Header Ads Widget

கிராமி விருது வென்றார் வயோலா டேவிஸ்; எம்மி, கிராமி, ஆஸ்கர், டோனி ஆகிய 4 விருதுகளை வென்று சாதனை!

இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் 2023-ம் ஆண்டிற்கான 65வது `கிராமி விருதுகள்' வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் பிப்ரவரி 5, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், சிறந்த பாடல் ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர் என இசைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

வயோலா டேவிஸ்

இதில் `சிறந்த ஆடியோ புக், நரேஷன் அண்ட் ஸ்டோரிடெல்லிங் ரெகார்டிங்’ பிரிவில், நடிகை வயோலா டேவிஸ் (Viola Davis) தனது  வாழ்வின் நினைவுகளை மையப்படுத்தி உருவாக்கிய `ஃபைண்டிங் மீ’ என்ற ஆடியோ பதிவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டது.

தன் சுய வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்ட இந்தப் புத்தகத்தில், ரோட் ஐலேண்டில் தான் வளர்ந்தபோது அனுபவித்த இனவெறி கொடுமைகளையும், அவற்றிலிருந்து தான் நடிகையாக மாறிய தருணங்களையும் குறிப்பிட்டு இருந்தார்.   

அமெரிக்காவின் நான்கு முக்கிய பொழுதுபோக்கு விருதுகளாக EGOT கருதப்படுகிறது. எம்மி, கிராமி, ஆஸ்கர் மற்றும் டோனி விருதுகளின் சுருக்கமே EGOT. ஏற்கெனவே எம்மி, ஆஸ்கர் மற்றும் டோனி விருதுகளைப் பெற்றிருந்த டேவிஸ், தற்போது கிராமி விருதையும் வென்றிருக்கிறார். 

இதனால் `எம்மி, கிராமி, ஆஸ்கர் மற்றும் டோனி விருது'களின் வெற்றியாளர் பட்டியலில், 57 வயதான டேவிஸ் 18வது நபராக இடம் பிடித்துள்ளார். இவரே, இந்தப் பட்டியலில் இடம்பெறும் மூன்றாவது கறுப்பின பெண்.

2015-ல் `ஹவ் டு கெட் அவே வித் மர்டர்’ என்ற தொலைக்காட்சி தொடருக்காக எம்மி விருது பெற்றார். 2016-ல் வெளியான `ஃபென்ஸஸ்’ திரைப்படத்தில் நடித்ததற்காக, 2017-ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். `ஃபென்ஸஸ்’ மற்றும் கிங் ஹெட்லே II படங்களில் நடித்ததற்காக டோனி விருதை வென்றார்.  

கிராமி விருதை பெற்றுக் கொண்ட வயோலா டேவிஸ் கூறுகையில், `ஆறு வயது வயோலாவைக் கௌரவிப்பதற்காகவும், அவளுடைய வாழ்க்கை, அவளுடைய மகிழ்ச்சி, அவளுடைய அதிர்ச்சி உள்ளிட்ட எல்லாவற்றையும் கௌரவிக்கவும் நான் இந்தப் புத்தகத்தை எழுதினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

வயோலா டேவிஸின் வெற்றிக்குப் பலரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்… 

வாழ்த்துகள் வயோலா டேவிஸ்! 



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்