Female condom என்று சொல்லப்படக்கூடிய பெண்ணுறையை எப்படிப் பயன்படுத்துவது என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இந்நிலையில் பெண்ணுறையை உட்செலுத்துதல் மற்றும் வெளியே எடுத்தல் ஆகியவை குறித்த கையாளும் முறையைப் பற்றி சென்னையைச் சேர்ந்த பெண்கள் நல சிறப்பு மருத்துவர் நந்தினி ஏழுமலை விளக்குகிறார்.
``நமது நாட்டில் பெண்ணுறையின் பயன்பாடு மிகவும் குறைந்த அளவில்தான் இருக்கிறது. ஏனென்றால், ஆணுறையைப் போலவே பெண்களுக்கென்று பெண்ணுறை இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதனை எவ்விதம் கையாள்வது என்பது தெரியாததால் பலரும் அதனைப் பயன்படுத்துவதில்லை.
பெண்ணுறை என்பது குழாய் போன்றிருக்கும். அதன் இரு முனைகளிலும் உள் வளையம், வெளி வளையம் ஆகிய இரண்டு வளையங்கள் இருக்கும். உள் வளையத்தை விரல்களில் பிடித்துக் கொண்டு பெண்ணுறுப்புக்குள் நுழைத்து கர்ப்பப்பை வாய் வரை கொண்டு செலுத்த வேண்டும். வெளி வளையம் பெண்ணுறுப்பின் முகப்பில் இருக்கும்.
இன்றைக்கு நாப்கினைப் போலவே டாம்பூன் மற்றும் மென்ஸ்ட்ரேஷன் கப் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே முறையில்தான் பெண்ணுறையை உட்செலுத்த வேண்டும். டாம்பூன் மற்றும் மென்ஸ்ட்ரல் கப் பயன்படுத்துகிறவர்கள் பெண்ணுறையை எளிதாகக் கையாளலாம். அதனைப் பயன்படுத்ததாதவர்களுக்கும் பெண்ணுறை பயன்படுத்துவது கடினமான செயல் இல்லை.
ஆணுறையைப் பொறுத்தவரை உறவு முடிந்த பிறகு விறைப்புத்தன்மை போய்விடும் என்பதால் அதனை உடனே கழற்ற வேண்டியிருக்கும். பெண்ணுறையில் அந்த அவசியம் இல்லை. அதேபோல, உறவுக்கு சில மணி நேரம் முன்னரே செலுத்திக் கொள்ளலாம். பால்வினைத் தொற்றுகளிலிருந்து முழுமையான பாதுகாப்பு அளிக்கும்.
பெண்ணுறையை உட்செலுத்துவதைப் போலவே வெளியே எடுப்பதும் எளிதான செயல்தான். உறவுக்குப் பின் பெண்ணுறைக்குள் தங்கியிருக்கும் விந்து வெளியே சிந்தி விடாதபடி வெளிவளையத்தை முடிச்சு போடுவதைப்போல நன்றாகச் சுற்றிக்கொள்ள வேண்டும் (ஆணுறையையும் அப்படித்தான் சுற்றி முடிச்சு போடுவார்கள்). அதன் பிறகு உள்ளே விரல் விட்டு வெளிவளையத்தைப் பிடித்துக் கொண்டு அதனை உருவி எடுத்துவிடலாம். இதனைப் பயன்படுத்துவது எளிது என்பதோடு பாதுகாப்பு என்பதால் தாராளமாக அனைவரும் பயன்படுத்தலாம்.” என்கிறார் நந்தினி ஏழுமலை.
- ஜிப்ஸி
from Latest news

0 கருத்துகள்