Header Ads Widget

சிறகடிக்க ஆசை: "ஆடியோ லாஞ்ச்சுக்கு இவன் மூலமா எத்தனை பேர் வருவாங்கன்னு யோசிக்கிறாங்க!" - ஶ்ரீதேவா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சிறகடிக்க ஆசை'. இந்தத் தொடரில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஶ்ரீதேவா.

சினிமா, சீரியல் என பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் பேச அவரைச் சந்தித்தோம்.

`சிறகடிக்க ஆசை' ஶ்ரீதேவா

"எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமாவில் வரணும்னு ஆசை. வெரைட்டியான கேரக்டர் பண்ணனும்னு விரும்பினேன். திருச்சியில் இருந்து வாய்ப்புத்தேடி சென்னைக்கு வந்து கூத்துப்பட்டறையில் எல்லாம் பயிற்சி எடுத்தேன். அப்புறமா திரும்பவும் ஊருக்கே போயிட்டேன். ஊருல லோக்கல் சேனலில் வேலை பாத்துட்டு இருந்தேன். ஊர்லயே ஷார்ட் பிலிம், பைலட் பிலிம் பண்ணினேன். நான் நடிச்ச ஒரு பைலட் பிலிமிற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைச்சது. அந்த விருதுதான் மீண்டும் என்னை சென்னைக்குக் கூட்டிட்டு வந்தது!" என்றவரிடம் சீரியல் வாய்ப்பு குறித்துக் கேட்டோம்.

"பாலாஜின்னு ஒரு நல்ல மனிதர் மூலமா கலர்ஸ் தமிழில் ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த சீரியல்தான் `அம்மன்'. தொடர்ந்து அதே சேனலில் `வள்ளி திருமணம்'னு ஒரு சீரியலிலும் நடிச்சேன். பிறகு, விகடனின் `ஆதலினால் காதல் செய்வீர்' புராஜக்ட் கிடைச்சது. என் லைஃப்ல பெஸ்ட் புராஜெக்ட்னு அதைத்தான் சொல்லுவேன். ஏன்னா, அந்த புராஜெக்ட் ஆரம்பிக்கும் போதிலிருந்து முடியுற வரைக்கும் இருந்ததனால நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். மறுபடி விகடன் புராஜெக்ட்டே எனக்கு கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு!" என்றவர் `சிறகடிக்க ஆசை' சீரியல் குறித்துப் பேசினார்.

`சிறகடிக்க ஆசை' ஶ்ரீதேவா

"சிறகடிக்க ஆசை தொடர் இந்த அளவுக்கு ரீச் கொடுக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. இந்த மனோஜ் என்கிற கதாபாத்திரம் ஶ்ரீதேவா பண்ணலைன்னாலும் அந்தக் கேரக்டர் ஹிட் ஆகியிருக்கும். ஏன்னா, மிகப்பெரிய தூண் குமரன் சாருடைய இயக்கம் அப்படி! இது என்னுடைய ஐந்தாவது புராஜெக்ட். போன வருஷம் 4 படம் பண்ணியிருந்தேன். இனிமே சீரியலுக்கு முயற்சி பண்ணாம படங்கள் ட்ரை பண்ணலாம்னு முடிவெடுத்திருந்தேன். அதனால ஜீ தமிழில் `இந்திரா' சீரியலில் ஒரு வந்தது அதையும் வேண்டாம்னு சொன்னேன். சிறகடிக்க ஆசை சீரியல் மேனேஜர் நேரில் வர சொன்னார். என்னைப் பார்த்து நடிச்சுக் காட்ட சொல்லி நான் தான் சரியான ஆளுன்னு அமுக்கிப் போட்டுட்டாங்க. குடும்பத்தோட இந்தக் கேரக்டர் ரொம்ப கனெக்ட் ஆகியிருக்கு. என் அம்மாகிட்ட உங்க பையனை என்ன அடி அடிக்கிறாங்க?னு எல்லாரும் கேட்கிறாங்க. இதுக்காகத்தான் இத்தனை வருஷம் கஷ்டப்பட்டேன். இப்ப அது நடக்கும்போது சந்தோஷமா இருக்கு!" என்றதும் சினிமா வாய்ப்புகள் குறித்துக் கேட்டோம்.

" `எட்டுத்தோட்டாக்கள்' வெற்றின்னா எனக்கும், உங்களுக்கும் தெரியும். ஆனா, என் அப்பா, அம்மாவுக்கும் உங்க அப்பா, அம்மாவுக்கும் தெரியாதுதானே? இங்க இன்டஸ்ட்ரிக்குத் தெரிஞ்சா மட்டும்தான் கூப்பிட்டு வேலை கொடுக்கிறாங்க. நமக்கு வீட்டு அளவில் தான் ரீச் இருக்கு. இன்டஸ்ட்ரி லெவலில் கிடையாது. நம்ம தேடித்தேடி நம்மள முன் நிறுத்திக்கிட்டா மட்டும்தான் உண்டு! நான் தினமும் 5,6 பேரை சந்திச்சுகிட்டே இருப்பேன். இன்னைக்கு நான் தேடுறேன். ஒருநாள் எல்லாரும் என்னைத் தேடி வருவாங்க என்கிற நம்பிக்கையோட!

`சிறகடிக்க ஆசை' ஶ்ரீதேவா

பெர்சனாலிட்டி ஆக இருந்தா மட்டும் இன்டஸ்ட்ரிக்குப் போதும்னு நினைச்சேன். ஆனா, அதுக்கும் இன்டஸ்ட்ரிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இங்க இன்ஃபுளுயன்ஸிங் தான் முக்கியம். ஒரு டைரக்டர் மனசு வச்சாருன்னா நீங்க அந்த ரோல் பண்ண முடியும்.... அவ்வளவுதான்! நீ நல்லா நடிக்கிற, சூப்பரா இருக்கிற, நீ நல்லா இல்லைங்கிறதெல்லாம் இல்ல!" என்றதும் இதனால் ஏதாவது வாய்ப்பு கைநழுவி போயிருக்கா? எனக் கேட்டோம்.

"நிறைய போயிருக்கு... கிட்டத்தட்ட 30 சத்தியங்கள் பொய்யாகியிருக்கு. அவங்க பசங்க, அண்ணன், தம்பிக்குத்தான் வாய்ப்பு கொடுக்கிறாங்க. வெளியில இருந்து டெடிகேஷனாக, இந்தத் தொழில் மீது காதலோட இருக்கிறாங்களான்னு பார்த்து வாய்ப்பு கொடுக்கணும். இவனுக்கு வாய்ப்பு கொடுத்தா இவன் மூலமா எத்தனை பேர் ஆடியோலான்ச்சிற்கு வருவாங்கங்கிறதை வச்சுதான் ஆட்களைத் தேர்வு செய்றாங்க. நான் லீட் ரோலில் நடிக்கணும்னு சொல்லல. 2, 3 லீட் ஆகவாச்ச்சும் என்னை யூஸ் பண்ணுங்கன்னுதான் சொல்றேன். நீங்க சொல்ற டைமுக்கு வந்து நாள் முழுக்கவும் ஒர்க் பண்றதுக்கு நான் தயார் தான்!  நம்மள ரிஜெக்ட் பண்ணும்போது என்ன காரணம்னு கூட சொல்ல மாட்டாங்க. காரணம் சொன்னாலாவது நம்ம குறையை சரி செய்துக்கலாம்.. கூப்பிடுறோம்னு சொல்லி ஏமாத்திட்டே இருப்பாங்க. இப்படி ஏமாத்திட்டே இருந்தா நாம எப்படித்தான் முன்னுக்கு வர்றது?" என்றவரிடம் அடுத்தகட்ட திட்டம் குறித்துக் கேட்டோம்.

`சிறகடிக்க ஆசை' ஶ்ரீதேவா

"இந்த சீரியலில் இந்த அளவுக்கான நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறேன்னுலாம் எனக்குத் தெரியாது. வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்கிற இடத்துல நானும் இல்ல. வாய்ப்பை எப்படி தக்க வச்சிக்கிறதுங்கிறதை மட்டும்தான் பார்க்கணும். இந்த சீரியல் எனக்கு நிறைய பாராட்டைப் பெற்றுக் கொடுத்திருக்கு. 3 வருஷமா நான் பண்ணின புராஜெக்ட்ல கிடைக்காத பெயர் இப்ப கிடைச்சிருக்கு. என் லைஃப்ல நான் எந்த விஷயத்துக்கும் அடம் பிடிச்சது இல்ல. நான் அடம் பிடிக்கிற விஷயம்னா அது சினிமா மட்டும்தான்!" என்றார்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்