மருத்துவம், சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களை ஆண்டுதோறும் மேடையேற்றி விருது வழங்கி கெளரவித்து வருகிறது அவள் விகடன். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆறாம் ஆண்டு அவள் விருதுகள் விழா, சாதனைப் பெண்களின் மாபெரும் சங்கமமாக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக நடந்தேறியது.

சென்னை, மணப்பாக்கத்திலுள்ள ஃபெதர்ஸ் ஏ ராதா ஹோட்டலில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் அவள் விருதுகள் விழா விகடன் முத்திரை பாடலுடன் ஆரம்பமானது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், அவள் விருதுகளில் முதன்மை விருதான தமிழன்னை விருதை வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டார். அவர் காலதாமதம் இல்லாமல் விழாவில் கலந்துகொண்டது, மேடையில் கேட்ட கேள்விகளுக்கும் தயங்காமல் பதில் அளித்த விதம் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. விழா மேடையில் ஃபெதர்ஸ் ஏ ராதா ஹோட்டலின் ஜெனரல் மேனேஜர் ஶ்ரீராமும் பங்கேற்றார்.
`நம் சமூகப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கல்வியிலிருந்துதான் பிறக்க முடியும்’ என்ற முழக்கத்தையே வாழ்க்கையாகக் கொண்டிருப்பவர் வசந்திதேவி. 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து கல்வித்தளத்திலும், சமுதாயத்திலும் மாற்றங்களுக்கு வித்திட்டு வருபவர்.
1980-களின் இறுதியில் உசிலம்பட்டி பெண் சிசுக்கொலைகளை, களத்துக்குச் சென்று தரவுகளோடு ஆவணப்படுத்தினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியபோது மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பையும் ஒருங்கிணைத்து, பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது முதல் பல பணிகளை முன்னெடுத்தார்.
கற்றல் நலனுக்கான `பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்’தை தொடங்கி இன்று வரை களமாடி வருகிறார். பள்ளி மாணவர் களின் தற்கொலை அவலங்களைத் தடுக்க மிகுந்த அக்கறை காட்டுபவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியபோது பெண்கள் பாதுகாப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உலகுக்கு கவனப் படுத்தினார். தற்போது தமிழக அரசு உருவாக்கியிருக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவிலும் பங்களித்திருக்கிறார்.
கற்றல் நலனுக்கான பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி 87 வயதிலும் களமாடிவரும் வே.வசந்திதேவிக்கு தமிழன்னை விருதை வழங்கி கெளரவித்தார் தொல்.திருமாவளவன்.
விருதைப் பெற்றுக்கொண்டவர், கல்வித்தளத்திலும் சமுதாயத்திலும் ஏற்பட வேண்டிய மாற்றங்களைப் பட்டியலிட்டார். அவள் விகடன் சார்பாக அவருக்குச் சூட்டப்பட்ட மலர் கிரீடத்தை அணிந்தபடி, அவருக்கு அளிக்கப்பட்ட வாளை சில கோரிக்கைகளுடன் திருமாவளவனிடம் அளித்து, `பின்தங்கிய மக்களின் கல்விக்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் வெட்டி வீழ்த்த இந்த வாள், போர் வாளாகப் பயன்படட்டும்' என்றார்.
விழாவில் தொல்.திருமாவளவன் பேசுகையில், ``தமிழ் மக்களின், தமிழ் நாட்டின் முக்கிய அடையாளமாகத் திகழும் விகடன் குழுமத்திலிருந்து வழங்கப்படும் அவள் விகடன் விருதுகள், வெற்றி பெற்றவர்களை மட்டுமல்லாமல், வெற்றி பெற நினைப்பவர்களையும் தேடிப்பிடித்து கெளரவிப்பது பெருமைக்குரியது. இந்த விருது விழா, இன்றைய இளம் தலைமுறையினரை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக மட்டுமல்லாமல் பலருக்கு உத்வேகத்தைத் தருவதாக அமைவது பாராட்டுக்குரியது" என்றார்.
தொடர்ந்து, சமீபத்தில் மறைந்த திருமாவளவனின் அக்கா வான்மதியுடன் இணைந்திருக்கும் போட்டோ ஓவியத்தை திருமாவளவனுக்குப் பரிசளிக்க, மேடையில் இருந்தவருடன் அரங்கத்தில் இருந்தவர்களும் நெகிழ்ந்தார்கள்.
from Latest news

0 கருத்துகள்