உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதப்போகும் போட்டி இன்று நடைபெறவிருக்கிறது.
2011 உலகக்கோப்பைக்குப் பிறகு மீண்டும் இந்திய அணி உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறது. ரெக்கார்டுகளின்படி பார்க்கையில் இந்தப் போட்டியில் இந்திய அணி ஸ்கோரை சேஸ் செய்வதுதான் நல்லது எனத் தோன்றுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பிட்ச் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், இறுதிப்போட்டி நடைபெறப்போகும் அஹமதாபாத் மைதானத்தில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய பிட்ச்சைத்தான் இந்தப் போட்டிக்கும் பயன்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் அஹமதாபாத் மைதானத்தில் 5 ஆம் நம்பர் பிட்ச்சில் ஆடியிருந்தனர். அந்த 5 ஆம் நம்பர் பிட்ச்சில்தான் இறுதிப்போட்டியும் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடப்பு உலகக்கோப்பையில் அஹமதாபாத்தில் இதுவரை 4 போட்டிகள் நடந்திருக்கின்றன. அந்த 4 போட்டிகளில் 3 போட்டிகளில் டார்கெட்டை சேஸ் செய்த அணிகளே வென்றிருக்கின்றன. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே முதலில் பேட் செய்த அணி வென்றிருக்கிறது. இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியில் கூட 192 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றிருந்தது. ஆட்டம் செல்ல செல்ல பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் மாறும் என்பதுதான் இதுவரையிலான நிலை. ஆக, டாஸை வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், இந்த மைதானத்தில் அதிக ஸ்கோர் வெளிப்படும் ஆட்டத்தை பார்க்க முடியாது என்பதும் ரெக்கார்டுகளின்படி தெரிகிறது. நடந்திருக்கும் நான்கு போட்டிகளில் எந்த அணியும் 300+ ரன்களை எடுக்கவே இல்லை. அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிராகத்தான் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்து 286 ரன்களை எடுத்திருக்கிறது. மேலும், நடப்பு உலகக்கோப்பையில் அஹமதாபாத்தில் முதலில் பேட் செய்து வென்றிருக்கும் ஒரே அணியும் ஆஸ்திரேலியாதான்.
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணி எத்தனை ரன்கள் அடிக்க வாய்ப்பிருக்கிறது என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!
from Latest news

0 கருத்துகள்