெரிஃபை செய்து மாதம் 8 டாலர் கட்டணமாகச் செலுத்தி ப்ளூ டிக்கைப் பெற்றுக்கொள்ளலாம். ட்வீட்டை எடிட் செய்துகொள்ளும் வசதி, 1080p வீடியோ பதிவேற்றங்கள், ரீடர் பயன்முறை போன்ற சிறப்பம்சங்கள் ஒரு சில நாடுகளில் இருக்கும் ப்ளூ டிக் சந்தாதாரர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டன. இதேபோல கோல்டு மற்றும் கிரே டிக் பயன்பாட்டாளர்களுக்கும் பல்வேறு தனிச்சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், வெரிஃபடு டிக்குகளைப் பொறுத்து சந்தா கட்டணங்களும் வேறுபடும், கூடுதலுமாகும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-12/c170711f-84fe-47be-81e0-df9e08f82c9c/Untitled_design__23_.png)
இது தவிர, தனியார் நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள் போன்றவை பெரும்பாலும் தங்களின் விளம்பரங்களுக்காகவும், செய்திகளைப் பகிரவும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டி வருகின்றன. இவற்றை வகைப்படுத்துவதன் மூலம் 'கோல்டு டிக்' வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களையும், செய்திகளையும் பதிவிடுவதற்குச் சிறப்புக் கட்டணமும் கூடுதல் சந்தாவும் வசூலிக்கப்படும். மற்ற வெரிஃபடு டிக்குகளுக்கும் மாதாந்திர கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
அனைவருக்கும் வெரிஃபட் டிக் வழங்குவதன் மூலம் போலி கணக்குகளை எளிதில் முடக்கிவிடலாம். ஆனால் அதேசமயம் ட்விட்டர் பயனர்கள் அனைவரும் குறைந்தபட்ச மாதச் சந்தா செலுத்தி ட்விட்டரைப் பயன்படுத்தும் கட்டாயம் ஏற்படும். சந்தா செலுத்தாதவர்களின் ட்விட்டர் கணக்குகளின் வசதிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு அவர்களும் சந்தா செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்பதுதான் இதில் இருக்கும் சூட்சமம்.
எலான் மஸ்கின் இந்த அதிரடி நடவடிக்கைகள் ட்விட்டர் நிறுவனத்திற்கு பெரும் லாபத்தை ஈட்டித் தரும் என்றாலும் மற்றொருபுறம் ட்விட்டர் தன் பயனர்களை இழந்து சரிவைச் சந்திக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த ஆண்டு எலான் மஸ்க் செய்த சிறப்பான சம்பவமாக நீங்கள் கருதுவதை கமென்ட்டில் பதிவிடவும்.
from Latest News
0 கருத்துகள்