மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஒன்பது மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், அதற்கான வேலைகளை ஏற்கெனவே பா.ஜ.க தொடங்கிவிட்டது. அதன் முன்னேற்பாடாக பா.ஜ.க-வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இதில், கர்நாடக சட்டசபைத் தேர்தல் உட்பட வரும் நாடாளுமன்றத் தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதில், 2024 -ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் திட்டம் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ``பிரதமர் மோடி இந்த கூட்டத்தின் மூலம் நம்மிடம் பல செய்திகளை பகிர்ந்திருக்கிறார். அதில் குறிப்பிடதக்கவைகளில் சிலதை கவனப்படுத்துகிறேன்.
நம்மிடம் 400 நாள்கள் உள்ளன. மக்களுக்கு சேவை செய்வதற்கான அனைத்தையும் செய்ய வேண்டும். சரித்திரம் படைக்க வேண்டும். 18-25 வயதுக்குட்பட்டவர்கள் மீது நமது கவனம் முழுமையாக செலுத்த வேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு சரித்திரம் மற்றும் முந்தைய அரசுகளின் தவறான நிர்வாகம் பற்றிய தகவல்களோ, அல்லது நாம் எப்படி நல்லாட்சியை நோக்கி நகர்கிறோம் என்பது பற்றி செய்திகளோ அவர்களுக்கு பரிச்சயமிருக்காது.
நாம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஜனநாயக வழிகளை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், நல்லாட்சியின் ஒரு பகுதியாக இருக்க அவர்களுக்கு உதவ வேண்டும். எல்லைப் பகுதிகள் உட்பட கிராமங்களின் அமைப்பை வலுப்படுத்துவதில் கட்சி கவனம் செலுத்த வேண்டும். அதன் தலைவர்கள் எல்லா தரப்பு மக்களையும் சந்திக்க வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினரான போஹ்ராக்கள், பாஸ்மந்தாக்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் தேர்தலை கருத்தில் கொள்ளாமல் அணுக வேண்டும்.
பா.ஜ.க இனி ஒரு அரசியல் இயக்கம் மட்டுமல்ல, சமூக-பொருளாதார நிலைமைகளை மாற்றும் ஒரு சமூக இயக்கம். இந்தியாவின் சிறந்த சகாப்தம் வரவிருக்கிறது. அதன் வளர்ச்சிக்காக நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார். இதை கவனத்தில் கொள்ளுங்கள்" எனப் பேசினார்.
from Latest News

0 கருத்துகள்