Header Ads Widget

எதிர்ப்பை மீறி பொதுப் பாடத்திட்டத்தில் தீவிரம் காட்டும் தமிழக அரசு... கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்?!

``தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும், அந்தக் கொள்கையை வடிவமைப்பதற்கு கல்வியாளர்கள், வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்" என்று கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மத்திய பா.ஜ.க அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்த நேரத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து வரவேற்பு கிடைத்தது.

ஸ்டாலின்

ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில், 13 பேர் கொண்ட மாநில கல்விக்குழு அமைக்கப்பட்டு, பொது பாடத்திட்டம் ஒன்றை அந்தக் குழு உருவாக்கியிருக்கிறது. `பொது பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்’ என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். ‘அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்’ என்கிறது பொன்முடியின் அறிவிப்பு. இந்தப் பொது பாடத்திட்டம்தான் தற்போது பெரும் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறது.

அமைச்சர் பொன்முடியின் அறிவிப்புக்குக் கல்வியாளர்களும், கல்லூரிப் பேராசிரியர் சங்கங்களும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். ‘தேசிய கல்விக் கொள்கையை மத்திய பா.ஜ.க அரசு திணிக்க முயல்கிறது’ என்று கொந்தளிக்கும் தி.மு.க அரசு, அந்த தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பொது பாடத்திட்டத்தைக் கொண்டுவருகிறது’ என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

பொன்முடியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘தி.மு.க அரசின் பொது பாடத்திட்டம் அவசரகதியில் தயாரிக்கப்பட்டு, திணிக்கப்படுகிறது. இதனால், உயர்கல்வியின் தரம் குறையும்’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த நிலையில், மாநில கல்விக்குழுவால் உருவாக்கப்பட்டிருக்கும் பொது பாடத்திட்டம் பற்றி கல்வியாளர்கள் சிலரிடம் பேசினோம். ``பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டத்தில், இந்தப் பல்கலைக்கழகங்களின் பணிகள் என்னென்ன என்பது குறிப்படப்பட்டிருக்கிறது. அதன்படி, பல்கலைக்கழகங்களின் மிக முக்கியப் பணியே பாடத்திட்டங்களை உருவாக்குவதுதான். பாடத்திட்டங்களை உருவாக்குதல், அதைக் கற்பிப்பது பற்றியும், மதிப்பீடு செய்வது பற்றியும் கல்லூரிகளுக்கு வழிகாட்டல்களை வழங்குவதும் பல்கலைக்கழகங்களின் முக்கியப் பணி.

மோடி

பொது பாடத்திட்டம் என்ற முறை கொண்டுவரப்பட்டுவிட்டால், பல்கலைக்கழகங்கள் தற்போது மேற்கொண்டுவரும் இந்தப் பணிகளெல்லாம் இனிமேல் இல்லை என்ற நிலை வந்துவிடும். பிறகு, அந்தப் பல்கலைக்கழகம் சட்டப்படி செயல்படாத நிலை ஏற்படும். பொது பாடத்திட்டத்தைக் கொண்டுவருவதன் மூலமாக, தெரிந்தோ தெரியாமலோ, மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசுக்குக் கொடுக்கிறார்கள். பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஒருபுறம் போராடிக்கொண்டே, மாநிலப் பட்டியலில் மட்டுமே இருக்கும் பல்கலைக்கழகங்களின் அதிகாரத்தை நீங்களே இழக்கச் செய்வது நியாயமா?” என்று தி.மு.க அரசைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள் கல்வியாளர்கள்.

மேலும், “பாடத்திட்டங்களை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் உருவாக்குவதுதான் சரியான முறை. மாறாக, பொது பாடத்திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தால், பல்கலைக்கழகம் என்ற கட்டமைப்பையே அது சிதைத்துவிடும். பன்முகத்தன்மைகொண்ட பாடத்திட்டம் என்பது இல்லாமல் போய்விடும் ஆபத்து இதில் இருக்கிறது” என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

பொன்முடி

`` `ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ என்று எல்லாவற்றிலும் இந்தியா முழுவதும் ‘ஒரே‘, ‘ஒரே’ என்ற மத்திய பா.ஜ.க அரசின் கொள்கைகளை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட தி.மு.க-வினர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, நீங்களும் பொது பாடத்திட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தைக் கொடுப்பது நியாயமா?’’ என்று கேட்கிறார்கள் கல்வியாளர்கள். `` `நாளைக்கு இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம்’ என்று பா.ஜ.க அரசு கொண்டுவருவதற்கு முன்னோடித் திட்டமாக இதைக் கொண்டுவருகிறீர்களா?’’ என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள்.

‘விளைவின் அடிப்படையிலான கல்வி’ (Outcome Based Education) என்கிற ஒரு முறையில் பொது பாடத்திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தனியார் பெரு நிறுவனங்கள் விரும்புகின்றன என்றும், அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில்தான் பொது பாடத்திட்டத்தை இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அமல்படுத்த அமைச்சர் பொன்முடி முனைகிறார் என்றும் கல்வியாளர்கள் பலர் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசும், அமைச்சரும் விரிவாக விளக்கமளிக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்