Header Ads Widget

Doctor Vikatan: சீக்கிரமே பருவமடைவதால், மெனோபாஸும் முந்திக்கொள்ளும் என்பது உண்மையா?

Doctor Vikatan: ஒரு பெண் சீக்கிரமே, அதாவது சராசரி வயதுக்கு முன்பே பூப்பெய்திவிட்டால், அவளுக்கு மெனோபாஸும் சீக்கிரமே வந்துவிடும் என்பது உண்மையா? 10-11 வயதில் பூப்பெய்வது அந்தப் பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.

டாக்டர் கார்த்திகா

10- 11 வயதில் பூப்பெய்துவதால் எந்தப் பிரச்னையும் வராது. ஆனால் அதுவே 8 வயதுக்கு முன்பே ஒரு பெண் குழந்தை பூப்பெய்திவிட்டால், அதை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதாவது 8- 10 வயதுக்குள் பூப்பெய்துவது சாதாரண நிகழ்வல்ல என்பதால் அவசியம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

இப்படி சராசரிக்கு முன்பாக இள வயதிலேயே பூப்பெய்துவதால் அந்தப் பெண்ணுக்கு மெனோபாஸும் சீக்கிரமே வருமா என்ற கேள்விக்கு சில ஆய்வுகள் 'ஆமாம்' என்கின்றன.

வேறு சில ஆய்வுகளோ, சீக்கிரமே பூப்பெய்துவதற்கும் சீக்கிரமே மெனோபாஸ் வருவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்கின்றன. பெண் குழந்தைகள் பிறக்கும்போதே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கரு முட்டைகளுடன் பிறக்கிறார்கள். அந்த முட்டைகளின் தரமும் எண்ணிக்கையும் வயதாக, ஆக குறைந்துகொண்டே வரும். இதை வைத்துப் பார்க்கும்போது சீக்கிரமே வயதுக்கு வருவதால், மெனோபாஸும் சீக்கிரமே வரலாம் என்று சொல்லப்படுகிறது.

மெனோபாஸ்

அப்படியே சீக்கிரமே மெனோபாஸ் வந்தாலும் அது ஒன்றிரண்டு வருடங்கள் முன்னதாக வரலாம் என்றுதான் சொல்லப்படுகிறது. மற்றபடி சீக்கிரமே வயதுக்கு வரும் பெண்கள், மெனோபாஸை நினைத்துக் கவலை கொள்ளத் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்