Doctor Vikatan: வெஜைனா பகுதியை பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த நீரில் கழுவினால் இன்ஃபெக்ஷன் மற்றும் அரிப்பு வராது என்கிறார்களே... உண்மையா? அந்தரங்க உறுப்பில் அரிப்பு வருவது யூரினரி இன்ஃபெக்ஷனின் அறிகுறியா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா
வெஜைனா தொடர்பான தொற்றுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் கொண்டு கழுவுவதெல்லாம் சரியான விஷயமே அல்ல. இப்படியெல்லாம் செய்தால் வெஜைனா பகுதி புண்ணாகும். மருத்துவர்கள் யாரும் இதையெல்லாம் பரிந்துரைப்பதில்லை. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு இப்படிப்பட்ட தவறான சுய மருத்துவத்தையெல்லாம் பின்பற்றாதீர்கள்.
வெஜைனா பகுதியில் ஏற்படும் அரிப்புக்கு சுகாதாரமின்மையும் ஒரு காரணமாக இருக்கும். அந்தப் பகுதியை சாதாரண தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தாலே போதுமானது. அதைத் தாண்டி அதற்காக கிருமி நாசினியோ, வேறு மருந்துகளோ தேவையில்லை.
வெஜைனா பகுதியில் இயற்கையிலேயே நல்ல கிருமிகள் இருக்கும். அவை தொற்றுக்கு எதிராகப் போராடக்கூடியவை. சுத்தம் செய்வதாக நினைத்துக்கொண்டு வெஜைனா பகுதியில் சோப் மாதிரியான பொருள்களைப் பயன்படுத்துவதால், நல்ல கிருமிகளை நாமே அழித்துவிடுவோம்.
வெஜைனா பகுதியை ஈரமின்றி உலர்வாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அடிக்கடி ஈரமாகிறது என்றால் உள்ளாடையை மாற்ற வேண்டும். வெஜைனா பகுதியில் ஏற்படும் அரிப்பும் யூரினரி இன்ஃபெக்ஷனுக்கான அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம்.
சிறுநீர்த்தொற்றானது வெஜைனா பகுதிக்குப் பரவலாம். வெஜைனா பகுதியில் ஏற்படும் தொற்றானது சிறுநீரகங்களை பாதிக்கலாம். இரண்டும் அருகருகே இருப்பதுதான் காரணம்.
எனவே அரிப்புக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும். பீரியட்ஸ் அல்லாத நாள்களில் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கிறதா என்றும் பாருங்கள். அதன் காரணமாகவும் அரிப்பு இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும்தான் சரியான தீர்வே தவிர, சுய மருத்துவம் அல்ல.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest news

0 கருத்துகள்