தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை கடந்த மே மாதம் பொறுப்பேற்றது. அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், தி.மு.க இளைஞரணி செயலாளரும், முதல்வர் மு.க ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர்கள், தி.மு.க கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சி தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட அனைவரும் பங்கேற்றனர். மேலும், உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பொறுப்பேற்றார்.
அதைத் தொடர்ந்து, பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்," நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனபோதும், இப்போது அமைச்சரானபோதும் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும், தலைவர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்களின் ஆலோசனையின் படி சிறப்பாக நிறைவேற்றுவேன். அப்போதும், இப்போதும் என்மீது பல்வேறு விமர்சனங்களை வைக்கப்படுகிறது. அது அனைத்துக்கும் என் உழைப்பின் மூலம் பதிலளிப்பேன். என் முன்னேற்றத்தில் பத்திரிக்கையாளர்களின் விமர்சனத்துக்கும் பெரும் அக்கறை இருக்கிறது. அதற்கும் நன்றி. மாமன்னன் தான் எனது கடைசி படம். இனி நடிக்க மாட்டேன் கமல் தயாரிக்கும் படத்தில் இருந்து விலகி விட்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
from Latest News

0 கருத்துகள்