Header Ads Widget

YouTuber Village: ஒரே கிராமத்தில் சுமார் 1100 யூடியூபர்கள் - தனி ஸ்டூடியோ கட்டிக்கொடுத்த கலெக்டர்!

2005-ம் ஆண்டு ஸ்டீவ் சென், சாட் ஹர்லி மற்றும் ஜாவேத் கரீம் உள்ளிட்டோரால் தொடங்கப்பட்ட சாதாரண வீடியோ பகிரும் சமூக வலைதளம் `யூடியூப்'. இன்று, இது அசுர வளர்ச்சியடைந்து பல மில்லியன் பேர் பயன்படுத்தும், வருமானம் ஈட்டும் முன்னணி சமூக வலைதளமாக மாறியுள்ளது.

பெரு நிறுவனங்கள் மட்டுமல்ல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, நகரம் தொடங்கி கிராமத்தின் மூலைமுடுக்குகளெங்கும் பல மில்லியன் மக்கள் யூடியூப்பில் தங்களுக்கெனத் தனி சேனல் தொடங்கி வருமானம் ஈட்டி வருகின்றனர். குறிப்பாக, சுயாதீனமாகத் தங்களின் திறமையை வெளிப்படுத்தவும், அதன் மூலம் வருமானம் ஈட்டவும் 'யூடியூப்' ஒரு சிறந்த தளமாக இருந்து வருகிறது.

YouTube Monetization

'யூடியூப்' ஏற்படுத்தியிருக்கும் இந்த மகத்தான வாய்ப்பை மக்கள் தவறவிடாமல் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவ்வகையில் ஒவ்வொரு நாளும் உலகின் மூலைமுடுக்கெங்கும் புதியதாகப் பல லட்சம் யூடியூபர்கள் முளைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். பல மில்லியன் வீடியோக்கள் பகிரப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. 

இந்நிலையில் சத்தீஸ்கர் ராய்ப்பூரில் இருக்கும் ‘துல்சி’ எனும் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் யூடியூப்பை முதன்மையான தொழிலாக வைத்து வருமானம் ஈட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட அந்தக் கிராமத்தில் 1100க்கும் மேற்பட்டவர்கள் யூடியூப்பர்கள்தானாம்! அவர்களிடம் பெரிதான தொழில்நுட்பங்கள் இல்லையென்றாலும், பெரும்பாலானோர் தங்களின் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி யூடியூப் வீடியோக்களை எடுத்துப் பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் குடும்பமும் இந்த யூடியூப் வருமானத்தை நம்பியே இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையறிந்த ராய்ப்பூர் கலெக்ட்டர் அக்கிராமத்திற்கெனத் தனி ‘ஸ்டூடியோ’ ஒன்றைக் கட்டிக்கொடுத்துள்ளார். அதற்கு ‘ஹமர் ஃப்ளிக்ஸ் (Hamar Flix)’ என்று பெயர் சூட்டிருக்கிறார்கள்.
ஹமர் ஃப்ளிக்ஸ் ஸ்டியோ | கலெக்ட்டர் சர்வேஸ்வர் நரேந்திர பூரே

இதுகுறித்து பேசிய ராய்ப்பூர் கலெக்ட்டர் சர்வேஸ்வர் நரேந்திர பூரே, “இந்த ‘துல்சி’ கிராமத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்தபோது இங்கு இருக்கும் பெரும்பாலானோர் யூடியூப்பர்கள் எனத் தெரியவந்தது. ஆனால், அவர்களிடம் தேவையான தொழில்நுட்பங்கள், கணினி வசதிகள் இல்லை. அதனால், கிராமத்தின் மையப்பகுதியில், கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் மார்டன் தொழில்நுட்பங்களுடன் கூடிய ‘ஹமர் ஃபிக்ஸ்’ என்ற பெயரில் சிறிய ஸ்டியோ ஒன்றை அவர்களுக்கு அமைத்துக் கொடுத்துள்ளோம். இது அவர்கள் வீடியோ எடுப்பதற்கும், எடிட் செய்து அதை அதிவேகமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உதவியாக இருக்கும். இது அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவியாக இருக்கும்” என்று கூறினார். அப்பகுதியின் கிராம மக்களும் இதை வரவேற்றுக் கொண்டாடி வருகின்றனர்.

இதுபோல் இந்தியாவின் பல கிராமங்களிலும் மக்களுக்குத் தேவையான வசதிகளைக் கண்டறிந்து ஆட்சியாளர்கள் அதை நிறைவேற்றித் தர வேண்டும் என நெட்டிசன்கள் வாழ்த்தி கருத்து தெரிவித்து வருகின்றனர்.


from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்