கடன் தருவதாக வலைவிரிக்கும் ஆப்கள் குறிவைப்பது எளிய மக்களை தான். `3,000 லோன் தருகிறேன். 5,000 லோன் தருகிறேன்' என அவர்களை ஏமாற்றுவதோடு, மொபைல் போனில் உள்ள அவர்களின் தனிப்பட்ட தரவுகளையும் இந்த போலி ஆப்கள் கொள்ளையடிக்கிறது.
இந்நிலையில், உடனடி லோன் எளிதாக தருவதாக கூறி மக்களை குறிவைத்து ஏமாற்றும் சீன கடன் ஆப்களை அரசும், ரிசர்வ் வங்கியும் கண்டறிந்து அவற்றை தடுக்கும் முயற்சியை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மக்களை ஏமாற்றி வரும் சீன கடன் செயலிகள் குறித்து மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம். பி. நிதிமுல் ஹக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``கடந்த 6-7 மாதங்களில் மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சகம், கம்பெனிகள் விவகாரத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் பல ஆலோசனை கூட்டங்களை நடத்தினேன்.
தவறாக பயன்படுத்தப்பட்ட பல ஆப்கள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆப்களை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அத்தகைய ஆப்களை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த முயற்சி தேவை.
மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆப்களை தடுக்க கூடிய உத்தரவுகளை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமே பிறப்பிக்கிறது. மக்கள் எந்த ஒரு ஆப்களாலும் ஏமாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, ரிசர்வ் வங்கி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் மத்திய நிதியமைச்சகம் இணைந்து முயற்சிகளை எடுத்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும் குறிப்பாக இந்தந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது போன்ற தகவல்கள் அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News

0 கருத்துகள்