Header Ads Widget

``காவிரி வரும், நீட் ரத்தாகும்... தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்!” - அப்பாவு உறுதி

திருவாரூரில் அமைந்திருக்கும் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில், `சட்டமன்ற நாயகன் கலைஞர்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், அரசு தலைமை கொறடா கோவை செழியன், திருவாரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய தங்களது கருத்துகளைப் பேசினர். கருத்தரங்கில் திரு.வி.க கல்லூரியைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, ``தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறக்கூடிய இந்தக் கருத்தரங்கில் மாணவர்களாகிய உங்களுடன் பேசுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அதிலும் குறிப்பாக, இந்த அரங்கம் முழுவதும் பெண்கள் அதிகமாக அமர்ந்திருக்கிறீர்கள். இதுதான் திராவிட மாடல் அரசு செய்த சாதனை. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் கண்ட கனவு தற்போது நிறைவேறியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தக் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டப்படவிருக்கிறது. அதற்குப் பெயர் `காமராஜர் கட்டடம்.’ காமராஜர் இல்லாமல் போயிருந்தால் தமிழ்நாட்டில் நிறைய பேர் படிப்பு என்கிற வாசனையே இல்லாமல் போயிருப்பார்கள். தமிழ்நாட்டு கல்விக்கு காமராஜர் ஆற்றிய பணி அளப்பரியது. ஆனால், காமராஜரையே கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய வீட்டுக்குத் தீவைத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள். நாட்டில் எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்று எண்ணிய காமராஜரையே வீட்டோடு தீவைத்து எரித்துக் கொல்ல முயற்சி செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள். அது மட்டுமில்லாமல் நம் நாட்டுக்காகப் போராடிய மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள்தான் இந்த ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்.

இந்தியாவிலேயே அதிக பெண்கள் பட்டம் படித்துக்கொண்டிருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பெண்கள் கல்வி கற்பது நம் நாட்டில் சிலருக்குப் பிடிக்காமல் இருந்துவருகிறது. மத்திய அரசு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களுக்குப் போதுமான நிதியை ஒதுக்க மறுக்கிறது. நாடு போற்றும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சம்ஸ்கிருதத்துக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கை என்கிற நாசகாரக் கொள்கையைக்கொண்டு வந்து, கல்வியை ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார்களின் கூடாரமாக மாற்ற முயற்சி செய்துவருகிறார்கள்.

நாட்டிலுள்ள பெண்களான நீங்கள் படியுங்கள். இந்த உலகைப் புரிந்துகொள்ளுங்கள். கல்வி ஒன்றுதான் இந்த உலகை மாற்றும் ஒரே ஆயுதம். தொடர்ந்து படியுங்கள். அதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து உங்களோடு துணை நிற்கும்” என்று பேசியவர், தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

``கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தோழர் சங்கரய்யா அவர்களுக்கு மதுரை பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவுசெய்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் சாவர்க்கர் வழிவந்த ஆளுநர் ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்துவருகிறார். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் நாட்டின் விடுதலைக்காகப் போராடி சிறையில் இருந்தவர் தோழர் சங்கரய்யா அவர்கள், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்காமல் யாருக்கு வழங்கப் போகிறார் என்று தெரியவில்லை. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளித்திருந்தால், ஆளுநருக்குத்தான் அது பெருமையாக இருந்திருக்கும். ஆனால், அதை அவர் செய்ய மறுத்துவிட்டார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்கள் பணி மூப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள். ஆனால், மத்திய அரசாங்கம்தான் நுழைவுத்தேர்வு வைத்து அவர்களை தேர்வுசெய்யச் சொன்னது. கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதால்தான் இது போன்ற சிக்கல்கள் நிலவுகின்றன. இதைக் களைவதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்துவருகிறது. 67 ஆண்டுகளில் இந்திய நாட்டின் கடன் தொகை 67 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. ஆனால், மோடி அரசாங்கம் ஆட்சி அமைத்த ஒன்பது ஆண்டுகளில் இந்திய நாட்டின் கடன் சுமை 140 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதில் பெரும்பாலான கடன் தொகை நாட்டிலுள்ள பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

நாட்டிலுள்ள எல்லா உயர் பதவிகளிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையே அதிகம் நியமனம் செய்து, நாட்டையே ஆர்.எஸ்.எஸ்-காரர்களின் கூடாரமாக மாற்ற முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மோடி அரசாங்கம் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டுவருகிறது.

அதாவது, தமிழ்நாட்டிலுள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு யூ.ஜி.சி மூலம் வெறும் ஐந்தாயிரம் கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கிவிட்டு, பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்திருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் தற்போது நடவுப் பணிகள் தொடங்கியிருக்கின்றன. விவசாயிகளுக்கு என்ன தேவையோ அதை நிவர்த்தி செய்யக்கூடிய அரசாக தமிழ்நாடு அரசு நிச்சயம் இருக்கும். தமிழ்நாடு சட்டமன்றம் காவிரி விவகாரத்தில், கர்நாடகா அரசை தொடர்ந்து வலியுறுத்தி தமிழ்நாட்டினுடைய உரிமை நிலை நாட்டப்படும். தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். 2024 -ல் `இந்தியா’ கூட்டணி வென்று தமிழ்நாட்டுக்கான காவிரிநீரும் கிடைக்கும். சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்படும். நீட் தேர்வும் ரத்துசெய்யப்படும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்