Header Ads Widget

Doctor Vikatan: எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் வேலையில் கணவர்.... குழந்தையின்மைக்கு அந்த வேலை காரணமாகுமா?

Doctor Vikatan: என்  தோழிக்குத் திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை.  அவளின் கணவர் ரேடியாலஜிஸ்ட்டாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு குழந்தை இல்லாததற்கு இந்த வேலைதான் காரணமாக இருக்கும் என்கிறாள் என் தோழி. ஒருவர் பார்க்கும் வேலைக்கும் அவரது கருத்தரித்தல் திறன் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறதா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

எல்லா வேலைகளிலும் இந்தப் பிரச்னை வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் குறிப்பிட்ட சில துறைகளில் இந்தப் பிரச்னை இருக்கவே செய்கிறது. உதாரணத்துக்கு விவசாயம்... இந்தத் துறையில் பெரும்பாலும் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் கையாள வேண்டியிருப்பதால், அவற்றை சுவாசிக்கும்போது அந்தத் தாக்கம் உடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. அதன் காரணமாக விந்தணுக்களின் உற்பத்தியும் பாதிக்கப்படலாம்.  அதற்காக இவர்கள் விவசாயமே பார்க்கக்கூடாது என்று சொல்ல முடியாது. வேலை பார்க்கும்போது மாஸ்க் அணிந்துகொள்ளலாம். கைகளுக்கு கிளவுஸ் அணிந்துகொள்ளலாம்.

சாப்பிடும் முன்பும், உணவுப்பொருள்களைக் கையாளும்போதும் கைகளை நன்கு கழுவிவிட வேண்டியது முக்கியம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் ரேடியாலஜி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த ரிஸ்க் சற்று இருக்கிறது. இந்தத் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ரத்த அணுக்கள், விந்தணுக்கள், கருமுட்டைகள் என எல்லாமே பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இதுபோன்ற ரிஸ்க் நிறைந்த துறைகளில் இருப்போர், திருமணமான உடனேயே குழந்தைக்குத் திட்டமிடுவது அவசியம். அதைத் தள்ளிப்போட வேண்டாம். பணியிடத்தில் முகக்கவசம், ஏப்ரன் உள்ளிட்ட பாதுகாப்புக் கவசங்களை அணிந்துகொள்வது பாதுகாப்பானது.

எக்ஸ்ரே, ஸ்கேன் வேலை; விந்தணு பாதிக்க வாய்ப்பு

சாயம் தோய்க்கும் வேலையில் இருப்போருக்கும் கருத்தரித்தல் திறன் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அடுத்து ஐடி துறையில் இருப்போரும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இரவில் வேலை பார்ப்பது, போதுமான அளவு தூக்கமில்லாதது, கண்ட நேரத்துக்கு ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, ஸ்ட்ரெஸ் அதிகமிருப்பது போன்ற காரணங்களால் இவர்களுக்கு கருத்தரித்தல் திறன் பாதிக்கப்படலாம். உடலானது ஒருநாளைக்கு குறிப்பிட்ட நேரத்துக்குத் தூங்கி, குறிப்பிட்ட நேரத்துக்கு எழுந்திருக்கும்படி பழகியிருக்கும். அந்த உடலியல் கடிகாரத்துக்கு மாறாக எதைச் செய்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

எனவே ரிஸ்க் இருப்பதாக உணரும் வேலையில் இருப்போர், உணவு, உறக்கம், பணியிடப் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்யவே கூடாது. 



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்