Header Ads Widget

கனவு - 105 | `உலகியநல்லூர் புத்தர்' டு `பிரைட் வாக்’ | கள்ளக்குறிச்சி - வளமும் வாய்ப்பும்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளன. உலக அளவில் புகழ்பெற்றுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா, பழம்பெரும் உலகியநல்லூர் புத்தர் கோயில் ஆகியவற்றுடன் கூடுதல் அம்சங்களை சேர்ப்பதன் வழியே சுற்றுலாவை மேம்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தை அடையலாம்.

உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள கூவாகம் எனும் இடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவுக்குத் தனிச் சிறப்பு உண்டு. இந்தியாவின் புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலுள்ள திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, இங்கு வழிபாடு செய்கிறார்கள். சுமார் 18 நாள்கள் நடைபெறும் கூவாகம் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகின்றனர். ஆண்டின் குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே நடைபெறும் இந்தத் திருவிழாவை லட்சக்கணக்கானோர் கண்டுகளிக்கும்படி செய்யலாம். அதற்கான கூடுதல் வசதிகளை அங்கே ஏற்படுத்தித் தரலாம்.

கூவாகம் கூத்தாண்டவர் கோயில்

சித்திரைத் திருவிழா கொடியேற்றம், சாமி திருக்கண் திறத்தல், திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வு, மிஸ் கூவாகம் அழகிப் போட்டி, திருத்தேரோட்டம், அரவாண் களப்பலி உள்ளிட்ட நிகழ்வுகளின்போது அங்குள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழியும். அந்த சமயத்தில் விடுதிகள் டிமாண்டைப் பொருத்து கூடுதல் கட்டணங்களையும் வசூலிப்பதால், பெரும்பாலானோருக்கு தங்குவதற்கான போதிய இடவசதி கிடைப்பதில்லை. இதனைத் தவிர்க்கும் வகையில் கேரவேன் சேவையை இந்தத் திருவிழாவின்போது அளிக்கலாம். இதற்காக டெம்போ ட்ராவலர், பேருந்துகளைக் கேரவேனாக மாற்றம் செய்து, இந்தச் சேவையினை வழங்கலாம்.

பொதுவாக டெம்போ ட்ராவலர்களையும் பேருந்துகளையும் கேரவேன்களாக மாற்றி, சேவை அளிப்பது சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்திருக்கிறது. இத்தகைய கேரவேன்களில் ஏசி வசதியுடன்கூடிய படுக்கையறை, ஃப்ரீ வைஃபை (Free Wifi), டிவி, மேக்கப் டெஸ்க், கழிவறை உள்ளிட்ட வசதிகளோடு உருவாக்குகிறார்கள். ஒரு பேருந்தை வாங்கி, அதை கேரவேனாக மாற்ற ரூபாய் 30 லட்சம் ரூபாய் வரையில் செலவாகலாம். புதிதாக விடுதிகள் கட்ட அதிக முதலீடு தேவைப்படும். மேலும் அதன் பராமரிப்பு உள்ளிட்ட செலவும் அதிகம்.

ஆனால், டெம்போ, பேருந்துகளை கேரவேன்களாக மாற்ற முதலீடும் குறைவு, பராமரிப்புச் செலவும் குறைவு. மேலும் டெம்போ கேரவேன்களில் 5 பேர் வரையும் பேருந்து கேரவேன்களில் 10 பேர் வரையும் தங்கலாம். வசதி மற்றும் தரத்திற்கேற்ப டெம்போ கேரவேன்களில் நாள் ஒன்றுக்கு 7,000 ரூபாய் முதல் 20,000 வரை வாடகை வசூலிக்கிறார்கள். எனவே, கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் வசதியின் தன்மைக்கேற்ப கட்டணம் நிர்ணயம் செய்து, கேரவேன் சேவை அளித்தால் கோடிகளில் வருமானம் ஈட்டலாம்.

உலகம் முழுக்க பல்வேறு விஷயங்களுக்கான புகழ்பெற்ற குழுக்கள் உள்ளன. அவ்வகையான குழுக்களில் ஒன்று ‘எல்ஜிபிடிக்யூஐஏ+’ (LGBTQIA+ (L-Lesbian, G-Gay, B-Bisexual, T-Transgender, Q-Queer, I-Intersex, A-Asexual and +-coming up new identities). இது மனித இனத்துக்குள் பாலின ஈர்ப்பு வகையினரால் ஒருங்கிணைக்கப்பட்ட குழு. இதிலுள்ள ஒவ்வோர் எழுத்தும் ஒரு குறிப்பிட்ட நடத்தை அல்லது குணத்தைக் குறிக்கும். குறிப்பாக, லெஸ்பியன் (Lesbian) பெண்கள்மீது பாலின ஈர்ப்பு கொள்ளும் பெண்ணை, தன்பாலின ஈர்ப்பு கொண்ட பெண் என்று வகைப்படுத்தப்படுகிறது. இதனை தன்பாலின ஈர்ப்பாளர் என்ற பிரிவிலும் சேர்க்கிறார்கள். கே (Gay) என்பது ஆண்கள்மீது பாலின ஈர்ப்பு கொள்ளும் ஆணை, தன்பாலின ஈர்ப்பு கொண்ட ஆண் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். இதையும் தன்ப்பாலின ஈர்ப்பு என்று அழைக்கிறார்கள். (Bisexual) தன்னுடைய பாலினத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பிற பாலினத்ததவர்களிடம் ஈர்ப்பு கொள்ளும் தன்மையை இருபாலின ஈர்ப்பு என்று அழைக்கிறார்கள்.

பிறப்பால் ஆணாகவும், பின்னர் உடலில் ஏற்படும் மாற்றங்களால் தங்களை பெண்ணாகவும் உணருபவர்களை திருநங்கை என்றும், பிறப்பால் பெண்ணாகவும் பின்னர் உடலியல் மாறுபாடுகளால் தன்னை ஆணாக உணருபவரை திருநம்பி என்றும் வகைப்படுத்துகின்றனர். திருநங்கை மற்றும் திருநம்பி ஆகிய இருவகையினரையும் ஒன்றிணைத்து ட்ரான்ஸ்ஜென்டர் (Transgender) என்கிறார்கள்.

ஆண், பெண் என்ற பாலினத்துக்கு அப்பாற்பட்டவராக தன்னை உணருபவரை ‘க்வர்’ (Queer) என்ற பிரிவில் சேர்க்கிறார்கள். ஆண்-பெண் என்ற பாலின உறுப்புகளை சேர்த்தோ அல்லது அந்த உறுப்புகள் இன்றியோ இருப்போர் இன்டர்செக்ஸ் (InterSex) வகையினராக கருதப்படுகிறார்கள். எந்தப் பாலினத்தின்மீதும் ஈர்ப்பு இல்லாதோர் ஏசெக்ஸூவல் (Asexual) என்று அழைக்கப்படுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக வரும் பிளஸ் (+) வரும் காலங்களில் இன்னும் மாறுபட்ட பாலின ஈர்ப்பினர் உருவானால் அல்லது கண்டறியப்பட்டால் அவர்களையும் இந்தக் குழுவில் இணைத்துக்கொள்வார்கள். அதற்காகவே பிளஸ்!

இந்த ‘எல்ஜிபிடிக்யூஐஏ+’ குழுக்களானது உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட சில நாள்களில் ஒன்றுகூடி தங்களின் பாலின சமத்துவம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த பிரமாண்ட ஊர்வலங்கள் நடத்தி, தங்களின் இருப்பை உலகுக்கு எடுத்துரைக்கிறார்கள். அந்த ஊர்வலத்தை பிரைட் வாக் (Pride Walk) என்ற பெயரில் நடத்துகிறார்கள். அந்த வகையில் ஆண்டுதோறும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ‘நியூயார்க் சிட்டி பிரைட் மார்ச்’ (New York City Pride March) என்றும், சான்பிரான்சிஸ்கோவில் ‘சான்பிரான்சிஸ்கோ பிரைட் பரேட்’ (San Francisco Pride Parade) எனவும் இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் நடைபெறும் நிகழ்வுக்கு ‘லண்டன் பிரைட் பரேட்’ (London Pride Parade) என்றும் வெவ்வேறு பெயர்களில் நடத்துகிறார்கள். இந்த நிகழ்வுகளில் லட்சக்கணக்கில் மக்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வுகளின் வழியே ‘எல்ஜிபிடிக்யூஐஏ+’ குழுக்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வதற்கான வழியாகவும், இத்தகைய குழுக்கள் ஒன்றுகூடி தங்கள் அடையாளங்களை கொண்டாடுவதற்கான வழியாகவும் கடைபிடிக்கிறார்கள்.

சென்னையில்கூட அண்மையில் ‘சென்னை ரெயின்போ பிரைட் அண்ட் செல்ப் ரெஸ்பெக்ட் வாக்’ (Chennai Rainbow Pride and Self Respect Walk) என்ற பெயரில் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். உலகம் முழுக்க பிரபலமாக உள்ள எல்ஜிபிடிக்யூஐஏ+ குழுக்கள்போல திருநங்கைகள் பங்கேற்கும் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவிலும் திருநங்கையர் பிரைட் வாக் (Pride Walk) நடத்தப்பட வேண்டும். இதை லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் நிகழ்வாக மாற்றியமைக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள திருநங்கையர்கள், திருநம்பிகள் பங்கேற்று தங்களது பாலின சமத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவும், தங்கள் அடையாளத்தை ஏற்றுக்கொள்வதற்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கும் இது வழிவகுக்கும். மேலும், இந்தப் பேரணியின் மூலமாக கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உலகியநல்லூரில் சுமார் 4 அடி உயர புத்தர் சிலை ஒன்று அண்மையில் பௌத்த பிட்சுகளால் கண்டறியப்பட்டிருக்கிறது. 12-ம் நூற்றாண்டில் அந்தப் பகுதியை ஆண்ட பொன்பரப்பின வாணகோவரையன் எனும் குறுநில மன்னரால் இது அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும், வாணகோவரையன், சோழ மன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் படைத் தளபதியாக இருந்தவர் என்றும், அவரது ஆட்சிக்காலத்தில் சைவம், வைணவம், சமணம், பெளத்தம் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக விளங்கியதாகவும், காலப்போக்கில் பெரும்பாலான மதங்களும் அதைச் சார்ந்த கோயில்களும் அழிந்துவிட்டதாகவும் தெரியவருகின்றன. அவற்றில் சில எச்சங்கள் அவ்வப்போது கண்டறியப்படுகின்றன. அப்படியாக பெளத்த மதத்தைச் சேர்ந்த புத்தர் கோயில் சிதிலமடைந்து, புத்தர் சிலை மட்டும் எஞ்சியிருக்கிறது என வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் குறிப்பாக சீனா, ஜப்பான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இன்றளவும் புத்தரை வணங்கும் சீடர்கள் அதிகரித்தே வருகின்றனர். புத்தர் கோயில்களும் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் கவரப்பட்டே வருகிறது. அந்த வகையில் உலகியநல்லூரில் கண்டறியப்பட்டுள்ள புத்தர் சிலையை பிரபலப்படுத்தி, அங்கே சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கலாம்.

புத்தரைப் போற்றி, வணங்கும் சீனாவில் புத்தர் கோயில்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒன்று, ஹாங்சோ (Hangzhou) எனும் இடத்தில் உள்ள காட்டின் பகுதியில் அமைந்துள்ள புத்தர் கோயிலின் பெயர் லின்யின் (Linyin). இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலை கட்டியவர் ஓர் இந்தியர். லின் என்றால் ஆன்மா புத்துணர்வு என்று பொருள். இங்கு 150 புத்தர் சிலைகள், புத்தரின் ஓவியங்கள் உள்ளிட்டவை உள்ளன. இவற்றைக்காண ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தப் புத்தக் கோயிலை முன் மாதிரியாகக் கொண்டு உலகியநல்லூரில் புத்தர் கோயிலை வடிவமைக்கலாம்.

பெளத்த மதத்தைப் பின்பற்றும் புத்த பிட்சுகள் தமிழ்நாட்டுக்கு வரும்போது சென்னை, சென்ட்ரலில் உள்ள புத்த மடத்தைத் தவறாமல் பார்வையிட்டுச் செல்கின்றனர். சிறிய புத்த மடம் என்றாலும் புத்தரைப் பின்பற்றும் பலருக்கும் அது ஒரு முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. இங்கு வருவோரை பழம்பெரும் புத்தக் கோயில் அமைந்திருந்த உலகியநல்லூருக்கும் வருமாறு செய்யலாம். புத்தர் சிலை மற்றும் சிதிலமடைந்த கோயிலைச் சீரமைத்து, புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்கள், ஓவியங்கள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தலாம்.

இயற்கையான பகுதியில் புத்தர் கோயில் அமைக்கப்படுவதால் புத்துணர்ச்சி பெறவும் ஆன்மிகத் தேடலுக்குரிய இடமாகவும் அது மாறலாம். கோயிலைச் சுற்றி பிற கடைகளையும் நிர்மாணிக்கலாம். கோயிலுக்கு வருவோரிடம் கட்டணம் நிர்ணயித்து, வசூலித்து, அதன் வழியே வருமான வாய்ப்பையும் பெறலாம்.

நம் அடுத்தக் ‘கனவு’ திருச்சி...



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்