திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ‘செய்யாறு சிப்காட் 3-வது அலகு’ விரிவாக்கத் திட்டத்துக்காக 3,174 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்துக்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, ‘மேல்மா’ என்ற கிராமத்தில், 125 நாள்களாக விவசாயிகள் போராட்டம் நடத்திவந்தனர். மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், நெடுங்கல், தேத்துறை, வட ஆளாய்ப்பிறந்தான், இளநீர்குன்றம், அத்தி, மணிபுரம், வீரம்பாக்கம் உட்பட 11-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, முப்போகம் விளைச்சல் தரக்கூடிய நிலங்களைக் கையகப்படுத்த முயல்வதால், அந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்களும், விவசாயிகளும் ஒன்றுகூடிப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி, ‘‘நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது. சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே கைவிட வேண்டும்’’ என வலியுறுத்தி, குடியுரிமை, ஓட்டுரிமை உள்ளிட்ட அடையாள ஆவணங்களை செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியரிடம் ஒப்படைப்பதற்காக ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தைத் தடுத்த போலீஸார், விவசாயிகளைக் கைதுசெய்து, அங்குள்ள தனியார் திருமண மண்படம் ஒன்றில் அடைத்துவைத்தனர்.
இதையடுத்து, அன்று மாலையே கைதுசெய்யப்பட்ட விவசாயிகளை விடுவிப்பதாகச் சொல்லி, மண்டபத்தைவிட்டு வெளியேறச் சொல்லியும், போலீஸார் எச்சரித்திருக்கின்றனர். விவசாயிகள் மண்டபத்தைவிட்டு வெளியேற மறுத்ததோடு, அங்கேயே உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக, 147 விவசாயிகள்மீது செய்யாறு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். அதோடு விடாமல், கடந்த 4-ம் தேதி விடியற்காலைக்குள், போராட்டத்தை முன்னின்று நடத்திய அருள் என்பவர் உட்பட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைதுசெய்து, நீதிமன்றக் காவலில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்திருந்தனர்.
இந்த நிலையில், திருவண்ணாலை எஸ்.பி கார்த்திகேயனின் பரிந்துரையின்படி, சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய ஏழு பேர்மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ். இவர்கள் ஏழு பேருமே சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகளாகக் கருதப்படுவதால், போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டி, குண்டர் சட்டத்துக்கு எதிராகக் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன.
இது தொடர்பாக, குண்டர் சட்டம் பாய்ந்திருக்கும் ஏழு பேரின் வீடுகளுக்கும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அறிவிப்புக் கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் என்பவர் கையொப்பமிட்டபடி, அந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
அதில், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ‘‘இவர் ஒரு ‘குண்டர்’ எனத் தீர்மானித்து, 1982-ம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் காணொலித் திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட நபர் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதி பராமரிப்புக்குக் குந்தமாக செயல்பட்டிருக்கிறார். ஆகையால், இதைத் தடுக்கும் பொருட்டு மதுரை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு, தடுப்புக் காவலில் 15-11-2023 அன்று முதல் அடைக்கப்பட்டிருக்கிறார்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்ற பிறகே, மதுரை மற்றும் பாளையங்கோட்டைச் சிறைகளுக்கு, அவர்கள் மாற்றப்பட்டிருக்கும் விவரமே ஏழு பேரின் குடும்பங்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் தெரியவந்திருக்கிறது. அந்த அளவுக்கு ரகசியமாக, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்ததாகவும் சர்ச்சை வெடித்திருக்கிறது.
இந்த நிலையில், ‘‘மண்ணுரிமைக்காகப் போராடிய உழவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து, அதுவும் மதுரைச் சிறைச்சாலைக்குக் கொண்டுசென்று அடைத்திருப்பது, தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் அடக்குமுறையைக் காட்டுவதாக’’ பல அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறனர். ‘‘குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட விவசாயிகள் ஏழு பேரும் தேசத்துரோகச் செயல்களில் ஈடுபடவில்லை. குண்டர் சட்டக் குற்றங்களான கள்ளச்சாராயம் விற்கவில்லை. உணவுப்பொருள்களைக் கடத்தவில்லை. மணல் கடத்தலிலும் ஈடுபடவில்லை. பாலியல் குற்றங்களையும் செய்யவில்லை. ஆனாலும், இவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவதற்கான காரணம், முப்போகம் விளையும் நிலம் பறிக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்தியதுதான்.
மண்ணுரிமைக்காகப் போராடும் மக்களை குண்டர் சட்டத்தில் அடைக்கும் அளவுக்கு தமிழக அரசு கீழிறங்கிச் சென்றிருப்பதை நியாயப்படுத்தவே முடியாது. இப்படி, மண்ணுக்குத் துரோகம் செய்பவர்களையும், அதற்குத் துணைபோவோரையும் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். இதை உணர்ந்து, ஏழு விவசாயிகள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையைக் கைவிட்டு, அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்ற கோரிக்கையும் பல தரப்பிலிருந்தும் வலுத்துவருகிறது.
இது சம்பந்தமாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர், ‘‘அறவழியில் போராடும் விவசாயிகளை சமூகவிரோதிகள்போல பாவித்து, குண்டாஸ் போன்ற தடுப்புக் காவல் சட்டங்களைப் பயன்படுத்துவது, ஜனநாயகத்துக்கு விரோதமானது. இது அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கிற உரிமையை மறுக்கிற செயலாகும்’’ என்று கடுமையாகக் கண்டித்திருக்கின்றனர். அதேபோல, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ‘‘வேளாண் பெருங்குடி மக்களை தி.மு.க அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பது, கொடுங்கோன்மையின் உச்சம்’’ என்று காட்டமாகக் கண்டித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news

0 கருத்துகள்