2023-ம் ஆண்டிற்கான JEE Mains தேர்வு ஜனவரி மாதம் 24-31 தேதிகளில் நடைபெற இருக்கிறது. பொறியியல் படிப்புக்காகத் தேசிய அளவில் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வின் முதல்நிலையில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அடுத்தகட்ட தேர்வான JEE Advanced-ஐ எழுதுவர். Advanced தேர்வுகள் ஏப்ரல் 6-12 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறும் மாணவர்கள் கலந்தாய்வின் மூலம் ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-12/612246c8-859e-44f3-a90f-a3872154d8ee/jeemain_2_16463085163x2.jpg)
JEE Mains நடைபெறும் அதே நாள்களில் சி.பி.எஸ்.இ தேர்வுகளும் நடைபெற இருக்கின்றன. இதனால் Mains தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி பல்வேறு மாணவர்களும், மாணவ நல அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருக்கின்றன. இதுகுறித்து குழந்தைகள் உரிமை காப்பாணையம் தேசிய தகுதி தேர்வாணையத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளது. மேலும், தேர்வில் கலந்துகொள்ள 75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. பொதுவாக நுழைவுத்தேர்வுகளுக்கான தேதிகள் நான்கு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் JEE Mains தேர்வுக்கான தேதிகள் ஒரு மாதத்துக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருப்பதாக மாணவர் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் JEE Mains தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் நம் மாணவர்களுக்குக் கூடுதல் சிக்கல் இருப்பதாக சில நாள்களுக்கு முன்னர் சர்ச்சை ஒன்று எழுந்தது. கொரோனா பாதிப்பின் காரணமாக 2021-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டு மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படாமல் வெறுமென பாஸ் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது. JEE தேர்வுக்கு விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண்ணைப் பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம். இதனால் தமிழ்நாட்டைப் போல 10-ம் வகுப்புத் தேர்வில் ஆல்-பாஸ் போடப்பட்ட பல மாநிலங்களின் மாணவர்களுக்கும் இந்தச் சிக்கல் எழுந்தது. இதையடுத்து இச்சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்திருந்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-08/3f161db2-61a9-4e3a-9234-0a0de8a2da49/IMG_20220824_WA0027.jpg)
இதைத்தொடர்ந்து தமிழக மாணவர்கள் JEE Mains தேர்வுக்கு விண்ணப்பிக்கையில் 10-ம் வகுப்பு மதிப்பெண்ணைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என அறிவித்திருக்கிறது தேசியத் தேர்வு முகமை. அவர்களின் செய்தி வெளியீட்டின்படி 2021-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களின் விண்ணப்பத்தில் மதிப்பெண் குறித்த எதுவும் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
JEE Mains தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜனவரி 12. www.nta.ac.in மற்றும் https://jeemain.nta.nic.in இணையதளங்களில் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
from Latest News
0 கருத்துகள்