ஜோமாட்டோ நிறுவனம் கடந்த 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில் ‘கச்ரா’ என்ற 'லகான்' படத்தின் கதாபாத்திரத்தை வைத்து ஜாதிய பார்வையுடன் விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
அதாவது 2001-ம் ஆண்டு ஆமிர் கான் நடிப்பில் வெளியான ‘லகான்’ திரைப்படத்தில் ‘கச்ரா’ (Kachra) என்ற தலித் கதாபாத்திரத்தில் ஆதித்ய லக்கியா நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்தைத் தனது வீடியோவில் பயன்படுத்திக்கொண்ட ஜோமாட்டோ அவரை குப்பையாகச் சித்திரித்திருந்தது. 'லகான்' படத்தில் தலித்தாகக் காட்டப்பட்ட கதாபாத்திரத்தை இந்த வீடியோவில் குப்பை போலச் சித்திரித்திருக்கின்றனர் என்று பலரும் அந்த விளம்பரத்திற்குக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து #BoycottZomato என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர்.
அந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜோமாட்டோ நிறுவனம் விளக்கம் ஒன்றையும் அளித்து அவற்றை சமூக வலைதளங்களில் இருந்து அகற்றிவிட்டது. இந்நிலையில் அந்த விளம்பரத்தில் நடித்த ஆதித்யா லக்கியா இதுதொடர்பாக பேசியிருக்கிறார். “நான் இதனை எதிர்பார்க்கவில்லை. விழிப்புணர்வு நோக்கத்துடன்தான் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டது.
ஆனால் அவை சர்ச்சையாகி தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் பாசிடிவ் ஆன ஒரு விஷயத்தைதான் கொடுக்க முயற்சி செய்தோம். ஆனால் அவை எங்களுக்கு எதிர்மறையாக அமைந்துவிட்டது. குறிப்பிட்ட பிரிவினரின் மனதைப் புண்படுத்தியிருந்தால், மன்னிப்பு வேண்டுமானாலும் கேட்கிறேன். ஒரு நடிகனாக நான் வேற என்ன சொல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.
from Latest news

0 கருத்துகள்