Header Ads Widget

`மாணவர்கள் நலனா... அரசியலா?' - மேட்டுப்பாளையம் அறிவு சார் மையம் விவகாரத்தில் மோதும் அதிமுக-திமுக

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நகராட்சிகளில் அறிவு சார் நூலக மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்காக ரூ.1.87 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி மேட்டுப்பாளையத்தில், நகரவை மணிநகர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள பழைய தொடக்கப் பள்ளி வளாகத்தில் அறிவு சார் மையம் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

மேட்டுப்பாளையம் மணிநகர் பள்ளி

ஆனால் நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் தொடர் போராட்டத்தால் பணிகள் முடங்கின.

“அறிவு சார் மையம் கட்டினால், மணிநகர் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயரும்போது கூடுதலாக வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் அமைக்க முடியாமல் போகும். எனவே இந்த அறிவு சார் நூலக மையத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும்” என்று அ.தி.மு.க கவுன்சிலர்கள் கூறி வருகின்றனர்.

அதிமுக போராட்டம்

இது குறித்து வீரக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தரப்பில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வழக்கறிஞர் இன்பதுரை ஆஜரானார். அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார்.

அப்போது மாணவர்கள் படிப்பின் நலன் கருதி அறிவு சார் மையம் கட்டுவதை எதிர்ப்பது ஏற்கத்தக்கதல்ல என்று கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் அ.தி.மு.க-தி.மு.க இடையயான அரசியல் மோதலாகவே மாறியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

இது குறித்து மேட்டுப்பாளையம் தி.மு.க-வினர் கூறுகையில், “அ.தி.மு.க-வினர் மட்டும்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அந்த வார்டு கவுன்சிலர் அ.தி.மு.க. சுற்றுவட்டார பகுதிகளிலும் அ.தி.மு.க-தான் வென்றுள்ளது. இது கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள திட்டம்.

அவரின் பெயரில் பெயர் பலகை வந்துவிடுமே என்று பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் அ.தி.மு.க-வினர் எதிர்க்கின்றனர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி இரண்டு முறை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவருக்கு நெருக்கமான வழக்கறிஞர் இன்பதுரை தான் வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராக்கியுள்ளார். அந்தப் பள்ளி சமீபத்தில்தான் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அதிமுக போராட்டம்

மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான மாணவர்கள் எண்ணிக்கையும் அங்கு இல்லை. தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் எல்லாம் ஒரு அறிவு சார் மையம் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் தான் இரண்டு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பயன்பெற விடாமல் அ.தி.மு.க அரசியல் செய்கிறது” என்றனர்.

இந்த வழக்குக்காக ஆஜரான அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறுகையில், “வீரக்குமார் என்பவருக்காக நான் ஆஜராகினேன். அறிவு சார் மையம் வரக்கூடாது என்பது வாதம் அல்ல. உண்மையில் அதை நாங்கள் வரவேற்கிறோம். அது அமையக் கூடிய இடத்தைத்தான் வேண்டாம் என்கிறோம். அங்கு அறிவு சார் மையம் வந்தால், பள்ளியை தரம் உயர்த்துவதில் சிக்கல் ஏற்படும். இதைத்தான் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தோம்.

இன்பதுரை

பள்ளியை தரம் உயர்த்த ஏன் நிதி ஒதுக்கவில்லை என கேட்ட நீதிமன்றம், அது குறித்து வழக்கு தொடர எந்தத் தடையும் இல்லை என்று கூறியிருக்கிறது. அறிவு சார் மையம் அமைத்து மாணவர்கள் அறிவை மேம்படுத்துவோம் என சொல்பவர்கள், பள்ளிக்கூடத்தை தரம் உயர்த்த மாட்டோம் என்பது எந்த விதத்தில் நியாயம்” என்றார்.

இது குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் கூறுகையில், “இது குழந்தைகளின் அறிவு சம்பந்தப்பட்ட விஷயம். வரும் காலத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நுழைவு தேர்வுகளுக்கு இது அட்சயபாத்திரமாக இருக்கும். இந்தப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை.

மெஹரிபா பர்வீன்

அதை நகராட்சி சார்பில் செய்துதருவோம் என்றுதான் கூறுகிறோம். அமைச்சர்கள், எம்.பி என்று தி.மு.க-வின் அனைத்து மட்டத்திலும் இதற்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இந்த அறிவு சார் மையம் மூலம் அடுத்தத் தலைமுறை தான் பயனடைவார்கள்.  எனவே, இதில் அரசியல் வேண்டாம்” என்றார்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்