Header Ads Widget

'தவளை சத்தம் போட்டு மழை பெய்யுமா; அண்ணாமலை பட்டியல் வரட்டும்!' - அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி தொடக்கவிழா நாகர்கோவில் பால் பண்ணை சந்திப்பில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான மகேஷ் முன்னிலையில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் கலந்துகொண்டார். உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்தபின் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் உடன்பிறப்பாய் இணைவோம், தமிழராய் தலைநிமிர்வோம் என்ற முழக்கத்தோடு தி.மு.க புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம்.

வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. படுக்கை வசதிகளும் போதுமான அளவு இருப்பு உள்ளது. நாம் கொரானா பரவலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். மக்கள் அச்சப்பட தேவை இல்லை.

தி.மு.க உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

2021-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப துறை ஒற்றை இலக்க எண்ணில் தான் வளர்ச்சி பெற்றிருந்தது. இப்போது அந்த இலக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது. 2023-ம் ஆண்டு 26.6 சதவீத இலக்கை எட்டி உள்ளது. சாப்ட்வேர் ஏற்றுமதி 2 லட்சம் கோடி என்ற அளவை எட்டி உள்ளோம். கலைஞர் ஆட்சியில் ஐ.டி. பிரிவில் புரட்சி இருந்து வந்த நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி பிடித்துள்ளது.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறியுள்ளார். நம்ம ஊரில், 'மாக்கான் கரைஞ்சு மழைபெய்யுமா' என ஒரு பழமொழி சொல்வார்கள். தவளை சத்தம் போட்டு மழை பெய்யுமா என்பதுதான் அந்த பழமொழி. இதையெல்லாம் நீங்களே புரிந்து கொள்ள வேண்டும்.

உறுப்பினர் படிவம் வழங்கல்

அண்ணாமலை சொன்னதுபோல பட்டியல் வரட்டும், தி.மு.க-வுக்கு மடியில் கனம் இல்லை, அதனால் மனதில் பயம் இல்லை. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்ட மாநாட்டில் கலந்து கொண்டார். கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார். சனாதனவாதிகள் சாதியால் மக்களை பிளவுபடுத்தி மூடநம்பிக்கையை ஏற்படுத்தி மக்களை நம்பவைத்து கழுத்தை அறுத்தார்கள் என்பதை மக்கள் பேச தொடங்கி உள்ளனர். சனாதனத்தை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டதால், அவர்கள் சனாதன ஆட்சி என்ற பேச்சை குறைத்துள்ளனர். ராகுல்காந்தி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பார்த்து ஊரே சிரிக்கிறது. இதனால் ராகுல்காந்தியின் பெயருக்கு உயர்வுதான் வந்துள்ளது. இந்த வழக்கில் அடிப்படையே கிடையாது. வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு அப்பீல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது" என்றார்.



from India News https://ift.tt/dUTX5QB
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்