அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிந்துவிட்ட நிலையில் த.மா.க நாடாளுமன்ற தேர்தலில் யார் பக்கம் நிற்கப் போகிறது என்ற கேள்வி எழுந்த நிலையில், இப்போது `யாருடனும் கூட்டணி இல்லை’ என அறிவித்திருப்பது கவனம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பின் பின்னணி என்ன... நாடாளுமன்ற தேர்தலில் த.மா.க-வின் பிளான் என்னவென விசாரித்தோம்
திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் ``த.மா.க தற்போதைக்கு எந்த கூட்டணியிலும் இல்லை, நாங்கள் மட்டுமல்ல, தே.மு.தி.க-வும், பா.ம.க-வும் எந்த கூட்டணியிலும் இல்லை. கூட்டணி முடிவை ஜனவரியில் அறிவிப்போம்” எனப் பேசினார்.
நம்முடன் பேசிய விவரமறிந்த சிலர், ``பாஜக, அதிமுக கூட்டணி முறிவு அறிவிப்பிலிருந்து ஜி.கே வாசன் கடும் அப்செட்டில் இருக்கிறார். பா.ஜ.க, அ.தி.மு.க என இரண்டையும் எதிர்க்க முடியாத நிலையில் இருக்கிறார். பா.ஜ.க-வில் ஜி.கே வாசனுக்கு அதீத முக்கியத்துவம் தரப்படுகிறது, அதிமுக ராஜ்ய சபா சீட் கொடுத்திருகிறது. இருவரது நட்பும் அவசியம் எனக் கருதுகிறார் ஜி.கே வாசன். எனவே இப்போதைக்கு நாங்கள் யாருடனுமில்லை எனப் பேசிவருகிறார்” என்றனர்.
நம்முடன் பேசிய அரசியல் பார்வையாளர்கள் ``ஜி.கே வாசனின் இந்த பேச்சு, பா.ஜ.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கான சிக்னலாகத்தான் பார்க்க வேண்டும்.
இருக்கட்சிகளுமே மெகா கூட்டணி அமைப்போம் எனச் சொல்லி வந்தாலும் எந்த முன்நகர்வும் இல்லை. எந்த கூட்டணியிலும் அங்கம் வகிக்காமல் இருப்பது கட்சியை அக்டிவ்வாக வைத்திருக்க தடையாக இருக்குமென்பதால் கூட்டணிக்கு தயாராகிவிட்டார் ஜி.கே வாசன். ஏற்கனவே பா.ஜ.க மீது ஜி.கே வாசனுக்கு அதிருப்தி இருக்கும் நிலையில், இப்போதே பேச்சுவார்த்தைகளை தொடங்கி ஜனவரிக்கு பிறகு அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகம்” என்றனர்.
நம்மிடம் பேசிய த.மா.க இளைஞரணி நிர்வாகிகள் சிலர், ``அ.தி.மு.க கூட்டணியில் இணைகிறோம் என தகவல் உறுதியானது அல்ல. இதுவரை நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. எங்களை பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியிருப்பது பா.ஜ.கவுக்கு பலவீனம்தான். அ.தி.மு,க தி.மு.க இல்லாத அணிகள் வெற்றிக்கு அருகில்கூட செல்லவில்லை என்பது வரலாறு.
இது பா.ஜ.கவுக்கு பொருந்தும். மீண்டும் ஆட்சிக்கு வர விரும்பும் பா.ஜ.க தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மேலும் வலுப்படுத்த முயன்றிருக்க வேண்டும். ஆனால் தவறவிட்டுவிட்டனர். எங்களைப் பொருத்தவரை இருகட்சியுடனும் நட்புறவில்தான் இருக்கிறோம். எந்த அணியில் அங்கம் வகிக்கப் போகிறோம் என்பதை ஜனவரியில் அறிவிப்போம்” என்றார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/Lo2h4ev
via IFTTT

0 கருத்துகள்