Header Ads Widget

`அண்ணாமலை உண்மையான ஐ.பி.எஸ் என்றால், இதைச் செய்ய வேண்டும்..!' - காயத்ரி ரகுராம் சீண்டல்

அண்ணாமலையைச் சரமாரியாக விமர்சித்து வரும் காயத்ரி ரகுராம், தி.மு.க கூட்டணிமீதான விமர்சனத்தைக் கைவிட்டுவிட்டாரோ என்ற சந்தேகம் எழும் நிலையில், அவரை நேரில் சந்தித்துச் சில கேள்விகளை முன்வைத்தேன்.

`` `தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு, ரௌடிகளின் கூடாரமாகிவிட்டது' என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறாரே?"

“ரௌடிகளெல்லாம் பா.ஜ.க-வில்தான் சேருகிறார்கள். பா.ஜ.க-தான் அவர்களைக் காப்பாற்றுகிறது.”

“ஆளுநர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்றபோது, இந்த விமர்சனங்கள் வரத்தானே செய்யும்?”

“ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபர்தான் பா.ஜ.க அலுவலகத்திலும் பெட்ரோல் குண்டு வீசினார். அந்த நபரை ஜாமீனில் எடுத்தவருக்கு பா.ஜ.க-வில் எப்படிப் பொறுப்பு கொடுக்கப்பட்டது... சம்பவம் நடந்த பிறகுதான் அந்த வழக்கறிஞருக்குப் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில், காவல்துறை தெளிவான விளக்கம் கொடுத்தது, நடவடிக்கை எடுத்தது. சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. பொய் சொன்னது யார் என்பதெல்லாம் மக்கள் மத்தியில் அம்பலமாகிவிட்டது.”

ஆளுநர் மாளிகை

`` `தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம்' என ஸ்டாலின் கேட்கிறார். ஆளுநரால் தி.மு.க-வுக்கு அவ்வளவு லாபமா?”

“தயவுசெய்து ஆளுநரை மாற்ற வேண்டாம் என்பது முதலமைச்சரின் வேண்டுகோள். அது பற்றி நான் எப்படிக் கருத்து சொல்ல முடியும்..? (சிரிக்கிறார்.)”

காயத்ரி ரகுராம்

“உங்களைப்போலவே எஸ்.வி.சேகரும் அண்ணாமலையை எதிர்க்கிறார். ஆனாலும் அடுத்து பா.ஜ.க ஆட்சிதான் அமையும் என்கிறாரே?”

“50 சதவிகிதம்தான் பா.ஜ.க-வுக்கு வாய்ப்பு இருக்கிறது. எஞ்சிய 50 சதவிகித வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்வேன். வடக்கும் தெற்கும் ஒன்றல்ல. பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள் எல்லாமே வேறு மாதிரியாக இருக்கின்றன. தெற்கு பேசும் சமத்துவப் பாதையை வடக்கு புரிந்துகொள்கிறதா என்றே தெரியவில்லை.”

முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடி

“அண்ணாமலைக்கு என்ன பிரச்னை என்றாலும், டெல்லி பா.ஜ.க உடனடியாக ரியாக்ட் செய்கிறதே?”

“அண்ணாமலை பா.ஜ.க-வுக்கு வந்த புதிதில் ‘கோ’ படத்தைப் பார்த்துவிட்டு அதேபோல நடந்துகொண்டார். பிறகு ‘சிங்கம்’ பார்த்துவிட்டு அதுபோல நடந்துகொண்டார். இப்போது ‘காதலன்’ படம் பார்த்துவிட்டு அதுபோல நடந்துகொள்கிறார். ஹீரோவாக வேண்டுமென்று ஆசையோடு இருப்பார்போல... அண்ணாமலையைப்போலவே டெல்லிக்கும் ரீல் ஹீரோக்கள் என்றால் பிடிக்கும்போல. நாம் என்ன செய்வது?”

“அழகப்பனை பா.ஜ.க காப்பாற்றுகிறது என்பது கெளதமியின் குற்றச்சாட்டு. கட்சியில் இல்லாத ஒருவரை பா.ஜ.க ஏன் காப்பாற்றப்போகிறது?”

“பெரிய பின்னணி இல்லாமல் ஏன் காப்பாற்றப் போகிறார்கள்... பா.ஜ.க-வில் இல்லாத ஒருவர், அந்தக் கட்சியின் நிர்வாகிகளோடு எப்படி நெருக்கமாக இருக்கிறார்... உ.பி-யில் பலரைத் தெரிந்துவைத்திருக்கிறார். தமிழிசைக்குத் தெரிந்திருக்கிறது, மத்திய அமைச்சர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அண்ணாமலை மட்டும்தான் தெரியவில்லை என்கிறார். அண்ணாமலை உண்மையான ஐ.பி.எஸ் என்றால் அழகப்பனையும், ஆர்.கே.சுரேஷையும் ஆஜராகச் சொல்ல வேண்டும். அதைவிடுத்து அவர்களைக் காப்பாற்ற முயலக் கூடாது.”

காயத்ரி ரகுராம்

“கொடிக்கம்பப் பிரச்னைக்கெல்லாம் அமர் பிரசாத் ரெட்டியைக் கைதுசெய்திருப்பது நியாயம்தானா?”

“அமர் பிரசாத் ரெட்டியைச் சிறையிலடைக்க வேண்டுமென்றெல்லாம் எனக்கு ஆசை இல்லை. ஆனால், அவர்தானே, `என்னைத் தூக்கிப் பாருங்கள்’ எனச் சவால்விடுத்தார். அளவுக்கு மீறி ஆடிவிட்டார். இப்போது அனுபவிக்கிறார். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைதுசெய்தபோது எப்படியெல்லாம் கிண்டல் செய்தார்கள்... அவருக்கு உண்மையிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டதைக்கூட நக்கல் அடித்தார்களே... இப்போது இவர்களுக்கு நடக்கும்போது மட்டும் வலிக்கிறதா... தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனை அனுபவிக்கட்டும். ஆனால், மனிதத்தன்மை இல்லாமல் கேலி, கிண்டல் செய்வது கூடாது.”

“பனையூரில் எல்லாக் கட்சிகளின் கொடிக்கம்பங்களும் இருக்கின்றன. பா.ஜ.க மட்டும் கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என்பதால்தானே பிரச்னை வந்தது?”

“கொடிக்கம்பம் வைப்பதற்கான நடைமுறைகள் என்னெவென்றுகூட ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவருக்கு தெரியாதா... `மற்ற கட்சிகள் வைத்திருக்கின்றன, அதனால் நானும் வைப்பேன்’ என்று சொன்னால், மற்ற கட்சிகள் மக்கள் விருப்பத்தோடு வைத்திருக்கிறார்கள். பா.ஜ.க வைப்பதற்கு அந்தப் பகுதி மக்களிடம் எதிர்ப்பு வருகிறது. மக்கள் குரலை மதிக்காமல் ஆர்ப்பாட்டம் நடத்தி, ஜே.சி.பி-யை உடைத்தார்கள். அதனால் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.”

அமர் பிரசாத் ரெட்டி - அண்ணாமலை

“பா.ஜ.க பேசுவது இந்துயிசம், மதவாதம், சனாதனம் என்கிறீர்கள், நீங்களும் அங்கே இருந்தபோது அதைத்தானே பேசிக்கொண்டிருந்தீர்கள்?”

“சனாதன தர்மத்தில் எல்லாமே தவறு என்று சொல்லவில்லை. அதில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன. நல்ல விஷயங்கள் எங்கு இருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சனாதனம் எப்படி அரசியலாக முடியும்... அதைவைத்து அரசியல் செய்வது எப்படிச் சரியாக இருக்கும்... நமக்கு இப்போது அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. அதைத்தான் பின்பற்ற வேண்டும். சனாதனத்தில் கூறப்பட்ட நல்ல கருத்துகள் அதிலும் இருக்கின்றன.”



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்