Header Ads Widget

டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா படுகொலை வழக்கு; 3000 பக்க குற்றப்பத்திரிகை... 100 பேர் சாட்சிகளாக சேர்ப்பு

டெல்லியில் கடந்த மே மாதம் 18-ம் தேதி மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா வால்கர் என்ற பெண் படுகொலைசெய்யப்பட்டார். ஷ்ரத்தாவுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த அஃப்தாப் பூனாவாலா அவரைக் கொலைசெய்து 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து, ஒவ்வொரு பகுதியாக எடுத்துச்சென்று காட்டில் போட்டார். உடலை வைப்பதற்காக பிரத்யேகமாக ஃபிரிட்ஜ் வாங்கியிருந்தான்.

ஷ்ரத்தா வழக்கு

ஷ்ரத்தா படுகொலைக்குப் பிறகும், தொடர்ந்து 10 நாள்களாக ஷ்ரத்தாவின் போன், கிரெடிட் கார்டுகளை அஃப்தாப் பயன்படுத்தி வந்தான். இந்தப் படுகொலை சம்பவம் கடந்த மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. கொலைசெய்யப்பட்ட ஷ்ரத்தாவின் நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் ஷ்ரத்தாவின் தந்தை மூலம் போலீஸில் புகார் செய்தனர்.

அதனை தொடர்ந்தே மும்பை போலீஸாரும், டெல்லி போலீஸாரும் இணைந்து விசாரணை நடத்தியதில் இந்தப் படுகொலையைக் கண்டுபிடித்தனர். அதையடுத்து, அஃப்தாப் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அவனிடம் விசாரணை நடத்தி, ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை எங்கு போட்டான் என்ற விவரத்தை கண்டுபிடித்தனர். அதோடு அஃப்தாப்புக்கு உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டிருக்கிறது.

மேலும் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புத்துண்டுகள் ஷ்ரத்தாவின் டி.என்.ஏ-வுடன் ஒத்துப்போனது. அதோடு ஷ்ரத்தாவைக் கொலைசெய்தது குறித்து அஃப்தாப் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

போலீஸ்

ஒப்புதல் வாக்குமூலம் இந்தக் குற்றத்தை நிரூபிக்க போதிய சாட்சியமாக இருக்காது என்பதால், குற்றப்பத்திரிகையோடு எலக்ட்ரானிக் ஆதாரங்கள் மற்றும் தடயவியல் ஆய்வு முடிவுகளும் குற்றப்பத்திரிகையோடு சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அதனடிப்படையில் போலீஸார் 3,000 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்திருக்கின்றனர். இந்தக் குற்றப்பத்திரிகையில் 100 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். குற்றப்பத்திரிகையை தற்போது சட்டவல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சட்டவல்லுநர்களின் ஆய்வுக்குப் பிறகு கோர்ட்டில் இது தாக்கல் செய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்