Header Ads Widget

புறம்போக்கு நிலங்களில் பசுந்தீவனம் சாகுபடி; 1 கிலோ ரூ.4-க்கு விற்பனை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மேய்ச்சல் நிலத்தில் தீவனம் பயிரிட அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக கிராமங்களின் பெரும்பாலான பகுதிகளில் புற்களும் புதர்களும் மண்டிக்கிடக்கும். புறம்போக்காக கிடக்கும் இந்த நிலங்கள் பெரும்பாலும் கால்நடை வளர்ப்பவர்களால் மேய்ச்சலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழக கிராமங்களில் உள்ள புறம்போக்கு மேய்ச்சல் நிலங்கள் மற்றும் பிற பொதுவான பகுதிகளில் விளைச்சல் தரும் கால்நடை தீவனங்களை பயிரிட்டு, அதனை சுயஉதவிக்குழுக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்க முடிவு செய்துள்ளது, கால்நடை பராமரிப்புத் துறை. 

தீவனம்

சந்தை விலையில் ஒரு கிலோ பசுந்தீவனம் 12 முதல் 14 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இந்தப் பசுந்தீவனம் மானிய விலையில் 1 கிலோ 4 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 ஏக்கரில் மொத்தம் 3,500 டன் தீவனம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் குறைந்தது 5 ஏக்கர் புறம்போக்கு மேய்ச்சல் நிலம் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த நிலங்களில் அதிக மகசூல் தரும் தீவன பயிர்கள் பயிரிட சுய உதவி குழுக்கள் மூலம் ஊக்குவிக்கப்படும்.   

முதலில் இந்த தீவனம் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் பயன்படுத்தப்படும். தீவனங்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தேவைப்படும் உள்ளூர் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் விநியோகிக்கப்படும். மேலும் தீவன விற்பனை மூலம் சுமார் 84 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இந்த திட்டம் குறித்த அரசு உத்தரவை கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா அண்மையில் வெளியிட்டார். 

Representational Image

அதில், `` மேய்ச்சல் நிலங்கள் குறைந்துவிட்டன. வேற்று தாவர இனங்கள் மேய்ச்சல் நிலத்தின் பெரிய பரப்பளவை ஆக்கிரமித்து அதன் உற்பத்தி திறனை குறைக்கின்றன.  

இதனால் 5 மாவட்டங்களில் 25 ஏக்கரில் தீவனம் பயிரிடுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.46.26 லட்சம் என மொத்தமாக 2.33 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் பசுந்தீவனங்கள் குறைந்த விலையில் கிடைப்பதோடு, கால்நடை வளர்ப்புக்கான செலவுகள் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்