Header Ads Widget

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் அழுகிய முட்டை?!- பரவிய வீடியோ... பெற்றோர்கள் அதிர்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம் நரிப்பையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னகரம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 320 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த அரசுப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுடன் வழங்கப்பட இருந்த, முட்டைகள் அழுகிய நிலையில் இருந்திருக்கிறது. இதனை பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதோடு, அழுகிய முட்டைகளை சமைத்து பள்ளி குழந்தைகளுக்கு வழங்க இருந்த சத்துணவு பணியாளர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். ஆனால் பள்ளி பணியாளர்கள் அவர்களை கண்டுகொள்ளாமல் குழந்தைகளுக்கு அந்த முட்டைகளை வழங்குவதற்கான பணிகளைத் தொடர்ந்தனர்.

இதனை தமிழக அரசிற்கு தெரியப்படுத்தும் விதமாக தங்கள் செல்போனில் அரசுப் பள்ளியில் சத்துணவில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட‌ இருந்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மாணவர்களுக்கு வழங்கியுள்ளது அழுகிய முட்டைகள்

மாணவர்கள் அழுகிய முட்டைகளை சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கக்கூடும் எனக் கூறி பொதுமக்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த அழுகிய முட்டைகளை சத்துணவு பணியாளர்களிடமிருந்து பறிமுதல் செய்து கீழே கொட்டியதாக கூறப்படுகிறது. தங்கள் பிள்ளைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட இருந்ததை அறிந்து கொண்ட அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியர், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சத்துணவு பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை மாவட்ட முதன்மை அதிகாரி பாலுமுத்து-விடம் கேட்டபோது, ``இந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் தான் உண்மை தெரியவரும்” என்றார்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்