Header Ads Widget

IND Vs AFG: ஃபார்முக்கு வந்த ரோஹித்; சாதித்த பும்ரா; வாய்ப்புகளை பயன்படுத்தாமல் வீழ்ந்த ஆப்கன்!

உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கொஞ்சம் தடுமாறி கோலி - ராகுலின் ஆசியால் வென்ற இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ரொம்பவே சௌகரியமாக வென்றிருக்கிறது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான அந்த ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றிருந்தது.. இந்த மைதானம் பேட்டிங்கு நல்ல தளமாக இருந்தது மற்றும் ஒரே போட்டியில் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்களான 745 ரன்கள் அடிக்கப்பட்டதும் இந்தப் போட்டியில்தான். தென்னாப்பிரிக்க அணி கடந்த போட்டியில் வெளுத்தெடுத்திருந்தது. மேலும், இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணியே அதிக வெற்றிகள் பெற்றதைக் கணக்கில் கொண்டு ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்ய ஆப்கானிஸ்தான் அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் வந்தனர். களத்தில் ஒரு பக்கத்தில் குர்பாஸ் நிதானமாக விளையாட மற்றொரு பக்கத்திலோ இப்ராஹிம் 2-வது ஓவரில் சிராஜ் வீசிய பந்தில் தனது பவுண்டரி கணக்கைத் தொடங்கினார். 3-வது ஓவரில் மீண்டும் சிராஜ் வீசிய பந்தில் இந்திய அணி விக்கெட்டிற்காக ரிவிவ்யூ எடுத்து அதை இழந்தது. இப்ராஹிம் தனது அணிக்காக 4 பவுண்டரிகள் விளாசி நல்ல ஆட்டத்தைக் கொடுத்த நிலையில் 7-வது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் விக்கெட்கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து 22 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி சென்றார். அதன் பிறகு 13-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா போட்ட பந்தில் குர்பாஸ் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்து 28 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகிச் சென்றார். இவரைத் தொடர்ந்து ரஹ்மத்தும் அவுட் ஆகிச் சென்றார்.

இதன் பிறகு தான் ஆப்கானிஸ்தான் அணிக்கான நம்பிக்கையை வளர்க்கும் விதமான பார்ட்னர்ஷிப் தொடங்கியது. ஷாஹிதி மற்றும் அஹமதுல்லா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருவரும் இந்திய பௌலர்களை சிறப்பாக எதிர் கொண்டு பேட்டிங் செய்தனர். அஹமதுல்லா 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்த நிலையில் 35-வது ஓவரில் தனது விக்கெட்டை ஹர்திக் பாண்டியாவிடம் பறிகொடுத்துச் சென்றார். இவ்வாறு மற்றவர்கள் ஆட்டமிழந்து சென்றாலும் கேப்டனாக நான் இருக்கிறேன் கவலை வேண்டாம் என்று ஷாஹிதி தனது அணிக்காக மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் அடித்து 80 ரன்கள் குவித்த நிலையில் குல்தீப் யாதவிடம் அவுட் ஆகிச் சென்றார். அதன் பிறகு களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் ஏதும் குவிக்காமல் ஆட்டமிழந்து சென்றனர்.

கடைசியில் ஆப்கானிஸ்தானிற்காக நவீன் உல் ஹக் களமிறங்கும் போது ரசிகர்கள் “கோலி, கோலி” என்று கூச்சலிட்டனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழந்து 272 ரன்கள் குவித்திருந்தது. இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆப்கானிஸ்தானின் ஒப்பனிங் பார்ட்னர்ஷிப்பை அவர்தான் வீழ்த்தியிருந்தார். கடைசிக்கட்டத்தில் ரன் அடிக்க வாய்ப்புள்ள முகமது நபி, ரஷீத் கான் ஆகியோரையும் பும்ராதான் வீழ்த்தியிருந்தார். மேலும், 10 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். எக்கானமி ரேட் 3.9 தான். டெல்லி போன்ற முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் இப்படியொரு பௌலிங் பெர்ஃபார்மென்ஸை பாராட்டியேதான் ஆக வேண்டும்.

273 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணிக்காக ஓப்பனராக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் விளையாடினர். தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாட தொடங்கிய ரோஹித் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஒருபக்கம் ரோஹித் அதிரடியாக விளையாட மற்றொரு பக்கம் இஷான் கிஷனும் அதிரடியாக விளையாடினார். இதனால் 12 ஓவரில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. 18-வது ஓவரின் போது ரோஹித் சர்மா தனது 31-வது சதத்தைப் பூர்த்திச் செய்தார். உலகக்கோப்பைகளில் இந்தியாவிற்காக அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையையும் இந்த சதம் மூலம் ரோஹித் செய்தார். 63 பந்துகளில் ரோஹித் சதத்தை எட்டியிருந்தார். இது உலகக்கோப்பைகளில் ரோஹித்திற்கு 7 வது சதமாகும்.

ரஷித் கான் வீசிய 19-வது ஓவரில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து 47 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்து சென்றார் இஷான் கிஷன். ரோஹித் மற்றும் இஷான் கிஷன் இருவரும் 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்கள். பிறகு களமிறங்கிய விராட் கோலி ரோஹித்துடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய ரோஹித் 14 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கானிடம் தனது விக்கெட்டை இழந்தார்.

பிறகு கோலி மற்றும் ஸ்ரேயஷ் ஐயர் ஆகியோர் இணைந்து விளையாடி ஆட்டத்தை வெற்றி நோக்கி எடுத்துச் சென்றனர். இதில் விராட் கோலி தனது 68-வது அரைசதத்தை அடித்தார். இந்திய அணி அதிரடியாக விளையாடி 35 ஒவரில் 273 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வென்றது. ஆட்ட நாயகன் விருதை ரோஹித் சர்மா பெற்றார்.

இந்த உலகக்கோப்பையின் அதிக எதிர்பார்ப்புமிக்க போட்டி இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான். அந்தப் போட்டி வருகிற 14 ஆம் தேதி நடைபெறப் போகிறது. அதற்கு முன்பாக ஒரு மாபெரும் வெற்றியை இந்திய அணி பெற்றிருப்பது சிறப்பான விஷயமே.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்