Doctor Vikatan: என் பெயர் தினேஷ். வயது 35. கடந்த 6 மாதங்களில் என் எடை 10 கிலோ வரை குறைந்துள்ளது. இதற்கு காரணம் என்ன... கடந்த ஓராண்டாக சரும நோய் பிரச்னை காரணமாக, அசைவ உணவுகளைத் தவிர்த்து, சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்கிறேன்.
இதுதான் காரணமாக இருக்குமா.... சமீபத்தில் ரத்தப் பரிசோதனை செய்ததில் ப்ரீ டயாபட்டிக் ( Pre-Diabetic) என்ற நீரழிவுக்கு முந்தைய நிலை இருப்பது தெரியவந்தது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இவ்வாறு உடல் எடை குறைய காரணம் என்ன? விளக்கம் அளிக்கவும்.
-Dinesh RM, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி
கடந்த ஆறு மாதங்களில் எடை குறைந்திருப்பதாகவும், சருமப் பிரச்னை காரணமாக அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். ப்ரீ டயாபட்டிக் என்று கண்டுபிடிக்கப்பட்டதையும் சொல்லியிருக்கிறீர்கள். அதை நீங்கள் எந்த வகைப் பரிசோதனையின் மூலம் உறுதிசெய்தீர்கள் என்ற விவரம் இல்லை.
ஒருவேளை நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல ப்ரீ டயாபட்டிக் நிலையில் இருந்தீர்கள் என்றால் ஒரு வாரத்திலிருந்து ஒரு வருடத்துக்குள்ளாக நீங்கள் நீரிழிவு நோயாளியாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நீங்கள் எடுத்த நீரிழிவு பரிசோதனையில் ரத்தச் சர்க்கரை அளவு எவ்வளவு இருந்தது என்ற விவரம் இல்லை. மூன்று மாத சராசரி சர்க்கரை அளவைக் கண்டுபிடிக்கும் ஹெச்பிஏ1சி (HbA1c) சோதனையில்தான் உங்களுடைய தற்போதைய நீரிழிவு நிலை துல்லியமாகத் தெரியும். அதை இதுவரை செய்யவில்லை என்றால் உடனடியாகச் செய்து பாருங்கள்.
ரத்தச் சர்க்கரை அளவைத் தெரிந்துகொண்டு, ஒருவேளை உங்களுக்கு நீரிழிவு நோய் பாதித்திருக்கும் பட்சத்தில் அதற்கான சிகிச்சைகளை ஆரம்பித்தாலே எடையிழப்பு பிரச்னை சரியாகிவிடும். நீரிழிவு நோய் இல்லாமல் எடையிழப்பு ஏற்பட்டிருந்தால் அது குறித்து பெரிதாக பயப்படத் தேவையில்லை. உங்களுக்கு ஏற்பட்ட சரும பிரச்னைக்கும் நீரிழிவு காரணமா என்பதை மருத்துவரிடம் பேசித் தெரிந்துகொள்ளுங்கள்.
சரியான அளவு உணவை உட்கொள்கிறீர்கள், ஆனாலும் தொடர்ந்து எடை குறைந்துகொண்டே போகிறது என்றால் அதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமா என்பதையும் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். அதற்கு முன் ப்ரீ டயாபட்டிக் நிலையிலிருந்து நீங்கள் டயாபட்டிக் நிலைக்கு மாறியிருக்கிறீர்களா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான் மிக முக்கியம். உணவுக்கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள், உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் நீரிழிவுக்கு முந்தைய நிலை, நீரிழிவாக மாறாமல் தடுக்கவும் முடியும். உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest news

0 கருத்துகள்