Header Ads Widget

'முதல்வர் ஸ்டாலின் உரை திட்டமிட்டு புறக்கணிப்பா?' - இலங்கை மலையகத் தமிழர் விழா சர்ச்சை!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலிருந்து ஏராளமான மக்கள் இலங்கைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களில் குறைவான கூலிக்கு பணியமர்த்தப்பட்டனர். அவர்கள், `மலையக மக்கள்’ என அழைக்கப்பட்டனர். இது நடந்து 200 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு கொழும்பில் ’நாம் 200’ என்ற தலைப்பில் மலையகத் தமிழர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 2-ம் தேதி நடந்த நிகழ்ச்சிக்கு அந்த நாட்டின் அமைச்சர் ஜீவன் தொண்டைமான் தலைமை வகித்தார்.

இந்தியா - இலங்கை

மேலும், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்க அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரை பதிவுசெய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. ஆனால், அது நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவில்லை. மத்திய அரசின் அழுத்தமே இதற்குக் காரணம் என தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் குற்றம்சாட்டுகின்றன.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தென் தமிழகத்தில் இருந்த அப்பாவி மக்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள், `இலங்கை மலையகத் தமிழர்கள்’ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டு, தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களில் குறைவான கூலிக்கு பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் புலம்பெயர்ந்த 200-வது ஆண்டு தற்போது அனுசரிக்கப்படுகிறது. `நாம் 200 ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பர்யத்தின் முழக்கம்’ என்ற பெயரில் மூன்று நாள்கள் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்று காணொலி வாயிலாக மலையகத் தமிழர்களின் 'நாம் 200' விழாவுக்கு வாழ்த்துரை வழங்கி அனுப்பியிருந்தார், முதல்வர் ஸ்டாலின்.

வைகோ

அதில், "மலையகத் தமிழ் மக்களின் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும்போல கல்வியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் அவர்கள் மேலெழும்பும் காலத்தை எதிர்நோக்கித் தமிழ்நாடு காத்திருக்கிறது. கல்வி, சுகாதாரம், வாழிட உரிமைகள், பொருளாதார உதவிகள், சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். நாட்டை வாழவைத்த மக்களை வாழவைக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

முதல்வரின் உரை ஊடகங்கள் மற்றும் ஏடுகளுக்கும் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால், நவம்பர் 3-ம் தேதி கொழும்பில் நடைபெற்ற மேற்கண்ட விழாவில் முதல்வரின் காணொலி உரையை ஒளிபரப்பக் கூடாது என்று மத்திய பாஜக அரசு தடைபோட்டுவிட்டது என இன்று வெளியான ஆங்கில நாளேடு விரிவாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது. இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் இந்திய அரசின் சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். தமிழ்நாடு பாஜக தலைவரும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துரை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய காணொலி உரையை அந்த விழாவில் ஒளிபரப்ப தடை விதித்ததன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சிறுமைப்படுத்துவதற்கு முயன்றிருக்கும் மத்திய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. கடும் கண்டனத்துக்குரியது" எனத் தெரிவித்திருக்கிறார்.

மோடி, அமித் ஷா, பாஜக

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "விழாவுக்கு தமிழக முதல்வர் பங்கேற்க வேண்டும் என்று முறையான அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அவரால் கலந்துகொள்ள இயலாத நிலையில், அவருக்கு பதிலாக என்னை அந்த விழாவில் கலந்துகொள்ளப் பணித்திருந்தார். இது குறித்து விழா ஏற்பாட்டாளர்களுக்கும் முறைப்படி தெரிவித்தோம். இதற்காக மத்திய அரசின் வெளிவிவகாரத்துறையிடம் இலங்கைப் பயணம் மேற்கொள்ள உரிய அனுமதிபெற கடந்த 28-ம் தேதி விண்ணப்பம் அனுப்பப்பட்டுவிட்டது. விழா 2-ம் தேதி பிற்பகல் நடைபெறுகிறது. ஆனால், 1-ம் தேதி இரவு 9 மணி வரை மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை.

அதற்குப் பிறகு அனுமதி வருவது கடினம் என்ற சூழ்நிலையில், மீண்டும் விழா ஏற்பட்டாளர்களை அழைத்து நான் பயணத்தை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையை விளக்கினேன். பிறகு நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரத்துசெய்துவிட்டு வீடு திரும்பினேன். ஆனால் 1-ம் தேதி இரவு 9:30 மணிக்கு மேல் அனுமதி வந்திருக்கிறது. அதற்கு முன்னதாகவே பயண ஏற்பாடுகளை ரத்துசெய்துவிட்டோம். பின்னர், 2-ம் தேதி காலை சுமார் 11 மணி அளவில், விழா ஏற்பாட்டாளர்கள் தொடர்புகொண்டு முதல்வரின் வாழ்த்துச் செய்தி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். உடனடியாக முதல்வர் வாழ்த்துச் செய்தியைத் தயார்செய்து அனுப்பிவைத்தார். அது பிற்பகல் 2 மணிக்கு அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ முதல்வரின் வாழ்த்துச் செய்தி அங்கு ஒளிபரப்பு செய்யப்படவில்லை" என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் அளித்திருக்கும் விளக்கத்தில், "நிகழ்ச்சி 4 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில், பிற்பகல் 2-3 மணிக்குத்தான் முதல்வரின் வீடியோ கிடைத்தது. அரசு விழா என்பதால் நிகழ்ச்சி நிரலுக்கு முன் அனுமதிபெற வேண்டியது அவசியம். காணொலி உரையை ஒளிபரப்புவதில் நடைமுறைச் சிக்கல்தானே தவிர, வேறெதுவும் இல்லை. மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இலங்கை அதிபர் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் இலங்கைக்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்