Doctor Vikatan: என் வயது 59. கண்ணில் புரை வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். இதற்கு உடனடியாக ஆபரேஷன் செய்தாக வேண்டுமா? தாமதப்படுத்தினால் பிரச்னையா?
-Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.
கேட்டராக்ட் என்று சொல்லப்படுவதுதான் கண்புரை எனப்படும் பாதிப்பு. கேட்டராக்ட் என்பது 'கேட்டராக்டா' என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. அதற்கு 'நீர்வீழ்ச்சி' என்று அர்த்தம். கண்ணுக்கு முன் நீர்வீழ்ச்சி மாதிரி தோற்றமளிக்கும். அதன் காரணமாக பார்வை மங்கலாக இருக்கும். இதையே கேட்டாராக்ட் பாதிப்பு என்கிறோம்.
கண்புரை பாதிப்பில் பல நிலைகள் உள்ளன. 'இம்மெச்சூர்டு' எனப்படும் முதிர்ச்சியடையாத நிலையிலிருந்து 'மெச்சூர்டு' எனப்படும் முதிர்ந்த நிலை வரை அதை வகைப்படுத்தலாம். கண்புரை பாதிப்பு வந்துவிட்டதன் அறிகுறியாக பார்வை மங்கலாகத் தொடங்கும். பார்வையில் பள்ளங்கள் போல தெரியலாம்.
தூரப்பார்வை குறைந்துவிடும். இப்படி கண்புரை பாதிப்பின் அறிகுறிகள் நிறைய... அறிகுறியை உணர்ந்ததும் கண் மருத்துவரை அணுகுவது சரியானது. அதே நேரம், கண்புரை பாதிப்பு என்பது முதிர்ச்சியடைந்த நிலையை எட்டும்வரை அதற்கு அவசரமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் மருத்துவர்கள், கண்புரையானது, முற்றிலும் முதிர்ச்சியடையட்டும் என்று காத்திருக்கச் சொல்ல மாட்டோம். கண்புரை பாதிப்பைக் கண்டறிந்ததுமே அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைப்போம்.
நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கண்புரை பாதிப்பு அதிகமாகவும், சராசரி வயதைவிட சீக்கிரமாகவும் பாதிக்கலாம். இன்றைய நவீன மருத்துவத்தில் லேசர் மூலம் கண்புரை நீக்கப்பட்டு, பார்வையை முழுமையாகத் திரும்பப் பெறவைக்க முடியும்.
எனவே எமர்ஜென்சியாக நினைத்து சிகிச்சை எடுக்க வேண்டிய பிரச்னை இல்லை இது என்றாலும், அது சம்பந்தப்பட்ட நபரின் பார்வையைப் பொறுத்து தீர்மானிக்கப்பட வேண்டும். அந்த நபர், பார்வை மிகவும் மங்கலானது போல உணர்ந்தால், உடனடியாக கண் மருத்துவரை அணுகி, அறுவை சிகிச்சை மேற்கொண்டு, உடனே வீட்டுக்குத் திரும்பிவிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News

0 கருத்துகள்