‘விசித்ரா மேடம், நிக்சன் சார்’ என்றெல்லாம் வீட்டிற்குள் பேச்சு நடந்து கொண்டிருப்பதால் ‘மரியாதை’ என்கிற ஒரே விஷயத்தை வைத்து இந்த எபிசோடை முழுக்கவும் ஓட்டி விட்டார் கமல்.
விசித்ரா சபையில் காட்டிய கோபம் ரசிக்கத்தக்கதாக இல்லை. பிரதீப்பின் அலப்பறையைத்தான் நினைவுப்படுத்தியது. விதிமீறல் உள்ளிட்ட விஷயங்களை கமல் இன்றாவது விசாரிப்பாரா?
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
“‘மரியாதை என்றால் கிலோ என்ன விலை?’ என்று வீட்டிற்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாங்க.. இன்னைக்கு மார்க்கெட் ரேட் என்ன என்று விசாரித்து விட்டு வருவோம்” என்றபடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகளை காட்டினார் கமல். பொதுவாக இந்தப் பகுதி வெள்ளி என்று சொல்லி முடிப்பதற்குள் முடிந்து விடும். ஆனால் இம்முறை இந்த ஜெயில் எபிசோட், ஜாமீன் வாங்க முடியாமல் நீண்ட நேரத்திற்கு இழுத்துக் கொண்டிருந்தது. ஒத்துழையாமை போராட்டம் தொடர்பான விசித்ராவின் செயல்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக இருந்தன. ‘Worst Performer’ என்று சக போட்டியாளர்கள் வேண்டுமென்றே முத்திரை குத்தினார்கள்’ என்று விசித்திரா கோபம் கொள்வது சரியானது. ஆனால் ஒரு வகையில் இதுதான் கேம். தனது அடுத்த வியூகம் என்னவாக இருக்கும் என்றுதான் அவர் யோசிக்க வேண்டுமே தவிர விதிகளுக்கு உடன்பட மாட்டேன் என்று முரண்டு பிடிப்பது முதிர்ச்சியின்மை. கடந்த முறை, டூஷ் பிரஷ் தரவில்லை அவர் நிகழ்த்திய போராட்டத்தில் நியாயம் இருந்தது. கமலும் கூட அதை பாராட்டினார்.
அது விசித்ராவிற்கு இன்னமும் உற்சாகத்தைக் கூட்டி இருக்கும்போல. ஆனால் கடந்த முறை அவர் போராடியது, மாயாவின் அராஜகமான கேப்டன்சியோடு. ஆனால் இம்முறை அவர் அழிச்சாட்டியம் செய்வது, பிக் பாஸ் வீட்டின் விதிகளை மறுத்து. இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.
விசித்ராவின் அலப்பறையை தினேஷ் கையாண்ட விதம் சிறப்பானது. ஒரு கேப்டனிற்கான அத்தனை தகுதிகளையும் அவர் கொண்டிருக்கிறார். ‘உங்களுக்கு தேவையான சாப்பாடு, படுக்கை அனைத்தையும் தந்து விடுவோம். ஆனால் நீங்கள் வீட்டிற்குள் நுழைய முடியாது. நேராக சிறைக்குத்தான் செல்ல வேண்டி இருக்கும் என்று விசித்ராவின் அகிம்சைக்கு எதிராக இன்னொரு அகிம்சை போராட்டத்தை தினேஷ் கையில் எடுத்தது சிறப்பான அப்ரோச். ஆனால் விசித்திராவோ ‘சுச்சாலாம் வந்தா இங்கேயே போகலாமா?’ என்று கேட்டது ரசிக்கும்படியாக இல்லை.
விசித்ராவின் அழிச்சாட்டியத்தை திறமையாகக் கையாண்ட தினேஷ்
‘பிக் பாஸ் சொன்னாலும் போகமாட்டேன் என்று அலப்பறை செய்த விசித்ராவிற்கு ஆவேசமான பக்கவாத்தியமாக இருந்தார் அர்ச்சனா. விசித்ராவின் துணை இல்லை என்றால் அர்ச்சனா எப்படி தனியாக பர்ஃபார்ம் செய்வார் என்று பார்க்க வேண்டும். `மேம்... மேம்...' என்று அழைக்கும் பலியாட்டை வைத்துக் கொண்டுதான் விசித்ராவும் இந்த கேமை உற்சாகமாக ஆடுகிறார். ‘கமல் சார்.. திட்டுவாரு... திட்டட்டும்’ என்று இவர்கள் பேசிக்கொண்டார்கள். தன்னை ‘விதிமீறல் விசித்ரா’ என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதப்பட்டார் விசித்ரா.
“நீங்க இந்த மாதிரி பண்றது நெகட்டிவா வெளிய தெரியும். அப்படின்னு விசித்ரா கிட்ட சொன்னா, அவங்க உள்ள வந்துருவாங்க” என்கிற உத்தியை மாயாவிடம் சொன்ன பூர்ணிமா அதை செயல்படுத்த முயன்றார். “ நீங்க சாப்பாடு மட்டும் சாப்புட்ருங்க. அப்புறம் என்ன வேணா பண்ணிக்கங்க உங்க இஷ்டம்” என்பது போல் கன்வின்ஸ் செய்ய முயன்று தோற்றார் பூர்ணிமா. “ஒரு பக்கம் நம்மை நாமினேட் பண்ணிட்டு இன்னொரு பக்கம் நல்லவங்க மாதிரி நடிக்கிறாங்க.. மேம்” என்று குருவிற்கு ஏற்றிக் கொடுத்தார் அர்ச்சனா. ஒருவர் எதிர்த்து வாக்களித்து இருக்கலாம். ஆனால் மருத்துவப் பிரச்சினை உள்ளவர் சாப்பிடாமல் இருக்கும் போது அதை வற்புறுத்துவதுதானே அடிப்படையான மனிதநேயம்?!
‘சிறையில் இருக்கும் கழிப்பறையை உபயோகப்படுத்தாமல் வீட்டினுள் இருக்கும் கழிப்பறையைத்தான் பயன்படுத்துவேன்’ என்று அடுத்த அலப்பறையை ஆரம்பித்தார் விசித்ரா. வேறு வழி இல்லாமல் மற்ற போட்டியாளர்களிடம் கலந்து பேசி இந்தச் சலுகையை தந்தார் தினேஷ். இந்தப் பிரச்சனையை தினேஷ் கையாளும் விதம் பூர்ணிமாவிற்கு திருப்தியாக இல்லை. “நீங்க அவங்களை பேசி கன்வின்ஸ் பண்ணனும். மனிதாபிமான நோக்கில் நடந்துக்கணும்” என்றெல்லாம் சொல்லி இடையூறு இம்சை தந்து கொண்டிருந்தார். ஒருவேளை இந்த விஷயத்தை வைத்து தனது நெகட்டிவ் ஷேடை போக்கி நல்ல பெயர் வாங்கலாம் என்பது பூர்ணிமாவின் திட்டமா என்று தெரியவில்லை. ஏனெனில் தினேஷ் இதை சிறப்பாகத்தான் கையாண்டு கொண்டிருந்தார்.
விசித்ராவின் போராட்டத்தை இன்னொரு போராட்டத்தால் எதிர்கொண்ட தினேஷ்
அடுத்ததாக தினேஷ் செய்த இன்னொரு மூவ், அட்டகாசமான ஸ்ட்ராட்டஜி. விசித்ராவும் அர்ச்சனாவும் மட்டும் கார்டன் ஏரியாவில் படுத்தால், பார்வையாளர்களின் கோபம் தன் மீது வந்து விடக்கூடும் என்று கருதினாரோ, என்னவோ, அகிம்சைக்கு எதிராக இன்னொரு அகிம்சையை கையில் எடுத்து தானும் படுக்கையை கொண்டு வந்து கார்டன் ஏரியாவில் போட்டது நல்ல விஷயம். கேப்டனைப் பின்பற்றி மேலும் பலர் வந்து இதில் இணைந்து கொண்டார்கள். தனது போராட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது என்பதை உணர்ந்து கொண்ட விசித்ரா ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்கிற கதையாக ‘மற்றவர்கள் வெளியில் படுத்து கஷ்டப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் சிறைக்குள் போகிறோம்’ என்று சொல்ல பக்கவாத்தியத்தை உச்சக்கட்டத்தில் அடித்து ஆமோதித்தார் அர்ச்சனா. “எல்லாரையும் நம்ம எக்ஸ்போஸ் பண்ணனும் மேம்..” என்று அர்ச்சனா சபதம் எடுக்க, ‘எல்லோரையும் மாட்டி விட்டிடணும்” என்று விசித்ராவும் கூடவே சபதம் எடுத்துக் கொண்டார்.
சிறைச்சாலை பிரச்னையை தினேஷ் கையாண்ட விதம் குறித்து பூர்ணிமாவிற்கும் மாயாவிற்கும் இடையில் மறுநாள் காலையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘தினேஷ் சரியாகத்தான் கையாண்டார்’ என்பது மாயாவின் தரப்பு. ‘சரியில்லை’ என்பது பூர்ணிமாவின் தரப்பு. தனது பாயிண்டை மாயா அழுத்தமாகச் சொன்னதால் எரிச்சல் அடைந்த பூர்ணிமா, அங்கிருந்து விலக, பின்னாடியே சென்று அவரைச் சமாதானம் செய்தார் மாயா. இந்தக் கூட்டணிக்குள் எப்போது வேண்டுமானாலும் பயங்கர விரிசல் ஏற்படலாம் என்பதற்கான முதல் தடயம் இது. பூர்ணிமா இல்லாமல் மாயா இயங்குவது கடினம்.
‘உன்னைப் போல் ஒருவன்’ பற்றிய விசாரணை
அகம் டிவி. கமல் என்ட்ரி. “உற்சாக மூடில் இருக்கிறீர்கள்.. ‘உன்னைப் போல் ஒருவன் டாஸ்க்தான் காரணமா?’ என்று சம்பந்தமில்லாமல் பேச்சை ஆரம்பித்தார் கமல். தான் என்ன பேச விரும்புகிறோமோ, அதற்குள் வலுக்கட்டாயமாக போட்டியாளர்களை இழுப்பது கமலின் ஸ்டைல். உபோஒ டாஸ்க் பற்றி ஒவ்வொருவரும் பேச வேண்டும். முதலில் எழுந்த கானா பாலா “என் கேரக்டரை பூர்ணிமா செய்தார்கள். முகத்தோற்றம் ஒரே மாதிரியாக மேட்ச் ஆச்சு” என்று சொன்னதும் பூர்ணிமாவிற்கு நிச்சயம் ஜெர்க் ஆகியிருக்க வேண்டும். தன்னுடைய பாத்திரத்தை விஷ்ணு கையாண்ட விதம் பற்றி மாயா சொல்லும் போது “ஆரம்பத்தில் நன்றாகத்தான் போச்சு. ஆனால் பிறகு நெகட்டிவ்வான விஷயங்களை நிறைய காட்டினாரோ என்று தோன்றியது. நான் இந்த வீட்டில் அது மட்டுமா செய்திருக்கேன் என்று ஆதங்கமாக இருந்தது” என்று சொல்ல “ஆமாம் நீங்கள் செய்த ஏராளமான சாதனைகளில் ஒன்றை மட்டும்தான் சொன்னார் போல” என்று சர்காஸ்டிக்காக உள்ளே புகுந்தார் கமல்.
தனது கேரக்டரை செய்த மாயாவின் பங்களிப்பு பற்றி விஷ்ணு பேசும்போது “அவங்க கேரக்டரை நான் பண்ணேன். நான் என்ன செய்கிறேன் என்பதை கவனிப்பதுதான் அவரது முக்கியமான வேலையாக இருந்தது. நான் ஒரு ஸ்டெப் முன்னே போனால், அவர் இரண்டு ஸ்டெப் தாண்டி அடிப்பார். நாயகன் படத்தின் வசனம் மாதிரி, மாயா நல்லவரா கெட்டவரா என்று தெரியவில்லை” என்று விஷ்ணு சொல்ல சபை கலகலத்தது. “வேற யாரையெல்லாம் பற்றி அப்படிச் சொல்லுவீங்க?” என்று கமல் கேட்க ‘மாயா, பூர்ணிமா, தினேஷ், விசித்ரா ஆகிய நான்கு பெயர்களையும் ‘நல்லவரா, கெட்டவரா’ லிஸ்டில் விஷ்ணு குறிப்பிட்டார். (நேற்றைய கட்டுரையில் இதே நால்வரையும் டாப் 4 போட்டியாளர்களாக குறிப்பிட்டு இருந்ததை நண்பர்கள் நினைவு கூரலாம்).
அர்ச்சனா பேச எழுந்த போது பலத்த கைத்தட்டல் கேட்டது. (பார்றா!). தான் அழுததை மட்டுமே சுரேஷ் செய்து காட்டியதை இவர் மறக்காமல் புகாராக சொன்னது நல்ல விஷயம். “என்னுடைய கேரக்டரை நன்றாக செய்ய வேண்டாம் என்று சுரேஷிடம் சிலர் கூறியிருக்கிறார்கள்” என்று அர்ச்சனா புகார் சொல்ல சுரேஷிடம் அதைப் பற்றி விசாரித்தார் கமல். அவரோ விஷ்ணு மற்றும் மணியை நோக்கி கை காண்பிக்க, விஷ்ணுவோ மாயாவை நோக்கி கை காண்பித்தார். ஆனால் மாயாவோ ‘விஷ்ணு கேரக்ட்டரில் இருந்துதான் அப்படி பேசினேன்” என்று எஸ்கேப் ஆனார். (நல்லா ஆடறீங்கப்பா.. கேம்!)
‘நிக்சன் சார்ன்னுதான் இனி கூப்பிடணுமாம்’ - விசித்ரா ஆதங்கம்
அடுத்ததாக விசித்ரா எழுந்தபோதும் பலத்த கைத்தட்டல் கேட்டது. “நிக்சன் சார் என்னுடைய கேரக்டரை செய்தார்” என்கிற விசித்ராவின் ஆரம்பமே அதிரடியாக இருக்க, கமல் நமட்டுச் சிரிப்பு சிரித்தார். நிக்சன் முகத்தில் ஜெர்க் வந்தது. “எனக்கு நெகட்டிவ் சைட் அதிகமாக இருக்கிற மாதிரிதான் அவர் ப்ரொஜெக்ட் பண்ணாரு. என்கிட்ட கெத்து தான் இருக்கும். திமிர் இருக்காது. அதை தவறான முறையில் அவர் காட்டியது வருத்தமாக இருந்தது. அந்த வகையில் அந்த கேரக்ட்டர் ஹிட் ஆயிடுச்சு. அவர்களுக்கு வெற்றி” என்று விசித்ரா புகார் சொல்ல “அதை ஜாலியாதான் செஞ்சேன். நெகட்டிவ்வா செய்யணும்னு எந்த பிளானும் பண்ணலை” என்று மறுத்தார் நிக்சன்.
அடுத்ததாக தினேஷ் எழுந்தபோதும் பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல் கேட்டது. (இப்படி தட்டித் தட்டிதான் பிரதீப்பை காலி பண்ணாங்க!) “எனக்கு முதல்ல நடிக்க வாய்ப்பு தரவில்லை. பூர்ணிமா என்னைப் போல் நடிக்கும் போது நான் வாய்ஸ் அவுட் செய்வதை நன்றாக பிரதிபலித்தார். அது எனக்கு பிளஸ் ஆக இருந்தது ஆனால் சீக்ரெட் டாஸ்க்கின் போது செய்ததை மட்டுமே அடிக்கடி அவர் செய்து காட்டியது சங்கடத்தை ஏற்படுத்தியது” என்று சொல்லி அமர்ந்தார் தினேஷ்.
இது பற்றி பிறகு கமல் தந்த பொழிப்புரை சிறப்பானது. “மிமிக்ரி ஆர்டிஸ்ட்டுகள் செய்வதை சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். இது நான் இல்லையே என்று மறுப்பார்கள். ஒரு குறிப்பிட்ட சாரத்தை மாத்திரமே மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுகள் எடுத்துக் கொள்வார்கள். ஒருவரை அப்படியே முழுமையாக பிரதிபலிக்க முடியாது. அதன் மூலமாக உங்களுக்கு வரும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதுதான் சிறப்பானது. நான் மிமிக்ரி பண்ண மாட்டேன். அதனால் நிறைய எதிரிகள் கிடைத்தார்கள். சில குரல்களை மிமிக்ரி செய்வது கடினம்” என்றார் கமல்.
ஒரு காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற குரல்களை மிமிக்ரி கலைஞர்கள் மிக எளிதாக செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் கமலின் பிரத்யேகமான குரலை மிமிக்ரி செய்யவே அப்போது ஆளில்லை. அது எவருக்குமே வரவில்லை. நாயகன் படத்திற்குப் பிறகுதான் அது சாத்தியமாயிற்று. ‘வேலு நாயக்கர் பேசும் ஒரு மாடுலேஷனை பிடித்த பிறகு தான் கமலின் குரலை ஒருமாதிரியாக நெருங்க முடிந்தது” என்று முதன் முதலில் கமலின் குரலை முயன்று பார்த்த கலைஞர் கூறினார். (மயில்சாமி என்று நினைவு).
‘மரியாதை என்றால் என்னங்கய்யா?’
ஒரு பிரேக் முடிந்து திரும்பிய கமல், மரியாதை என்கிற தலைப்பில் நீண்ட நேரத்தை அநாவசியமாக இழுத்தார். “உங்க பார்வையில் மரியாதை என்றால் என்ன?” என்று ஒவ்வொருவராக விசாரிக்க ஆரம்பித்தார். ‘விசித்ரா மேம் கடைசியாகச் சொல்லட்டும்’ என்று கமல் சொன்னது நல்ல குறும்பு. ‘மரியாதையை நாம் முதலில் தந்தால்தான் நமக்கு திரும்பக் கிடைக்கும்… நாம் நடந்து கொள்வதை வைத்துதான் மரியாதை கிடைக்கும்… வயதிற்கும் மரியாதைக்கும் சம்பந்தமில்லை. குணம்தான் பெரியது’ என்கிற கருத்தை அடிப்படையாக வைத்து பலரும் பேசினார்கள். ‘ஒருவர் நமக்கு தரும் மரியாதையை வைத்து தான் பக்கத்தில் இருப்பவரும் தருவார்’ என்று சுரேஷ் சொன்ன முக்கியமான பாயிண்ட்டை தலையை ஆட்டி ஆமோதித்தார் கமல். ‘அது வளர்ப்பில் இருந்து வரும் விஷயம்’ என்றார் விஷ்ணு.
கடைசியாக எழுந்த விசித்ரா “பிரபலமான நடிகர்களை தனிப்பேச்சில் அவன் இவன் என்று சொல்லுவோம். ஆனால் நேரில் சந்தித்தால் அவர் இவர் என்று சொல்லுவோம்” என்று ஆரம்பித்ததுதான் தாமதம், தன்னுடைய சுயபுராணத்தை சைடு கேப்பில் திறமையாகச் செருகினார் கமல். “என் பசங்க மாதிரிதான் இவங்கள நினைக்கிறேன். அந்த உரிமையோடுதான் பேசிட்டு இருந்தேன். நிக்சன் சொன்னது எனக்கு ரொம்ப ஹர்ட் ஆயிடுச்சு. அம்மாவா நடிக்கிறேன்ற மாதிரி சொல்லிட்டாரு. தாய் அன்பை எப்போதும் சந்தேகப்படக்கூடாது” என்று கண்கலங்கினார் விசித்ரா.
“இனிமேல் நிக்சன் சார் என்றுதான் என்னை கூப்பிட வேண்டும் என்று நிக்சன் சொன்னார்” என்று விசித்திரா சொன்னதை மறுத்தார் நிக்சன். (இந்த வாக்கியத்தை இன்னொரு முறை படிச்சீங்கதானே?!) “நீங்க சொன்னதை நான் பார்த்தேன்” என்று நிக்சனிடம் கமல் சாட்சி சொல்ல, குறும்படம் வருமோ என்று தோன்றியது. “ஒரு ப்ளோல சொல்லி இருப்பேன் சார். ஆனா அதை நான் டிமாண்ட் பண்ணவில்லை” என்ற விளக்கத்தின் மூலம் சமாளித்தார் நிக்சன்.
விசாரணையில் சொதப்பிய விசித்ரா
இந்தச் சூழலை சபையில் விசித்ரா கையாண்ட விதம் ரசிக்கும்படியாக இல்லை. தனிப்பட்ட உரையாடலில் கோபத்தில் பேசுவது வேறு. ஆனால் ஒரு சபையில் விசாரணை நிகழும் போது தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நிதானமாக பேசுவதுதான் சரியானது. பிரதீப் கோட்டை விட்ட விஷயமும் இதுவே. விசித்திராவும் இப்போது இதையே செய்தார். ‘லோக்கல் ரவுடி’ என்று நிக்சனைப் பற்றி சொன்னதை இப்போதும் நியாயப்படுத்தினார். “அவனுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு” என்றெல்லாம் பதிலுக்கு பதில் குற்றம் சாட்டியது ரசிக்கும்படியாக இல்லை.
“லுங்கியை மடித்துக் கொண்டு வந்தால் ரவுடியா?. நீங்கள் சொன்னது தவறு” என்று விசித்ராவை அழுத்தமாக கண்டித்தார் கமல். “மரியாதை என்பதைக் கொடுத்துதான் பெற முடியும். இதுதான் என் வாழ்க்கைப் பாடம். உங்களுடைய கருணையை இன்னமும் கூட்டி இருந்தால் மரியாதை தானாக கிடைத்திருக்கும்” என்றெல்லாம் விசித்ராவிற்கு கமல் சொன்ன அறிவுரை சரியானது. ‘உங்களுடைய பார்வைக் கோணங்கள் மாறுவதைப் போலவே நிக்சனின் பார்வையும் மாறுவதற்கான உரிமை இருக்கிறது” என்று அவர் சொன்ன பாயிண்ட்டும் சரியானது.
என்னதான் சபையில் விசித்ரா கோபமாக பேசினாலும் “அவங்க மேல எனக்கு இன்னமும் மரியாதை இருக்கு” என்று அடக்கி வாசித்தார் நிக்சன். ஐஷூ வெளியேறியதற்கு நிக்சன் காரணமா என்கிற பிரச்சினையை இப்போது துவக்கி வைத்தார் விசித்ரா. “நான் காரணமாகவே கூட இருக்கட்டும். அதைப் பற்றி மறுபடியும் மறுபடியும் பேச வேண்டாம் என்பதுதான் என்னுடைய வேண்டுகோளாக இருந்தது” என்று நிக்சன் சொல்லும் விளக்கம் சரியாகவே இருக்கிறது. விசித்ராவிற்கு ஐஷூ மீது உண்மையிலேயே அன்பிருக்கிறது என்றால் அந்த எலிமினேஷன் பற்றி அவர் பேசக்கூடாது.
ஏனெனில் அந்த விஷயத்தைத் தொட்டால் அதில் நெருப்பு பற்றிக் கொண்டு பல விஷயங்களை மீண்டும் நினைவுப்படுத்தக்கூடிய ஆபத்து இருக்கிறது.. “விசித்ராவிற்கு நான் சொல்லி புரிய வைக்கட்டுமா?” என்று அழுத்தமாக கேட்ட கமல் “நீங்க SAVED” என்று ஆனந்த அதிர்ச்சியைத் தந்து விட்டுச் சென்றார்.
விசித்ராவிடம் கேள்வி கேட்க நிக்சன்தான் சென்றார் என்பது போல் நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். அப்படியல்ல. விசித்ராவின் அழைப்பின் பேரில்தான் நிக்சன் சென்று இருக்கிறார். எனில் இந்த விவகாரத்தை மீண்டும் ஆரம்பித்தவர் விசித்ராதான் என்று தெரிகிறது.
‘யார் மீது அதிக மரியாதை இருக்கிறது?’
பிரேக் முடிந்து திரும்பி வந்த கமல் “இந்த மரியாதை உரையாடலை ஒரு மரியாதையுடன் முடிவுக்கு கொண்டு வந்து விடுவோம். அம்மா எடுத்துக் கொள்ளும் உரிமையை போலவே குழந்தையும் உரிமை எடுத்துக் கொள்ளும். ஆனால் அந்த லட்சுமண ரேகையை யாராக இருந்தாலும் பின்பற்றுவது நல்லது. சத்தம் போட்டு, திட்டம் போட்டு மரியாதையை வாங்க முடியாது என்று இந்த விஷயத்தை முடித்து வைத்தார்.
‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்பது போல மரியாதையை வைத்து அடுத்த டாஸ்க்கையும் ஆரம்பித்தார் கமல். ‘இந்த வீட்டில் நீங்கள் மிகவும் மதிக்கும் நபர் யார்?’ என்பது கேள்வி. இதில் மாயா, விசித்ரா, சுரேஷ் ஆகிய மூவருக்கும் அதிக வாக்குகள் வந்தன. “நீங்க சொன்ன புத்திமதி வச்சுதான் நான் என்னை மாற்றிக் கொண்டேன்.வெளியே வரும்போது புதிய நபராக இருப்பேன்” என்று கமலுக்கு ஐஸ் வைத்தார் சுரேஷ்.
கமல் பிரேக்கில் சென்றதும் “தினேஷை இனிமே சீண்டாதீங்க. அண்டர்பிளே பண்ணுங்க. ‘சண்டைக்கு வாடான்றவங்க கிட்ட நாம சண்டை போடக்கூடாது” என்றெல்லாம் குருவை மிஞ்சிய சிஷ்யையாக விசித்ராவிற்கே தீவிரமாக அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் அர்ச்சனா. ‘பூர்ணிமாவின் மீது எனக்கு மரியாதை’ என்று சுரேஷ் சொன்னது அர்ச்சனாவிற்கும் விசித்ராவிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னுடைய பெயரை சுரேஷ் சொல்லி இருக்க வேண்டும் என்று விசித்ரா எதிர்பார்த்து இருப்பார் போல.
ரன்அவுட், யார்க்கர்- பிக் பாஸ் கிரிக்கெட் விளையாட்டு
பிரேக் முடிந்து திரும்பி வந்த கமல், உலக கோப்பை கிரிக்கெட் நடந்து கொண்டிருப்பதால், அதை வைத்து ஒரு டாஸ்க்கை ஆரம்பித்தார். ரன் அவுட், வைட் பால், ஹிட் அவுட், ஓவர் த்ரோ, 12த் மேன், sledging, கோல்டன் டக், யார்க்கர் போன்றவற்றில் இரண்டைத் தேர்ந்தெடுத்து யார் யாருக்கு பொருத்தம் என்று சொல்ல வேண்டும். யார்க்கரை தினேஷிற்கும் 12th மேனை விக்ரமிற்கும் தந்து இந்த டாஸ்க்கை சரியாகத் தொடங்கி வைத்தார் அர்ச்சனா. ஓவர் த்ரோ என்று மாயா மீது நிறைய பேர் பொருத்திய அம்சம் சரியாக இருந்தது. சொந்த செலவில் சூனியம் போல அவர் செய்யும் காரியங்கள் அவருக்கே எதிராக திரும்பி வருகின்றன. வைட் பால் என்பதை சுயவாக்குமூலமாக ஒப்புக்கொண்டார் ஜோவிகா.
“சில ஸ்டார்கள் உங்களுக்கு தரப்படும். அதை வைத்து ஒரு டாஸ்க் இருக்கிறது. அதைச் செய்யுங்கள். நாளை சந்திப்போம்” என்று விடைபெற்றார் கமல்.
விஷ்ணு மற்றும் விசித்ரா ஆகிய இருவரும் தலா இரண்டு ஸ்டார்கள் வைத்திருக்கிறார்கள். மணி மற்றும் ரவீனா ஆகிய இருவரும் தலா ஒரு ஸ்டார் வைத்திருக்கிறார்கள். இவர்கள் கூடி பேசி அனைத்து ஸ்டார்களையும் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். அதில் கிடைக்கும் சக்தியை வைத்து அவர் இரண்டு நபர்களை அடுத்த வார எவிக்ஷனுக்கு அனுப்ப முடியும்.
இதற்கான கலந்துரையாடலில் ‘நிக்சனை எவிக்ஷனுக்கு நாமினேட் செய்ய வேண்டாம் என்று அழுத்தமாக மறுத்தார் விசித்ரா. இது சரியான மூவ். ஏனெனில் இப்போது அவர் நிக்சனை தேர்ந்தெடுத்தால் பழிவாங்கல் உணர்ச்சி என்று பார்வையாளர்கள் கருதிக் கொள்வார்கள். ‘சுமாராக ஆடுபவர்கள் எப்படியும் வெளியே செல்வார்கள். பல வாரங்களாக தப்பித்துக் கொண்டே இருக்கிற போட்டியாளர்களை நாமினேட் செய்யலாம்’ என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாயாவின் பெயரை மணியும் ஜோவிகாவின் பெயரை விசித்ராவும் முன்மொழிந்தார்கள். இதற்கான பவர் விஷ்ணுவிடம் அளிக்கப்பட்டது. நான் கேட்கும் போது அந்த இரண்டு பெயர்களை சொல்லுங்கள் என்று பிக் பாஸ் அறிவித்தார்.
நாமினேஷன் லிஸ்ட்டில் மாயாவும் ஜோவிகாவும் வருவது சிறப்பான விஷயம். கூட்டணியால்தான் அவர்கள் இத்தனை வாரமும் நழுவிக் கொண்டிருந்தார்கள். இந்த வாரத்தில் மாயா கூட தப்பித்து விட்டார். எனில் இவர்கள் மக்களை சந்தித்து, அந்த ஆதரவு பெற்று மீண்டும் ஆட்டத்திற்குள் திரும்புவதுதான் நல்ல விஷயமாக இருக்கும்.. விஷ்ணு யார் பெயரை சொல்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்த வாரம் கானா பாலா வெளியேறுகிறார் என்று தெரிகிறது. ‘சும்மா உக்காந்து சோறு தின்னுக்கினு வீட்டில் இருக்க மாட்டேன்’ என்று அவரது ஆரம்பத்தில் பாடியதெல்லாம் உற்சாகமாகத்தான் இருந்தது. ஆனால் பிறகு வெறும் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ் போலவே உலவிக் கொண்டிருந்தது ஏமாற்றம்.
விதித்ராவின் விதிமீறல் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி கமல் இன்றாவது பேசுவார் என்று எதிர்பார்ப்போம்.
விசித்ரா நடந்துகொண்டது குறித்த உங்களின் கருத்தை கமென்ட்டில் தெரிவியுங்கள்!
from Latest news

0 கருத்துகள்