Header Ads Widget

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா... மணமகள்களுக்கான சிறப்பு ஸ்கின் கேர் ரொட்டீன்..!

நம் வீட்டில் ஒருவருக்கு கல்யாணம் என்று தெரிந்தாலே போதும், புதுச் சேலை எடுப்பதிலிருந்து, ஃபேஷியல் செய்வது வரை அனைத்தும் பெர்ஃபெக்ட்டாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்போம், இல்லையா! அப்போது மணமேடையில் அமரப்போகும் கல்யாணப் பெண் ஒரு கதாநாயகியாக மிளிர எவ்வளவு மெனக்கெடுவாள்…?

வாழ்நாள் முழுவதும் நம் நினைவில் இருக்கப்போகும் நாளல்லவா ஒருவரின் திருமண நாள். பார்வைகள் முதல் பரிகாசங்கள் வரை அனைத்துமே நூறு வருடங்கள் ஆனாலும் மறக்காதே. அப்படி இருக்க உங்கள் துணைவரின் கண்களுக்கு நீங்கள் தேவதையாக காட்சி தர வேண்டாமா!?

ஸ்கின் ஃபாஸ்டிங்

கல்யாணத்துக்கு தேதி குறித்து விட்டாலே, அப்போதிலிருந்து உங்களின் உடல்நிலை, தலைமுடி, சரும மேன்மை என அனைத்திலும் கூடுதல் கவனம் கொள்ளவேண்டியது அவசியம். குறிப்பாக, உங்களின் சருமத்தை மெருகேற்ற உங்கள் கல்யாணத்திற்கு 6 மாதங்களுக்கு முன்பே அதற்கான பராமரிப்பு நடைமுறைகளை முறையாகச் செய்யத் தொடங்கியிருக்க வேண்டும்.

காரணம், கல்யாணம் நெருங்கும்போது நாம் செய்யும் பிரைடல் ஃபேஷியலின் முழுப் பலனை பெறுவதற்கு, முன்கூட்டியே கடைப்பிடிக்கப்படும் பராமரிப்பு வழிமுறைகளும் நமக்கு கைகொடுக்கும்.

வேகமே விவேகம்:

முதற்கட்டமாக, உடனே ஒரு சரும மருத்துவரை அணுகித் தனிப்பட்ட முறையில், உங்களின் சரும வகை என்ன, சருமத்தில் இயற்கையாகவே இருக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மருத்துவர்களுடன் இணைந்து உங்களுக்கான ஸ்கின் கேர் ரொட்டீனுக்கான கால அட்டவணையை உருவாக்க வேண்டும்.

மேலும், அவர்கள் பரிந்துரை செய்யும் கிளென்சர்கள், மாய்ஸ்ச்சரைசர்கள், சீரம்களையே உபயோகப்படுத்தவேண்டும்.

பளிச் சருமம்

பளிங்குபோல் பளிச் சருமம் சாத்தியமா?

உங்கள் சருமத்தின் தன்மையை மேம்படுத்த, வெறும் வெளிப்பூச்சுகள் மட்டுமே போதாது. உணவு முறை, உடலின் செயல்பாடு, வாழ்க்கை முறை என எல்லாவற்றிலும் சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியது அவசியம். அத்துடன், மருத்துவர்கள் பரிந்துரை செய்த சருமப் பராமரிப்பு பொருள்களை தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

சருமத்தைத் துன்புறுத்தும் கெமிக்கல்ஸ் அற்ற கிளென்சரை தேர்வு செய்து, நாளுக்கு இரண்டு முறை (காலை-மாலை) முகத்தை சுத்தம் செய்யவும்.

முகத்தை கிளென்சரை கொண்டு சுத்தம் செய்த பிறகு, முகத்தின் டோனரை தடவவேண்டும், அதற்கு பின் மாய்ஸ்ச்சரைசர் தடவ வேண்டும், இதன் மூலம் முகத்தில் ஈர்ப்பதத்தைத் தக்கவைக்க முடியும்.

மேலும், உங்களின் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றுவதற்கு வாரம் 2 முறை முகத்தில் ஃபேஸ் பேக் போட்டுக்கொள்ளலாம் அல்லது பால், கடலைமாவு போன்ற வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே சில பராமரிப்பு வழிமுறையை மேற்கொள்ளலாம்.

குறிப்பாக, வெளியே செல்லும்போது சன்ஸ்க்ரீனை உபயோகப்படுத்த மறந்துவிடாதீர்கள்.

முகத்தின் பொலிவை மேலும் கூட்டுவது எப்படி?

நேரம் தவறாமல், முகத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு 2-3 முறை கழுவ வேண்டும். இதுவே, உங்கள் முகத்திலிருக்கும் மாசை அகற்றி, முகத்தை பிரகாசமாக வைத்திருக்க உதவும்.

கூடுதலாக, ஃபேஸ் சீரம் அல்லது எண்ணெயைக் கொண்டு முகத்தைத் தொடர்ந்து மசாஜ் செய்வதன் மூலம், முகத்தில் ரத்த ஓட்டம் பெருகி, சரும செல்கள் சீராகி முகம் பொலிவு பெரும்.

வைட்டமின்-C, ரெட்டினொல் (Retinol), நியாசினமைட் (Niacinamide), ஆல்பா- ஹைட்ராக்ஸி ஆசிட் (alpha-hydroxy acids) அடங்கிய சருமப் பராமரிப்பு பொருள்களை உபயோகப்படுத்துவதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் மறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் காட்சி தரும். அதோடு, முகத்தின் நிறம் சீரடையும். நீங்கள் முதல் முறை இத்தகைய பொருள்களை சருமத்தில் தடவப்போகும் பட்சத்தில், பேட்ச் டெஸ்ட் (Patch test) செய்தபின் அந்தப் பொருளை வாங்குவது நல்லது.

சருமப் பொலிவு...

தூக்கம் முக்கியம் பிகிலு!

கல்யாணத் தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது, தலைக்கு மேல் ஆயிரம் வேலைகள் இருக்கின்றன என்றாலும், குறைந்தது 7-8 மணி நேரமாவது கட்டாயம் உறங்க வேண்டும். ஒருவரின் உடல்நலனையும் மன நலனையும் இணைக்கும் ஒரே துடுப்பு... தூக்கம் மட்டுமே. சீரான தூக்கம் உடலையும் உள்ளத்தையும் எப்போதுமே ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆழ்ந்த உறக்கம் பெறுவதற்கு, உறங்கும் முன் தியானம் செய்யலாம், வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம், அல்லது அமைதியான மெட்டு பாடல்களைக் கேட்கலாம்.

ஆழமான சருமப் பிரச்னைகள் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆழமான சருமப் பிரச்னைகள் உள்ளவர்கள், சரும மருத்துவரின் பரிந்துரைக்கு இணங்க, அட்வான்ஸ்டு ஃபேஷியல், கெமிக்கல் பீல், சருமத்திற்கான லேசர் சிகிச்சைகள், மைக்ரோடெர்மாப்ரேஷன் (Microdermabrasion) போன்ற சிகிச்சைகள் செய்து உங்கள் முகத்தின் அமைப்பை சரி செய்துகொள்ளலாம்.

மாதக்கணக்கில், உங்களை நீங்களே முறையாகப் பராமரித்து வந்ததன் விளைவு, கல்யாண மேடையேறும்போது, அனைவரின் கண்களையும் கண நேரத்தில் ஆட்கொண்ட பெருமை உங்களையே சேரும். அதை மனதில் வைத்து ஆனந்தமாக வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை எழுதத் தயாராகுங்கள்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்