Header Ads Widget

Doctor Vikatan: குறட்டை என்பது கவலைக்குரிய விஷயமா? குழந்தைகள் குறட்டை விடுவார்களா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் குழந்தை முதல், பெரியவர்கள் வரை எல்லோருக்கும் குறட்டை பிரச்னை இருக்கிறது. சின்ன குழந்தைகளுக்கும் குறட்டை வருமா? குறட்டை என்பது ஆபத்தானதா? அது ஏன் வருகிறது? தடுக்க வழிகள் உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்.

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

குழந்தைகள் குறட்டைவிடுவது என்பது நீங்கள் நினைக்கிற மாதிரி அசாதாரணமானது இல்லை. குழந்தைகளுக்கு மூக்கடைத்திருந்தால்கூட அது குறட்டை சத்தம் மாதிரி கேட்கலாம். குழந்தைகளுக்கு மூக்கின் அடியில் உள்ள அடினாய்டு எனப்படும் சதையும் டான்சில்ஸும் பெரிதாகி இருந்தாலும் அவர்கள் குறட்டை விடுவார்கள். அதை `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா' (Obstructive sleep apnea) என்று சொல்வோம்.

`அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா' பாதிப்பானது குழந்தையின் தூக்கத்தை மட்டுமல்ல, அதன் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கலாம். இந்த பாதிப்புள்ள குழந்தைகள், பகல் வேளைகளில் ரொம்பவும் எரிச்சலடைந்து காணப்படுவார்கள். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க மாட்டார்கள். தூக்கத்திலிருந்து அவ்வளவு எளிதாக அவர்களை எழுப்ப முடியாது. இன்னும் கொஞ்சம் தூக்கம் வேண்டும் என்பார்கள். பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்தும்போது தூங்குவார்கள். அதனால் படிப்பில் பாதிப்பு இருக்கும்.

இந்த மாதிரி குழந்தைகளை காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் அழைத்துச்சென்று முழுமையான பரிசோதனை செய்தால் என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

ஸ்லீப் ஆப்னியா என்பது சற்றே ஆபத்தான ஒரு நிலைதான். பகல்நேர களைப்பு, கவனச் சிதறல், எரிச்சல், படிப்பில், வேலையில் சரியாகச் செயல்பட முடியாதது என சின்ன பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். குறட்டை விடும்போது சில நேரங்களில் ஆக்ஸிஜன் நம் இதயம், மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்குப் போவது தடைப்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதயத்துக்கான அழுத்தம் அதிகரிக்கும்.

குறட்டை

அதீத குறட்டை என்பது மாரடைப்புக்கான ரிஸ்க்காகவும் அமையலாம். முறையற்ற இதயத்துடிப்புக்கும் காரணமாகலாம். ஸ்லீப் ஆப்னியா பாதிப்பானது நீரிழிவுக்கான ரிஸ்க்கையும் அதிகரிக்கிறது. அதே மாதிரி வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாக இருக்கும். அசாதாரணமான கல்லீரல் பாதிப்புகள் இருக்கலாம்.

தூக்கத்தின்போது சத்தமாக குறட்டை விடுவதால் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் அது தொந்தரவாக அமையும். அது உறவுப் பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். எனவே குறட்டை என்பது சாதாரணமானது என அலட்சியம் செய்யாமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்