சென்னை வண்ணாரப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட காத்பாடா பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போவதாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீஸார் பைக் திருட்டு குறித்து விசாரித்தனர். இதற்காக பைக் திருடப்படும் இடஙகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவர், தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் அந்தப் பெண்ணை போலீஸார் தேடி வந்தனர்.
இந்தநிலையி்ல் பைக்கை திருடுவது, 16 வயது சிறுமி என்பதை போலீஸார் கண்டறிந்தனர். அதனால் அவரைப் பிடித்த போலீஸார், எதற்காக பைக்குகளைத் திருடுகிறாய் என்று விசாரித்தனர். அப்போது அவர், `எனக்கு சின்ன வயதிலிருந்தே பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. அதனால்தான் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வண்ணாரப்பேட்டை பகுதியில் தெருக்களில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகளை எடுத்து பெட்ரோல் காலியாகும் வரை ஓட்டுவேன். எந்த இடத்தில் பெட்ரோல் இல்லாமல் பைக் நிற்கிறதோ அங்கு அந்தப் பைக்கை நிறுத்திவிட்டு வந்து விடுவேன்’ என்று கூலாக கூறினார். இதையடுத்து சிறுமி அளித்த தகவலின்படி நான்கு பைக்குகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் பைக் திருட்டு தொடர்பாக சிறுமி மீது வழக்கு பதிவு செய்து அவரை காப்பகத்தில் சேர்த்தனர்.
சிறுமி ஒருவர், பைக் திருட்டு வழக்கில் சிக்கிய சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
from Latest News

0 கருத்துகள்