சென்னை, சத்திய மூர்த்தி பவனில் கிருஷ்ணகிரி எம்.பி செல்லகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டு ஓசூர் பகுதியில் வாழ்கிற மக்களின் வழக்கை பெங்களூருவுடன் பின்னிப்பிணைந்து இருக்கிறது. பெங்களூருவில் ஓடுகிற மெட்ரோ ரயில், ஓசூர் வரை நீட்டிக்கப்பட்டால் தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். இதுகுறித்து 2019-ல் நாடாளுமன்றத்தில் பேசினேன். பிறகு மத்திய அமைச்சரிடம் பேசினேன். இதையடுத்து மத்திய அரசு தமிழக, கர்நாடக அரசுகளுக்கு கடிதம் எழுதினார்கள்.
அதில், `இது ஒரு நல்ல திட்டம். மாநில அரசு செயல்படுத்த வேண்டியிருப்பதால் முன்னோடி எடுக்க’ கேட்டுக்கொண்டார்கள். அதன் பிறகும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். தொடர்ந்து கடந்த மார்ச் 21-ம் தேதி எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, எடுத்துச்சொன்னேன். பிறகு இருவரும் நேரில் சென்று அந்த மாநில முதல்வர் பொம்மையை சந்தித்து விரிவாக எடுத்து கூறினோம்.
அவர் பரிசீலனை செய்து ஒப்புதல் அளித்திருக்கிறார். மேலும் இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு செய்யட்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். பிறகு தமிழக முதல்வரை சந்தித்து எடுத்துக்கூறினேன். குறிப்பாக பெங்களூருவில் இருந்து பொம்ம சந்திரா வரை மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. இங்கிருந்து ஓசூர் வரவேண்டும் என்றால் 20.5 கீ.மீ தூரம் இருக்கிறது.
இதில் 11.7 கீ.மீ கர்நாடகா மாநிலத்தை சார்ந்ததும், 8.8 கீ.மீ தமிழகத்தை சார்ந்ததுமாக இருக்கிறது. கர்நாடகா மாநிலதிற்கு அந்த மாநில அரசும், தமிழகத்தில் இருக்கும் பகுதிக்கு தமிழக அரசு செலவு செய்ய வேண்டும் என்று கூறினேன். இதில் 20% மத்திய அரசு பங்களிப்பு இருக்கும் என்று சொன்னேன். பிறகு தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இதன் மூலம் நெரிசல், காற்று மாசுபாடு குறையும். காங்கிரஸ் கட்சி ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. பாஜக கட்சி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒரு இயக்கம். மக்களுக்கான சுதந்திரம் என்றால் என்ன என்று தெரியாத இயக்கம். வன்முறை என்பது அவர்களின் ரத்தத்தில் ஊறிப்போன இயக்கம். இந்த நாட்டிற்கு அகிம்ஸையை போதித்த மகாத்மா காந்தியை சுட்டுக்கொல்வதற்கு துணிந்தவர்கள் என்பதைவிட, அந்த சுட்டுக்கொன்றவரையே மிகப்பெரிய தேசப்பக்தர் என்று கொண்டாடுகிற இயக்கம்.
எந்த மாநிலத்திலும் ஜனநாயகரீதியில் அவர்கள் தேர்தலை சந்தித்தது இல்லை. காங்கிரஸ் கட்சியில் மட்டும் கோஷ்டி பூசல் இருப்பதாக சொல்கிறார்கள். பாஜக சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது முழுமையாக தெரியும். அழகிரி தான் தலைவராக தொடர்வாரா என்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்" என்றார்.
from Latest News

0 கருத்துகள்