Header Ads Widget

Doctor Vikatan: தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு வாக்கிங் செல்வது சரியா?

Doctor Vikatan: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவிட்டு வாக்கிங் செய்வதுதான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நீங்களோ இதற்கு முன் ஒரு கேள்வியில், வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறீர்களே... எது சரி?

-விகடன் வாசகர், இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

ஷீபா தேவராஜ்

குறிப்பிட்ட நபரை வெறும் வயிற்றில் வாக்கிங் போகச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்துகிறார் என்றால் அதன் பின்னணியில் வேறு காரணங்கள் இருக்கலாம். அதாவது அவருக்கு ஏதேனும் மாத்திரைகளைப் பரிந்துரைத்துவிட்டு, அதன் பிறகு வாக்கிங் முடித்துவிட்டு, அதன் பிறகு சாப்பிட்டால் போதும் என்று சொல்லியிருக்கலாம்.

அதுபோன்று மருத்துவக் காரணங்களுக்காக அப்படி அறிவுறுத்தப்பட்டிருப்பவர்கள் மட்டும் அதைப் பின்பற்றலாம்.

மற்றபடி ஒரு வேலையைச் செய்யும்போது அதற்கான ஆற்றலைப் பெற நமக்கு சக்தி தேவை. அதற்காக ஏதேனும் சாப்பிட வேண்டும். உதாரணத்துக்கு நீங்கள் ரன்னிங் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் ஓடுகிறீர்கள் என்றால் உங்களால் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓட முடியலாம்.

அதற்கு மேல் ஓட்டத்தைத் தொடர உங்கள் உடல் ஒத்துழைக்காமல் போகலாம். அதற்குத்தான் உடலுக்கு எரிபொருள் அவசியமாகிறது. அதனால்தான் வொர்க் அவுட்டுக்கு முன், வொர்க் அவுட்டுக்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் வலியுறுத்தப்படுகின்றன.

Running

மிகக் குறைந்த தூரம் அல்லது மிகக் குறைந்த நேரம் வாக்கிங் செல்வோருக்கு வேண்டுமானால் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டுச் செல்வது சாத்தியமாக இருக்கலாம். அதிக நேரமோ, அதிக தூரமோ வாக்கிங் செல்ல நினைப்போருக்கு அது அறிவுறுத்தத்தக்கதே அல்ல.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்