சென்னை மண்ணடி ஐயப்பசெட்டி தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா. இவர், கடந்த 13-ம் தேதி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். ஈவினிங் பஜாரில் கடந்த மூன்று ஆண்டுகளாக செல்போன் கடை நடத்திவருகிறேன். என்னுடைய சொந்த ஊர் காயல்பட்டிணம். என்னிடம் என் ஊரைச் சேர்ந்த செய்யது முகமது சித்திக், சேக் பரீத், ஜமால் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். அவர்களை மலையப்பன் தெரு, இரண்டாவது மாடியில் அறை எடுத்து வாடகைக்கு தங்க வைத்துள்ளேன். நான் என் கடையில் வியாபார பணத்தை மேற்படி மலையப்பன் தெருவில் உள்ள வீட்டின் லாக்கரில் வைப்பது வழக்கம். மீதி பணத்தை கடையில் வைத்துவிடுவேன்.
கடந்த 12.12.2022-ம் தேதி என் கடையில் வியாபாரத்துக்கான பணம், சுமார் 10 லட்சத்தை வைத்திருந்தேன். மீதி பணம் சுமார் 10 லட்சத்தை மலையப்பன் தெருவில் உள்ள அறையில் வைத்திருந்தேன். 13.12.2022-ம் தேதி காலை 11.30 மணியளவில் நான் வீட்டில் இருந்தபோது என் கடையில் வேலை செய்யும் ஜமால் என்பவன் வீட்டுக்கு வந்தான். அவன், காலை 9.30 மணிக்கு மலையப்பன் தெருவில் உள்ள அறைக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று கூறி நான்கு பேர் வந்ததாக என்னிடம் தெரிவித்தான். பின்னர் அவர்கள் அறையை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி லாக்கரில் வைத்திருந்த பணம் மற்றும் கம்ப்யூட்டர், லேப்டாப், ஆறு செல்போன்களையும் அவர்கள் எடுத்துக் கொண்டதாக ஜமால் என்னிடம் கூறினான்.
மேலும், அந்த நான்கு பேரில் ஒருவர், செய்யது முகமது சித்திக்கை வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்போன் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் கடையை திறந்து அங்கிருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு சித்திக்கை மீண்டும் மலையப்பன் தெருவில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன்பிறகு இன்னும் அரை மணி நேரத்தில் விசாரணை செய்ய வருவதாகக் கூறி விட்டு அவர்கள் சென்றிருக்கின்றனர். அதன்பிறகு யாரும் வராததால் எங்களுக்கு சந்தேகம் வந்தது. பிறகுதான் நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என தெரியவந்தது. எனவே என் பணத்தை என்.ஐ.ஏ அதிகாரிகள் என கூறி ஏமாற்றி எடுத்துச் சென்றவர்களைக் கண்டுபிடித்து என் பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தார்.
மேலும் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இந்த வழக்கை விசாரிக்க துறைமுகம் உதவி கமிஷனர் வீர குமார் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலி என்.ஐ.ஏ அதிகாரிகளை போலீஸார் தேடி வந்த சூழலில் அவர்கள் ஊட்டிச் சென்ற தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது. அதனால் அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் அங்குச் சென்றனர். ஆனால் போலீஸார் வருவதை தெரிந்த அந்தக் கும்பல், செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டது.
இந்தநிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போலி என்.ஐ.ஏ அதிகாரிகளாக நடித்த ராயபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கேஸ் டெலிவரி பாயாக பணியாற்றி வரும் புஷ்பராஜ் மற்றும் வீரா (எ) விஜயகுமார், சென்னை பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த கார்த்திக், ஆட்டோ டிரைவர் தேவராஜ், ரவி ஆகிய 6 பேர் சரணடைந்தனர்.
அவர்களைப் போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்தச் சூழலில் போலி என்.ஐ.ஏ அதிகாரிகளாக நடித்தவர்கள் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``என்.ஐ.ஏ அதிகாரிகளாக நடித்து 20 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றதாக முகமது அப்துல்லா என்பவர் அளித்த புகாரின்பேரில் அந்தக் கும்பலைத் தேடிவந்தோம். ஊட்டி, கோவை, சேலம், பழனி என அந்தக் கும்பல் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே வந்தது. ஒருகட்டத்தில் அவர்களை நெருங்கிவிட்டதை அறிந்த அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் சரண் அடைந்துவிட்டனர். அந்தக் கும்பலைச் சேர்ந்த சிலர் குதிரைப் பந்தயத்தில் தங்களின் பணத்தை லட்சக்கணக்கில் இழந்திருக்கிறார்கள். அதனால்தான் என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி முகமது அப்துல்லா என்பவரிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இந்த கும்பலைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன், ராயபுரத்தைச் சேர்ந்தவர். அதனால் அவருக்கு முகமது அப்துல்லா, ஜமால் ஆகியோரிடம் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் ரகசிய தகவல் தெரிந்திருக்கிறது. அதனால் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ரெய்டு நடத்திவருவதால் அதே ஸ்டைலில் பணத்தை இவர்களிடமிருந்து பறிக்க திட்டமிட்டிருக்கிறது இந்தக் கும்பல். காவல் நிலையத்தில் முகமது அப்துல்லா என்பவர் சுமார் 20 லட்சம் ரூபாயை போலி என்.ஐ.ஏ அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறியிருக்கிறார். ஆனால், கோடி கணக்கில் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.
from Latest News

0 கருத்துகள்