Header Ads Widget

`உங்க வாழ்க்கையில ஒளியேற்ற வந்திருக்கேன்!' - அரசு வேலை ஆசைக்காட்டி ரூ.80 லட்சம் மோசடி செய்த நபர்

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபிரான்சிஸ் ஜெரால்டு (எ) சிவக்குமார். இவர், புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, கறம்பக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்களைத் தேடிச் சென்று, அவர்களுக்கு அரசுப் பணி வாங்கிக் கொடுப்பதாக ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார். அதன்படி ஒவ்வொருவரிடமும் சுமார் 5 லட்சம் ரூபாய் வீதம், 15-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 80 லட்சம் ரூபாய் வரையிலும் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறார். பணம் கொடுத்தவர்கள், தன்னை நம்புவதற்காக, தலைமைச் செயலாளர் இறையன்பு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, உமா மகேஸ்வரி போன்ற பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரின் கையெழுத்து, அரசின் முத்திரை அடங்கிய போலி நியமன ஆணைகளை அவர்கள் கையில் கொடுத்து மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.

மோசடி

`இன்னும் ஒருவாரத்தில், அல்லது ஒரு மாதத்தில் பணியில் சேர்ந்துவிடலாம்' என்று கூறியே இரண்டு வருடங்களாகப் பணம் கொடுத்தவர்களை இழுத்தடித்து வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் தாங்கள் ஏமாந்ததை உணர்ந்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள், புதுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியை நாடினர். பாதிக்கப்பட்டவர்களோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேர்ந்து எஸ்.பி-யிடம் மனு கொடுத்ததோடு, அவர்களுக்கு ஆதரவாக இன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில்தான், மோசடியில் ஈடுபட்ட ஃபிரான்சிஸ் ஜெரால்டினை புதுக்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார், சென்னையில் கைதுசெய்திருக்கின்றனர்.

மோசடி நபரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருவதாக கூறியதையடுத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சிவானந்தம் என்பவரிடம் பேசினோம். ``பாதிக்கப்பட்ட அனைவரும், ஒரு வகையில் உறவினர்கள். `ஏழ்மை நிலையிலுள்ள உங்க எல்லாருக்கும் அரசு வேலை வாங்கிக் கொடுத்து, உங்க வாழ்க்கையில ஒளி ஏத்துறதுக்குத்தான் நான் வந்திருக்கேன். நம்பி கொடுங்க, முடியலைன்னா பணத்தை திருப்பிக் கொடுத்திடறேன்'னு சொன்னாரு. அரசு முத்திரை, உயர் அதிகாரிங்க கையெழுத்தோட லெட்டர் எல்லாம் கொடுத்ததாலதான், நம்பி பணத்தைக் கொடுத்தோம்.

போராட்டம்

அதற்கப்புறம்தான் எங்க உறவினர்களையும் அறிமுகப்படுத்திவிட்டோம். எல்லாமும் போலி லெட்டர் என்று இப்போதான் எங்களுக்குத் தெரிஞ்சது. இன்னைக்கு எல்லாருமே, ஏமாந்து நிற்கிறோம்" என்றார் வேதனைக் குரலில்.

இது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் விசாரித்தபோது, "மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரைக் கைதுசெய்திருக்கிறோம். தமிழகம் முழுவதும் இதுபோன்று மோசடிகளில் ஈடுபட்டிருக்கிறாரா என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றனர்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்