Header Ads Widget

"முட்டாள் ஒருவர் கிடைத்த பிறகு ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன்!"- எலான் மஸ்க் அதிரடி ட்வீட்

ட்விட்டர் சிஇஓ-வான எலான் மஸ்க் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருகிறார். இதற்காகவே சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பதிவிட்டு தன்னை எப்போதும் பேசுபொருளாகவே வைத்திருக்கிறார். இந்நிலையில் அதிரடிப் பணி நீக்கம், ப்ளு டிக் கட்டணம், தனியார் நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகள் மீதான நடவடிக்கைகள், பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் போன்ற எலானின் அண்மைக்கால ட்விட்டர் நடவடிக்கைகள் பெரும் விமர்சனங்களுக்குள்ளானது. இதையடுத்து எலான் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகினால்தான் ட்விட்டர் உருப்படும், இல்லையெனில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் எனப் பலர் விமர்சித்திருந்தனர்.

எலான் மஸ்க்

இதற்குப் பதிலளிக்கும் வகையில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?" என ட்வீட் செய்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். மேலும், பெரும்பான்மையானவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு அதற்குத் தான் கட்டுப்படுவதாகவும் எலான் உறுதியளித்திருந்தார். இறுதியில் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் எலான் மஸ்கிற்கு எதிராகத் திரும்பியது. இதில் 57.5 சதவிகிதத்துக்கும் அதிகமான பயனர்கள் எலான் பதவி விலக வேண்டும் (ஆம்) என்றும், சுமார் 42.5 சதவிகிதம் பேர் பதவி விலக வேண்டாம் (இல்லை) என்றும் பதிலளித்திருந்தனர். இதையடுத்து உறுதியளித்ததன் படி எலான், ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலக வேண்டும் என நெட்டிசன்கள் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த வேலையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனத்துடன் ஒருவர் கிடைத்தபிறகு மிக விரைவில் நான் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன். அதன்பின், சாஃப்ட்வேர் மற்றும் சர்வர் டீம்களை மட்டும் நான் கவனித்துக் கொள்வேன்" எனப் பதிவிட்டுள்ளார். எலான் இப்படி முட்டாள் என்று குறிப்பிட்டது தற்போது சர்ச்சையாகி வருகிறது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்