Header Ads Widget

Doctor Vikatan: பருவ வயதிலிருக்கும் பெண் குழந்தை.... மருத்துவ ஆலோசனை அவசியமா?

Doctor Vikatan: நான் சிங்கிள் பேரன்ட். என்னுடைய மகள் பூப்பெய்தும் வயதில் இருக்கிறாள். அவளுக்கு அந்தப் பருவத்துக்கான விஷயங்களை என்னால் சொல்லிக்கொடுக்க முடியாதநிலையில்  பூப்பெய்துவதற்கு முன்பே அவளை பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது சரியா? அவர்கள் தேவையற்ற பரிசோதனைகளைச் செய்வார்களோ என பயமாக இருக்கிறது.... அவளை குழந்தைகள்நல மருத்துவரிடம் காட்ட வேண்டுமா அல்லது மகளிர் மருத்துவரிடமா? நான் என்ன முடிவெடுப்பது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சாரதா

மகப்பேறு மருத்துவர் சாரதா

பெண் குழந்தை என்றால் 13 முதல் 15 வயதுக்குள் மகளிர் மருத்துவரிடம் முதல் கன்சல்ட்டேஷனுக்கு அழைத்துச் செல்லலாம். சில வேளைகளில் பெண் குழந்தையின் பெற்றோரால் சில விஷயங்களைக் குழந்தைக்குப் புரியவைக்க முடியாது. அந்நிலையில்  மகளிர் மருத்துவர் அந்தப் பொறுப்பை ஏற்பார். மேற்கத்திய நாடுகளில் பின்பற்றுவதுபோன்ற முறையை நம் நாட்டில் பின்பற்றுவதில்லை.  இங்கே பருவமடைந்த பிறகுகூட குழந்தைகள்நல மருத்துவர்களிடம் குழந்தைகளைக் காட்டும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

சில குழந்தைகள் 8, 9 வயதில்கூட பூப்பெய்துவதுண்டு. பொதுவாகவே பூப்பெய்திய பெண் குழந்தையை மகளிர் மருத்துவரிடம் ஒருமுறை அழைத்துச் செல்வது நல்லதுதான். அவர் அந்தக் குழந்தைக்கு பீரியட்ஸ் பற்றிய அடிப்படை விஷயங்களைப் புரியவைப்பதுடன், எது நார்மல் பீரியட்ஸ்,  எது அசாதாரணமானது என்று சொல்லி, நாப்கின் பயன்பாடு, அந்தரங்க சுகாதாரம் என எல்லாவற்றையும் சொல்லிக்கொடுப்பார். மற்றபடி, மிக இள வயதிலேயே பூப்பெய்தும் பெண் குழந்தையை மற்ற உடல்நலக் கோளாறுகளுக்கு குழந்தைகள்நல மருத்துவரிடமே காட்டலாம். சில பிரச்னைகளுக்கு குழந்தைகள்நல மருத்துவர்களே, குழந்தைகளை மகளிர் மருத்துவரிடம் காட்டப் பரிந்துரைப்பார்கள்.

பெண் குழந்தை

உதாரணத்துக்கு அந்தப் பெண் குழந்தைக்கு வெள்ளைப்படுதல் பாதிப்பு இருக்கலாம். மகளிர் மருத்துவரை அணுகும்போது அந்தப் பிரச்னையை அவரால் இன்னும் எளிதாகக் கையாள முடியும். குழந்தையை டெஸ்ட் செய்வது, இன்ஃபெக்ஷன் இருக்கிறதா என பார்ப்பதெல்லாம் எளிதாக இருக்கும். நீங்கள் நினைப்பதுபோல மருத்துவர் உங்கள் பெண் குழந்தைக்கு தேவையற்ற பரிசோதனைகளை எல்லாம் செய்ய மாட்டார் என்பதால் பயப்பட வேண்டாம்.

மற்றபடி குழந்தைக்கு பீரியட்ஸ் தவிர்த்த பிரச்னைகளுக்கு குடும்ப மருத்துவர் அல்லது குழந்தைகள்நல மருத்துவரிடமே காட்டலாம். 21 வயதுக்குப் பிறகு மீண்டும் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். எனவே உங்கள் குழந்தை பூப்பெய்தியதும் முதலில் மகளிர் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்