Header Ads Widget

காலிஸ்தான்: கனடா - இந்தியா இடையிலான பிரச்னையில் ‘புகுந்த’ அமெரிக்கா - என்ன நடக்கிறது?!

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைசெய்யப்பட்ட விவகாரம், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளே புகுந்திருக்கிறது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

‘காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை விவகாரத்தில் இந்தியா, கனடா ஆகிய நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்பில் இருக்கிறது. கனடாவின் குற்றச்சாட்டுகளை உன்னிப்பாக கவனித்துவருகிறோம்’ என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவன் கூறியிருக்கிறார்

கனடாவில் சர்ரே நகரிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை முகமூடி அணிந்த நபர்கள் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொன்றனர். கொலையாளிகளை இன்றுவரை கண்டறிய முடியவில்லை. மர்மம் நிறைந்த இந்தக் கொலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்னை எதிரொலிக்கிறது. டொரன்டோ, லண்டன், மெல்போர்ன், சான்ஃபிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களில் இந்திய அரசை எதிர்த்து சீக்கியப் பிரிவினைவாதிகள் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

கனடாவில் சீக்கியர்கள் போராட்டம்

நிஜ்ஜார் கொலைசெய்யப்பட்டதன் பின்னணியில், இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நிஜ்ஜாரின் மரணத்துக்கும், இந்திய அரசின் ஏஜென்ட்டுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கனடா தரப்பு கூறியிருக்கிறது. ஆனால், நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று இந்திய அரசு மறுத்திருக்கிறது.

கனடா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளே நுழைந்திருப்பது விவாதங்களை எற்படுத்தியிருக்கிறது.

இது குறித்துப் பேசியிருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ‘காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலையில், நீதியின் முன்பாக குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்னையில் நேரடியாக பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் பேசுவாரா என்பது தெரியாது. ஆனால், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்றிருக்கின்றன’ என்று அவர் கூறியிருக்கிறார்.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

இதற்கிடையில், காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருக்கிறது. இந்தியாவில் ஏழு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 53 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியிருக்கிறது. இந்தச் சோதனைகளில் கைத்துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிபொருள்கள், டிஜிட்டல் கருவிகள் ஆகியவற்றை என்.ஐ.ஏ பறிமுதல் செய்திருக்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், ‘இந்தப் பிரச்னையில் யாருக்கு ஆதரவு என்று முடிவெடுக்கவேண்டிய நிலை வந்தால், இந்தியாவுக்குத்தான் அமெரிக்கா ஆதரவு அளிக்கும். கனடாவின் குற்றச்சாட்டு, இந்தியாவைவிட கனடாவுக்குத்தான் அதிக ஆபத்தை உண்டாக்கியிருக்கிறது. இந்தியாவுடனான உறவு எங்களுக்கு முக்கியமானது. கனடா, இந்தியாவோடு சச்சரவில் ஈடுபடுவது, யானையுடன் எறும்பு சண்டையிடுவதைப் போன்றது.

வாஷிங்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கலள்

தனது குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரத்தை அளிக்க ஜஸ்டின் ட்ரூடோவால் முடியவில்லை. இந்தியாவால் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தது எதற்காக என்பது குறித்து கனடா விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்