எந்த செல்வம் வேண்டினாலும் தினசரியோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ ஆதிசங்கரர் அருளிய இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால், வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-05/418ea503-82e1-401a-be93-96f71a5906a3/Mahalakshmi.png)
ஜகத்குரு ஆதிசங்கரர் இளம்பிராயத்தில், சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பு, தினமும் சில வீடுகளில் பிக்ஷைக்குச் செல்வது வழக்கம்.
அப்படி செல்கையில் ஒருநாள் ஆதிசங்கரர் ஒரு வீட்டுக்குச் சென்று பிக்ஷை கேட்டார். அந்த வீட்டு தலைவர் வெளியில் சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவி மட்டும் இருந்தாள். வாசலில் வந்து பிக்ஷை கேட்ட பாலக சங்கரனைக் கண்டபோது, சாட்சாத் சிவபெருமானே பாலகன் வடிவில் வந்து பிக்ஷை கேட்பது போல் தோன்றியது. வீடு தேடி வந்த பிள்ளைக்கு பிக்ஷையிட எதுவும் இல்லையே என்ற தவிப்புடன் வீடு முழுவதும் தேடிப் பார்த்தாள். ஒரு உலர்ந்த நெல்லிக்கனி மட்டுமே இருந்தது. அன்பின் மிகுதியால் அந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து பாலக சங்கரனின் தட்டில் போட்டாள். தன்னுடைய நிலையை நினைத்து கவலை கொண்டாள்.
அந்தப் பெண்ணின் அன்பில் மகிழ்ந்த சங்கரர், அவள் வறுமை தீரவேண்டி, மகாலக்ஷ்மியை பிரார்த்தித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். அவர் பாட்டுக்கு இரங்கிய மகாலக்ஷ்மி தரிசனம் கொடுத்தாள். அப்போது தமக்கு பிக்ஷையிட்ட பெண்மணியின் வறுமை நீங்க வேண்டும் என்று வேண்டினார். ''சங்கரா, இவர்கள் வறுமையில் சிக்கித் தவிப்பதற்கு பூர்வ ஜன்ம வினையே காரணம். பூர்வ ஜன்மத்தில் இவள் குசேலனின் மனைவி. இவளுடைய கணவன் குசேலன் கண்ணனின் அருளால் பெற்ற செல்வத்தை முறையாக பயன்படுத்தவில்லை. தான தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தவில்லை. அதனாலேயே இந்தப் பிறவியில் இவர்கள் வறுமை கொண்டார்கள். இதில் நான் செய்ய ஒன்றுமில்லை'' என்றாள் மகாலட்சுமி.
உடனே சங்கரர், ''தாயே, தாங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால், எப்போது தங்களின் கடைக்கண் பார்வை இந்தப் பெண்ணின்மீது பட்டுவிட்டதோ, அப்போதே இவள் பாக்கியசாலி இல்லையா, இனி வறுமை நீங்க அருள்புரிவதில் தடை என்ன இருக்கிறது?'' என்று கேட்டார்.
சங்கரரின் சமத்தானப் பேச்சில் மகிழ்ந்த மகாலக்ஷ்மி அந்த வீட்டில் தங்க நெல்லிக்கனிகளையே மழையெனப் பொழிந்தாள் என்று இந்த ஸ்லோகம் உருவான விதம் பற்றி ஞான நூல்கள் கூறுகின்றன.
எந்த செல்வம் வேண்டினாலும் தினசரியோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ ஆதிசங்கரர் அருளிய இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால், வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-10/e78d8943-a704-4fc3-81ff-063b7a5cdd1b/310507.jpg)
ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்
அங்கம் ஹரே புலகபூஷன மாச்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா
அழகிய மொட்டுக்கள் நிறைந்த மரத்தைப் பொன்வண்டுகள் மொய்ப்பதைப் போல, ஆனந்த வடிவான திருமாலின் திருமார்பில் வீற்றிருக்கும் திருமகளே நின் திருவருள் எல்லா அன்பர்களுக்கும் சகல செல்வங்களையும் அளிக்குமாறு வேண்டுகிறேன்.
முக்தா முஹீர்விதததீ வதனே முராரே
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி கதாகதானி
மாலா த்ருசோர் மது கரீவ மஹோத்பலே யா
ஸாமே ச்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா
திருப்பாற்கடலில் உதித்த தேவியே, நீ திருமாலின் திருமுகத்தைப் பார்ப்பது நீலோத்பல மலரில் தேன் அருந்த வரும் பொன் வண்டுகளை ஞாபகப் படுத்துகின்றது. நீலோத்பல மலர் போன்ற திருமாலின் திருமுகத்தை தரிசிக்க நின் கண்கள் ஆசைப்படுவதும், வெட்கத்தால் திரும்புவதுமாக இருக்கின்றன. வளங்கள் அளிக்கும் நினது கடைக்கண் பார்வை என்னையும் பார்க்கட்டும். செல்வங்களை அருளட்டும்.
ஆமீலிதாட்ச மதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ மநங்கதந்த்ரம்
ஆகேகர ஸ்தித கனீனிக பக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம புஜங்க சயாங்கனாயா
பாற்கடலில் பாம்பணையில் அறிதுயிலில் இருக்கும் திருமாலுக்கு இமைக்காது சேவை செய்யும் தாயே ! உனது தயை மிக்க கடைக்கண் பார்வை என் மீது விழட்டும். அதனால் எல்லா காலமும் அளவில்லாத செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.
பாஹ் வந்தரே மதுஜித ச்ரித கெளஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாட்ச மாலா
கல்யாண மாவஹதுமே கமலாலயாயா
திருமாலின் திருமார்பில் நிறைந்துள்ள மலர் மாலை நின் கண்ணொளி பட்டு இந்திர நீல நிறமாக காட்சி தரும். தெய்விக ஒளி நிறைந்த நின் கடைக்கண் பார்வை என் மேல் பட்டு எல்லாவித மங்களங்களையும் அருளட்டும்.
காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே
தாராதரே ஸ்புரதியா தடிதங்கநேவ
மாதுஸ்ஸமஸ்த ஜகதாம் மஹநீய மூர்த்தி
பத்ராணி மேதிசது பார்கவநந்தநாயா
அசுரனான கைடபனை அழித்த, கார்மேகம் போல விளங்கும் திருமாலின் திருமார்பில் மின்னல் கொடியான தாயே! மின்னலைப் போன்ற நின் திருக்கண்கள் எனக்கு ஒளியையும் செல்வத்தை வழங்கட்டும்.
ப்ராப்தம் பதம் ப்ரதமத கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி மன் மதேந
மய்யாபதேத் ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் சமகராலய கந்யகாயா
மங்களங்கள் யாவும் நிறைந்த திருக்கண்கள் கொண்டவளே! உன் பார்வையே திருமாலுக்கு மங்கலங்கள் தருபவை. அசுரர்களை அழித்த திருமாலுக்கு மகிழ்வூட்டும் திருமகளின் கடைக்கண் பார்வையின் சிறு துளி என்மேல்பட்டு மங்களங்களைத் தரட்டும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-08/a6d75144-c991-4421-97ca-f114b9378a93/100.jpg)
விச்வாம ரேந்த்ர பதவிப்ரமதா தட்சம்
ஆநந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி
ஈஷந்நிஷீ தது மயிக்ஷண மீக்ஷணார்த்தம்
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா
தாயே நின் கடைக்கண் பார்வை விளையாட்டாகப் பட்டாலும், அவர் இந்திரனுக்குச் சமமாக வாழ்வான். கருங்குவளை போன்ற திருமுகத்தில் ஒளிரும் கடைக்கண் பார்வை க்ஷண நேரம் என் மீது பட்டாலும் சகலமும் பெறுவேன் தாயே!
இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
திருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே
திருஷ்டி ப்ரஹ்ருஷ்ட கமலோதர திப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா
மகா யாகங்களும் கடும்தவங்களும் செய்தால் மட்டுமே அடையக்கூடிய சொர்க்கத்தை தேவியின் கடைக்கண் பார்வையாலே மட்டுமே அடைய முடியும். கருணை கொண்ட திருப்பார்வை என் மேல் பொழியட்டும் தாயே.
தத்யாத் தயாநுபவநோ த்ரவிணாம் புதாரா
மஸ்மிந்ந கிஞ்சன விஹங்க சிசெள விஷண்ணே
துஷ்கர்ம கர்மமபனீய சிராயதூரம்
நாராயண ப்ரணயநீ நயனாம் புவாஹ
காற்று வீச கார்மேகங்கள் திரண்டு மழையை அளிக்கின்றது. பூமி செழிக்கின்றது. அதுபோல் திருமாலின் பிரியத்திற்குரிய திருமகளின் கடைக்கண் பார்வை பட்டால் என் வறுமை யாவும் நீங்கி நான் செல்வமுடையவன் ஆவேன் தாயே.
கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலயகேளிஷு ஸம்ஸ்திதாயா
தஸ்யை நமஸ்த்ரி புவநைக குரோஸ்தருண்யை
ஆக்கல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலுக்கு உதவும் வாணியாகவும், லக்ஷ்மியாகவும், சக்தியாகவும் காட்சி அளிக்கும் திருமகளுக்கு என் வணக்கங்கள்.
ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்ம பலப்ரஸீத்யை
ரத்யை நமோஸ்துரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதெனாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை
பேரழகும், பெருங்கருணையும் கொண்ட மகாசக்தியான திருமகளே, திருமாலின் பிரியத்திற்கு உரியவளும், தொழுபவருக்கு நல்ல பலன்களை அள்ளி வழங்குபவளுமான மகாலட்சுமியின் பேரருளை வேண்டுகின்றேன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-10/77b45aab-f770-499a-86fd-5a8c3fb0b819/vikatan_2019_05_29512672_b19a_4978_970a_f85b4a225cc5_156780_thumb.jpg)
நமோஸ்து நாலீக நிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை
மங்கலங்கள் ஜொலிக்கும் திருமுகம் கொண்டவளே! பாற்கடலில் ஜனித்தவளே! குளிர்ந்த சந்திரனை உடன் பிறப்பாய் கொண்டவளே! பாற்கடலில் அறிதுயிலும் பரந்தாமனின் நேசத்துக்குரிய நாயகியே உன் பாதம் பணிந்தேன் தாயே.
நமோஸ்து தேஹேமாம்பூஜை பீடிகாயை
நமோஸ்து பூமண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதிதயபராயை
நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை
பொன் தாமரையில் அமர்ந்தவளே, சகலருக்கும் தாயாகத் திகழ்பவளே! முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் கருணை மழையைப் பொழிபவளே! பெருமை மிக்க சாரங்கபாணியின் சக்தியானவளே உன்னை வணங்குகிறேன்.
நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதர வல்லபாயை
பிருகு முனியின் தவமகளே சரணம், திருமாலின் திருமார்பில் உறைபவளே சரணம், தங்கத் தாமரையில் வீற்றிருப்பவளே சரணம்! தாமோதரனின் துணையானவளே சரணம் !
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை
ஒளி வடிவாகத் திகழ்பவளே! தாமரை போன்ற நயனங்கள் உடையவளே, எல்லாவித செல்வங்களுக்கும் இருப்பிடமாகத் திகழ்பவளே, சகல உலகங்களையும் காப்பவளாகிய லட்சுமி தேவியே உனக்கு நமஸ்காரம்.
ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய நந்தநானி
ஸாம்ராஜ்யதான விபவாநி ஸரோருஹாணி
த்வத் வந்தநானி துரிதா ஹரணோத்யதானி
மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே
அனைத்துச் செல்வங்களையும் அருளக்கூடியவளும், உயிரினங்கள் அனைத்துக்கும் ஆனந்தத்தை அளிப்பவளும், அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அளிப்பவளுமாகிய திருமகளே உன்னை வணங்குகிறேன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-08/1a1fc851-1b34-4b44-a3b2-08e04497e0d9/6110e0792fdfd.jpg)
யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
ஸந்தனோதி வசனாங்க மானஸை
த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே
உன்னை எப்போதும் தொழுது பூஜிப்பவர்க்கு தடையில்லாமல் செல்வவளம் தருபவளே, வெள்ளமென நல்வரங்களை அளிக்கும் கண்ணனின் மனம் கவர்ந்த தேவியே, பக்தர்கள்மீது கருணை கொண்டு கடைக்கண் பார்வை வீசி எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற லட்சுமிதேவியே, உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.
ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
தவல தமாம்சுக கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்
செந்தாமரை மலரில் அமர்ந்தவளே! சிவந்த தாமரை போன்ற திருக்கரம் கொண்டவளே, சந்தன மாலை அணிந்து ஒளியாகத் திகழ்பவளே! செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரியவளுமான திருமகளே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.
திக்தஸ்திபி கனக கும்ப முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாகினி விமலசாரு ஜலாப்லு தாங்கீம
ப்ராதர் நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ
லோகாதி நாதக்ரு ஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம்
யானைகள் பொன் குடத்தில் உன்னை நீராட்ட, திருமாலின் திருமார்பில் நிலைத்தவளே, அமிர்தம் கொடுத்த சிறப்பான பாற்கடலின் செல்வியே, சகலலோகங்களின் தலைவனான மஹாவிஷ்ணுவின் நாயகியுமான திருமகளே உன்னை சரண் புகுந்து போற்றுகிறேன்.
கமலே கமலாட்ச வல்லபேத்வம்
கருணாபூர தரங்கிதைரபாங்கை
அவலோகய மாமநிஞ் சனானாம்
ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா
தாமரை மலரில் அமர்ந்தவளே, தாமரைக் கண்ணனாம் திருமாலின் நேசத்துக்குரியவளே, கருணை வெள்ளமே, உன் கருணை வேண்டி, கடைக்கண் பார்வை வேண்டித் துதிக்கும் இந்த ஏழையின் பிழை பொறுத்து தரித்திரம் நீங்க வழி காட்டியருள வேண்டும் தாயே.
ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
குணாதிகா குருதர பாக்ய பாகினோ
பவந்தி தே புவி புத பாவிதாசயா
வேதங்களின் வடிவாகவும், மூவுலகம் போற்றும் தாயாகவும் விளங்கும் திருமகளே, உன்னை இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தினால் துதித்துப்போருக்கு நிறைந்த செல்வம், நீங்காத புகழ், குறைவற்ற ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நிலையான புத்தி, மற்றும் பெருகிக் கொண்டே செல்லும் நவநிதிகள் மற்றும் பூரண வாழ்வும் அளிப்பாய் தாயே.
from Latest news
0 கருத்துகள்