தஞ்சாவூர் அருகே மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி, ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் மீது மோதியது. இதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பவனமங்கலத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி, விவசாயி. இவரின் மகன் கவிபாலன்(5), திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். காலை பள்ளிக்குச் சென்ற கவிபாலன் மாலை பள்ளி வேனில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். வீட்டுக்கு எதிரே வேனில் இருந்து கவிபாலனை இறங்கி விட்டுள்ளனர். இதையடுத்து வீட்டுக்குச் செல்வதற்காக கவிபாலன் சாலையைக் கடந்துள்ளார். அப்போது, மருவூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி மணல் ஏற்றி வந்த அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.
சிறுவன் சாலையை கடப்பதை கவனிக்காத டிரைவர் வேகத்தை குறைக்காமல் லாரியை ஓட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. இதில் லாரி கவிபாலன் மீது மோதியதில் முன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். வீட்டுக்கு சற்று எதிரிலேயே மணல் லாரியில் சிறுவன் அடிப்பட்டு இறந்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அத்துடன் லாரி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு டி.எஸ்.பி.,ராமதாஸ், பூதலூர் தாசில்தார் பெர்ஷியா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். திருக்காட்டுப்பள்ளி சாலையில் தினமும் ஏராளமான லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக செல்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என மறியல் செய்தவர்கள் தெரிவித்தனர்.
from Latest news

0 கருத்துகள்