Header Ads Widget

TNPL 2023: 60 பநதகளல 112 ரனகள' அசததய அஜதஷ; பஙகளர எகஸபரஸ கவ வநத கத!

2023 டி.என்.பி.எல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில், கோவை அணியும் நெல்லை அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்களை எடுத்தது.

அடுத்து களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற்றது. இதில் நெல்லை அணியின் பேட்ஸ்மேனான குருசுவாமி அஜிதேஷ், 60 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து அனைவரையும் வியக்க வைத்தார். இதில் 7 பௌண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடித்து அசத்தியிருந்தார். இதுவே இந்த நடப்பு 2023 டி.என்.பி.எல் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம்.

அஜிதேஷ்

இந்தச் சாதனையைப் படைத்துள்ள அஜிதேஷ், டி.என்.பி.எல் என்னும் தொடரின் மூலமாக புதிய நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். கிரிக்கெட்டிற்காக பெங்களூரில் இருந்து கோவைக்கு குடிபெயர்ந்த அஜிதேஷின் கிரிக்கெட் பயணத்தைப் பார்ப்போம் .

20 வயதான அஜிதேஷ், 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதியன்று பெங்களூரில் பிறந்தார். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தந்தை குருசுவாமி, கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். தன் இரு மகன்களையும் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களாக உருவாக்க வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிருந்தார். தந்தையின் தூண்டுகோலால், சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்துள்ளார் அஜிதேஷ். 4 வயதிலேயே பேட்டுடன் தூங்கும் அளவிற்கு, கிரிக்கெட்டின் மீது அவ்வளவு ஆர்வம். தந்தை வீட்டிலிருந்து பயிற்சி அளித்து வந்தநிலையில், 7 வயதில் கர்நாடகா கிரிக்கெட் அகாடமியில் (KIOC) சேர்ந்து பயிற்சி பெற்றார். 

அஜிதேஷ்

தொடர்ந்து தீவிரமாகப் பயிற்சி செய்து வந்த இவர், விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். பல மணிநேரம் தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு, அதிரடியான ஷாட்களை விளையாட கற்றுக் கொண்டார். இக்கட்டான சூழலில் சிக்ஸர்களையும் பௌண்டரிகளையும் விளாசுவது தான், இவரின் சிக்னேச்சர் ஸ்டைல். 14 வயதிற்குட்பட்ட கர்நாடக கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வந்தார். இதற்குப் பிறகு, அண்டர்-16 அணியிலும் இடம்பெற்று விளையாடினார். ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால், மனதளவில் சோர்வடைந்த அஜிதேஷிற்கு தந்தையின் ஊக்கம் ஆறுதலாய் அமைந்தது. தந்தையின் ஊக்கத்தால் கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார். அப்போது தான், நெல்லை ராயல் கிங்ஸ் அணி பயிற்சியாளரின் பார்வை  அஜிதேஷின் மீது பட்டது. இதற்கு அடுத்ததாக, கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில், ஸ்காலர்ஷிப்புடன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால், அஜிதேஷின் குடும்பத்தினர் உடனடியாக கோயம்புத்தூருக்கு குடிபெயர்ந்தனர்.

அஜிதேஷ்

நெல்லை அணியின் பயிற்சியாளரான A.G.குருசுவாமி, தொடர்ந்து தன் கண்காணிப்பில் பயிற்சி அளித்து வந்துள்ளார். இதனால் கல்லூரிகளுக்கு இடையேயான தொடர்களில் சிறப்பாக விளையாடி வந்த அஜிதேஷிற்கு, டி.என்.பி.எல் தொடரில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. "ஏ.ஜி.குருசுவாமி சார், நிறைய உதவி செய்தார். அஜிதேஷின் இந்த மாற்றத்திற்கு அவர் தான் காரணம். தொடர்ந்து பயிற்சி அளித்து, அஜிதேஷின் திறமையை மேம்படுத்தினார். டிஎன்பிஎல் தொடரில் விளையாடுவதற்கு அவர்தான் காரணம்.

நானும் என் மனைவியும் அஜிதேஷின் கிரிக்கெட் கரியருக்காக, எல்லாவற்றையும் செய்வதற்குத் தயாராக இருந்தோம். தற்போது கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ள அவரின் தம்பிக்கும் இதே நிலை தான்.” என அஜிதேஷின் தந்தை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.நேற்று ஆடிய ஆட்டத்தைப் போலவே, கடந்த 2022 டிஎன்பிஎல் தொடரிலும் கோவை அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் அதிரடியாக விளையாடியிருந்தார். 13 பந்துகளில் 38 ரன்கள் எடுத்ததுடன், 5 சிக்ஸர்களையும் விளாசியிருந்தார். இதில் இவரின் ஸ்ட்ரைக் ரேட் 292.31. 

அஜிதேஷ்

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில், 2023 ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அஜிதேஷை எந்த அணியும் வாங்கவில்லை. ஆனால், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் அஜிதேஷ் நிச்சயமாக விளையாடுவார் என சொல்ல முடியும். நேற்றைய ஆட்டமே, இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அடித்தளமாக அமைந்துள்ளது என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

வாழ்த்துக்கள் அஜிதேஷ்!



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்