Doctor Vikatan: பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருவது இன்று சகஜமாக உள்ளது. இதற்கு மருத்துவமனையில் கொடுக்கப்படும் லைட் தெரபி அவசியமா? சூரிய வெளிச்சத்தில் காட்டுவது போதுமானதா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.
சுகப்பிரசவமோ, சிசேரியனோ... குழந்தை பிறந்த மூன்றாவது நாளன்று அதற்கு மஞ்சள் காமாலை உள்ளதா என்பதற்கான பிலிருபின் அளவு பார்க்கப்படும்.
பிரசவ காலத்தில் வரும் இத்தகைய மஞ்சள் காமாலை அவ்வளவு ஆபத்தானதல்ல. ஆனால் அப்படி இருந்தால் அதை அலட்சியப்படுத்தவும் முடியாது. பிலிருபின் அளவு சரிபார்க்கப்பட்டு, தேவைப்பட்டால் அந்தக் குழந்தைக்கு போட்டோதெரபி கொடுக்கப்படும்.
லைட் மூலமாக கொடுக்கப்படும் இதில் குழந்தையின் சருமத்தில் கதிர்கள் ஊடுருவி பிலிருபினை வெளியேற்றிவிடும். இதையடுத்து ஒன்றிரண்டு நாள்கள் போட்டோதெரபி கொடுத்துவிட்டு மீண்டும் பிலிருபின் அளவை செக் செய்து விட்டு வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்.
சில நேரங்களில், குழந்தை பால் குடிப்பதில்லை, அழுது கொண்டே இருக்கிறது, எடை குறைந்திருக்கிறது என்று சொல்லிக்கொண்டு மருத்துவரிடம் வருவார்கள். குழந்தையை டெஸ்ட் செய்தால் பிலிருபின் அதிகமாக இருப்பது தெரிய வரும்.
உடனே குழந்தைக்கு போட்டோதெரபி கொடுக்க வேண்டி இருக்கும். இதற்காகத்தான் பிரசவமானதும் குழந்தைக்கு பிலிருபின் அளவு செக் செய்யப்பட்ட பிறகே டிஸ்சார்ஜ் செய்வோம்.
போட்டோதெரபிக்கு பதில் சூரிய வெளிச்சத்தில் குழந்தையைக் காட்டினால் போதும் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சூரிய ஒளியின் மூலம் அதன் பலன் சருமத்தில் ஊடுருவுவது போதுமானதாக இருக்காது. அதாவது பிலிருபின் உடைந்து உடலில் இருந்து வெளியேறாது. அதற்காகத் தான் பிரத்யேகமான போட்டோதெரபி கொடுக்கப்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் மருத்துவரின் அறிவுரை இன்றி நீங்களாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News

0 கருத்துகள்