விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கலிவு (80), இவrin மனைவி பெயர் மணி(70). இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமானதை தொடர்ந்து அவரவர் தனித்தனியாக வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முந்தினம் மாலை கலிவு - மணி தம்பதியினர் வழக்கம்போல் அவரின் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அவர்களுடைய பேரன் (மூன்றாவது மகனின் மகன்) அருள் சக்தி அவர்களை பார்க்க வந்திருந்தாராம். பின்னர் இரவுநேரம் ஆகியும் இந்த தம்பதி வீட்டை விட்டு வெளியே வராததை அறிந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது வயதான தம்பதியினர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். எனவே 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவர்களை சோதித்துப் பார்த்து உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், விழுப்புரம் தாலுகா போலீஸாருக்கு தகவல் சென்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீஸார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து கலிவு தம்பி ராசு கொடுத்த புகாரின்படி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மாலை தாத்தா-பாட்டி வீட்டிற்கு வந்திருந்த பேரன் அருள் சக்தி, கையில் குளிர்பானம் வாங்கி சென்றதாக சொல்லப்படுகிறது. தாத்தா பாட்டியின் இறப்பிற்கு பின்னர் அவரை போலீஸாரால் தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ளது. எனவே, அவருக்கு தாத்தா - பாட்டியுடன் சொத்து பிரச்னை ஏற்பட்டு குளிர்பானத்தில் விஷம் கலந்துக் கொடுத்து கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? உள்ளிட்ட சந்தேக கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தனிப்படை அமைத்து அருள் சக்தியை தேடி வருகின்றனர்.
அதேபோல், வயதான தம்பதியரின் இறப்பிற்கான உண்மையான காரணம் விசாரணை மற்றும் உடற்கூறாவின் முடிவிலேயே தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
from Latest news

0 கருத்துகள்